விளிம்பு நிலை மக்கள் என்பதைத் தமிழில் சொல்லிவிட்டு லும்பன் என்று ஆங்கிலத்தில் கூறுவதில் இருப்பது அறிவார்த்தமா? மொழிப் பற்றாமையா? ஆராய்ச்சி செய்வதற்கான டாலர் பற்றாமையா?
இரண்டையும் ஆங்கிலத்தில் கூறமுடியவில்லையா அல்லது தமிழில் சொல்வதில் ஏதும் பிரச்சனை வரக்கூடும் என்று தப்பித்துக்கொள்ளும் புத்திசாலித்தனமா?
லும்பன்கள் என்பவர் யார்யார் அவர்தம் குணாதிசயம் என்ன என்று பட்டியல் இடுவதை ஒரு ப்ராஜக்ட்டாