23 November 2011

பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம்

On Wed, Nov 23, 2011 at 9:34 AM, sampath pr <***@gmail.com> wrote:Mr Maamallan

waiting for a full length humour based novel from you . ( Iam sure writer of your sensibility would deliver 'that' with literary flair )

Ref : பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது.
--
"learning is living"
Sampath Padmarajan

அன்பான சம்பத்,

நீ நக்கல் கோஷ்டிதான் என்பது நன்றாகத் தெரியும். அதற்காக இவ்வளவா?

ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் என்று பேர் பண்ணிக்கொண்டிருந்த சிறுகதையும் குறுநாவலும்கூட பதினாறு வருட இடைவெளியில் டச் விட்டுப்போனதால், சுத்தமாக எழுதவே வரவில்லை. இணையத்தில் வந்த எல்லாவனும் நீர்த்துப் போனது போல இவனும் போய்விட்டான். கைத்தட்டலுக்காக கழைக்கூத்தாடத் தொடங்கிவிட்டான். ஹிட்டுக்கு பண் சுமந்து போடும் கோமாளி வேடம் நன்றாக பொருந்திவிட்டது என்று என்னைப் போட்டு என் நலம்விரும்பிகள் சாத்திக்கொண்டிருக்கையில் நீயுமா?

ரஷ்ய கலாச்சார மையத்தில் பிரதான கதவையொட்டி நின்று பார்ப்பவருக்கு, கீழ்நோக்கி இறங்கும் சிவப்பு சரிவின் முடிவில் நிற்கும் மேடையில் போடப்பட்டிருக்கும் போடியத்தின் பின்னால் நின்று பேருரை ஆற்றுபவர் பள்ளத்தாக்கில் இருப்பது போலவே படும். ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது என்று எஸ்.ரா போட்ட தூஸ்ராவில் எழுதிவிட்டேன்.
இதற்கே யார்யாரெல்லாம் என்னை விஜய டி.ஆர் என்று அழைக்கப்போகிறார்களோ என்கிற நினைப்பு நிழலாடியதில் இருந்து வயிற்றைக் கலக்கத்தொடங்கிவிட்டது. இப்போது மணி பத்துதான். பெருங்களத்தூர்தான் போயிருக்கிறது. இந்த ரயிலின் ஓட்டுனர், 5.30 வண்டியை  5.29க்கே எடுத்து கதிகலங்கடிக்கும் அதே அவசரக்குடுக்கை டிரைவராகவே இருக்கவேண்டும், காற்றாகப்போய்க் கொண்டிருக்கிறார் என்றாலும் செங்கல்பட்டு போய்ச்சேர எப்படியும் 10.40 ஆகிவிடும். 10.45வரை கலங்கிய வயிறைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி என்கிற பெருங்கவலையைச் சுமந்தபடி இதை எழுதிக்கொண்டு போவதே ப்ரிய காரியமாய் இருப்பவனிடம்போய் நாவல், அதுவும் நகைச்சுவை நாவல் எழுதச் சொல்வது காருண்யமற்ற செயல் அல்லவா?

நேற்று, யாரிது ஆர்.அபிலாஷா என்று ஊன்று கழியில் லேசாக முட்டுக் கொடுத்து நின்றிருந்த இளைஞரைப் பார்த்துக்கேட்டேன். ஏன் என்றால் ஆர்.அபிலாஷ் என்கிற பெயரைக் கேட்டாலே தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு, தவழக்கூட முடியாமல் தாயின் கரங்களில் கிடப்பவர் என்கிற உருவமே கண்ணில் தோன்றும் அளவிற்கு ஆன்மாவைக் கூவி விற்றவர் என அறம் பாடப்பட்டாயிற்றே.

இந்த வயதிற்குள்ளாகவே தண்டவாளப்பாலத்தில் படியேறும் போது படபடப்பாக வரக்கூடுமோ என்கிற பயத்தில் பக்கவாட்டுப் பிடியைப் பிடித்துவிடக்கூடாதே என்று படுகிற கஷ்டத்தை மறைப்பது பெரும்பாடாக உள்ளது. கூடிய சீக்கிரமே கைத்தடியை ஏந்திவிடக்கூடும். வன்மம் காழ்ப்பு குரோதம் இயலாமை தோல்வியின் சுமை அடுத்தவர் பார்வை நம்மேல் படும் முன்பாக அவசர அவசரமாக அரிதாரம் பூசியாகவேண்டிய அவஸ்தை என்று ஏகப்பட்ட மூட்டைக்ளுடன் வாழ்க்கையைக் கடப்பதுதான் எவ்வளவு சிரமமான காரியம்.

சொல்லவந்தது வேறு. வழக்கம்போல மனம்போன போக்கில் எங்கெங்கோ சுற்றத்தொடங்கிவிட்டேன். மன்னிக்கவும்.

ஏதோ தோன்றியது, ஆர்.அபிலாஷா என்று கேட்டுவிட்டேனா, மனுஷ்ய புத்திரன் அருகில் இருந்த அவர் யாரிது என்று குழப்பமாக என்னைப் பார்த்தார்.

அருகில் இருந்த ஷாஜி கூறினார் மாமல்லன் என்று.

மாமல்லனா இவ்வளவு சாந்தமான முகத்துடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்.

மனுஷ்ய புத்திரனின் குசும்பு ஊரரிந்த விஷயமல்லவா? ஆமாம் கொலைகாரர்கள் எல்லோரும் சாந்தமான முகத்துடனேயே இருப்பார்கள் என்று தர்மார்ச்சனை செய்தார்.

ஒரு கொலைகாரப் பாவியிடம் போய் நகைச்சுவை நாவல் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அதி தீவிர தளத்தில் பள்ளியில் படித்திருப்போமே ரோமானியப்பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்று அது போல இரண்டு சமூகங்களின் தாழ்வு ஏற்றம் திரும்ப தாழ்வு என்று ஒரு காலகட்டத்தையே காலத்தில் உறைய வைத்திருக்கும் தமிழ் நாவலில் நகைச்சுவை எப்படி சிறப்பாக ஒளிர்கிறது என்று வேண்டுமானால் ரப்பரைக் கலைக்கும் பென்சில் என்று எழுதலாம். அதற்கு, முதற்காரியமாக அந்த நாவலைத் தட்டசக் கொடுக்க வேண்டும். அடுத்த காரியம் அதைவிட அசாத்தியமானது. பதிப்பிக்க பதிப்பாளரைத் தேடவேண்டும். எனக்குத் தெரிந்து எவரும் முன்வர மாட்டார்கள். சத்ரபதி வெளியீட்டைத்தான் நாடவேண்டி இருக்கும்.

நாவல் என்ன, நாவலைப் பற்றி நாவல் அளவிற்கு நகைச்சுவையாய் எழுதுவதுகூட நல்ல நாவல் எழுதுவதற்கு ஒப்பானதுதானில்லையா?