நத்தையடிக்கும் படங்களுக்கும் பெரும்பாண்மைக்கும் எப்போதும் ஆவதில்லை. நிதானமாக நகரும் படங்களைப் பார்க்க மனதைத் தயார்படுத்திக் கொண்ட அகிம்சாவாதிகளையும்கூட வன்முறையாளர்களாய் ஆக்கவல்லவை பிரஸ்ஸோ(ன்) மணிகெளல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படங்கள்.
படங்களுக்கும் பார்வையாளனுக்குமான அடிப்படைப் பிரச்சனையே கதையின் மைய இழை என்ன என்பதன் பிடி அவ்வளவு சுலபத்தில் கிடைக்காமல் இருப்பதுதான். உலக வாழ்வை ஒப்பேற்றி முன்னேற, அத்தியாவசியமாகத் தேவைப்படும் காரண-காரியம் சார்ந்த மேலோட்டமான பொதுப்புத்தியைச் சற்றுக் கழற்றி வைத்துவிட்டு பார்க்கச்சொல்லி வற்புறுத்தும் படங்களின் வரிசையில் HADEWIJCH என்கிற இந்தப் படமும் சேரும்.
படம் நிதானமாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அப்படி என்னதான் சொல்ல வருகிறது” நமக்காச்சு இதற்காச்சு என்று இரண்டிலொன்று பார்க்கிறேன் என வைராக்கியத்துடன் உட்காரும் திடசித்தர்களை, பார்க்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே உள்ளே இழுக்த்துக்கொண்டுவிடக்கூடிய படமிது. உட்லண்ட்ஸ் பால்கனியில் க்டைசிவரை இருந்தவர்களின் எண்ணிக்கை பத்திருபதைக்கூடத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகம்தான்.
கிறித்துவம் / கன்னிகையர் மடம் / கடவுள்மேல் தீராத காதல்கொண்ட கன்னிப்பெண் / கன்னிகா மடத்தில் கட்டிட வேலை பார்க்கும் பரோலில் வந்தவன் / கன்னிப்பெண்ணின் வசதியான குடும்பம் / மதநிறுவன நிர்வாகிகளையே கவலைகொள்ளவைக்கும் அளவிற்குக் ‘கடவுளுக்காகத் ’தன்னை’ வருத்திக்கொள்ளும் இளம் பெண் / கடவுளைப் புரிந்துகொள்ள சர்ச்சில் இருந்து ‘உலகிற்குள்’ அனுப்பப்படுபவள் சந்திக்க நேரும் இஸ்லாமிய இளைஞர்கள் / இஸ்லாம் / விமானத்தாக்குதலுக்கு உள்ளாகும் இஸ்லாமியர் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத இடம் / வான்வெளித் தாக்குதலுக்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் / பாரீஸில் வெடிக்கும் குண்டு / கன்னிப்பெண்ணின் தற்கொலை முயற்சி / பரோலில் இருக்கும் குற்றவாளியால் காப்பாற்றப்படுதல் என, இவை எதுவும் இப்படிப் பிரித்துப் பிரித்து சொல்லப்படாமல் காரண-காரியத் தொடர்புகளை விளக்கக் கவலைப்படாமல் காட்சிக்கு அடுத்த காட்சி என தன் போக்கில் சென்றுகொண்டிருக்கும் படம்.
இவையனைத்தையும் நேரடியாய் இணைக்காமல், இணைப்புக் கண்ணிகளை பதித்து ‘கதை’ சொல்ல முயலாமல் எடுக்கப்பட்டிருக்கிற படம்.
இப்படியெல்லாம் படம் எடுக்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கான படம் இல்லை.இப்படியெல்லாம்கூட படங்கள் எடுக்கப்படுகின்றனவா என்று வியப்பவர்களுக்கான படம் இது. பிரமாதம்.
HADEWIJCH / DIR: Bruno Dumont / France / 2009 / 120 Min
***
நேரடியாய் சொல்லப்படும் கதை. குற்றவாளி இளைஞர்களைத் திருத்த அமைக்கப்பட்ட திறந்தவெளி சீர்திருத்த நிலையத்தைத் நிர்வகிக்கும் ’குற்றவாளிகளை’ எதிர்த்து நிகழ்ந்த நிஜ கலகத்தை அடிப்டையாய் வைத்து சாகசமும் நெகிழ்ச்சியுமாய் எடுக்கப்பட்ட படம்.
KINGS OF DEVIL'S ISLAND / Dir: Marius Holst / Norway / 2010 / 120 Min
இடையில் ஒலியின்றி கொஞ்ச நேரமும் திரையில் படமேயில்லாது கொஞ்ச நேரமுமாய் நின்றுவிட, இரண்டுமணி நேரப் படம் எப்படி ஒன்றரைமணி நேரத்தில் முடிந்ததென விதியை நொந்தபடி பலரும் வெளியேறிவிட கடைசி அரைமணி நேரத்தை ஓட்டி முடித்தபடம். உட்லண்ட்ஸ் சிம்பொனியில் இருப்பவர் ’பிட்டு’ படம் ஓட்டக்கூட லாயக்கில்லாத ஆப்பரேட்டரோ என்கிற சந்தேகத்தைத் தெளிவுபடுத்திய நிகழ்வு.
வழக்கமான ஃபிலிம் சொசைட்டி திரையிடல்தான், சென்னை உலக திரைப்பட விழா என்கிற பெயரில் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு நடக்கிறதோ என்கிற சந்தேகத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் உறுதிசெய்துவிடக்கூடும்.
***
நடந்தது ஒரே சம்பவம்தான் என்றாலும் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் பார்வையிலும் எப்படி வித்தியாசப்படுகிறது என்று சொல்லி உலகை வியக்கவைத்த படம் ரோஷமான்.
ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்க நேரும் பாத்திரங்களின் வாழ்வு சோகத்தில் முடிவதை, வெளித்தெரியாத காரண-காரியங்களின் ’அபத்தத்தை’ புத்திசாலித்தனமாய் சொல்லும் படம். செய்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தபடம்.
HEAT WAVE / DIR: JEAN-JACQUES JAUFFRET / FRANCE / 2011 / 92 MIN
திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு http://visitfilms.com/film.asp?movieID=1466
***
இன்றைய தினத்தின் இன்னொரு முக்கியமானபடம் No Return.
குற்றத்திற்கு தண்டனை கொடுப்பது சரிதான். ஆனால் யாருக்கு? சந்தர்ப சூழ்நிலையின் சாட்சியம் எப்போதும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை என்பதற்கு இன்னொரு சாட்சியமாய் அமைந்திருந்தது இந்தப்படம்.
குற்றத்தின் குறுகுறுப்பு சதா உறுத்திக்கொண்டே இருக்கிறது என்றாலும் தண்டனையின் யதார்த்தம் முகத்துக்கெதிரில் நின்று முறைக்கும் தருணத்தில், அதிலிருந்து ‘தப்பிக்க’வே பார்க்கிறது மனிதனின் உள்மனம்..
மன்னிக்கவும் ஆங்கில துணையெழுத்துகளோடான முன்னோட்டப்படம் கிடைக்கவில்லை.
NO RETURN / Dir: Miguel Cohan / Argentina / Spain / 2010 /106 Min
சீன் திருடவந்த இரண்டாந்தர மூன்றாந்தர கோடம்பாக்க சினிமா கோஷ்டிகள், ’பிரமுக’ பந்தாவில், அடுத்தவர்களின் படம்பார்க்கும் அனுபவத்தை சிதைக்கிறோமே என்கிற நினைப்பு கிஞ்சித்துமின்றி, கவட்டையில் சொறிந்தபடி வீட்டுக்குள் நடப்பதுபோல், அந்தப்படம் இன்னா அந்தக்கடி கடிஸ்டான் இதாவுது எப்புடி இருக்குதுன்னு பாக்கலாம் என்று, ஓடிக்குகொண்டிருக்கும் படத்தின் பாதியில் நுழைந்து, இருட்டுக்குள் இடம் தேடி உடகார்ந்து ஆண் பெண் வித்தியாசமின்றி சத்தமாய் சளபுளவென பேசியபடி இருக்கிறார்கள் என்று எவரிடம்போய் புகார் செய்ய முடியும்?
படம்பார்க்கையில் இடையில் வரும் அலைபெசி அழைப்பில் வியாபாரம் பண்ணுகிறவர்கள் போக, தியேட்டருக்குள்ளிருந்து கைபேசியில் அழைத்துப் பேசும் புண்ணாக்குகளுக்கும் குறைவில்லை. இந்த விஷயத்தில் பொண்ணுப் புண்ணாக்குகளும் விலக்கில்லை.
திரையிடப்படும் விழா படங்கள் மட்டுமின்றிக் கதைச் சுருக்கங்கள் கூட தரவிறக்கத் தட்டுப்பாடின்றி கிடைக்கும்போது உலக சினிமா பற்றி ’எழுதி’ புக்குகளாய் அடுக்கும் தமிழ் எழுத்தாளத் திலகம் திரைப்படவிழாவில் கண்ணில்கூடத் தட்டுப்படாததில் ஆச்சரியம் என்ன?
’நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை’ என்று பாரதி சொன்னது, எந்த எதிர்பார்ப்புமின்றி சினிமா என்கிற கலைவடிவத்தைக் காதலிப்பவர்களுக்குகாகவே கூறப்பட்டதோ என்னவோ.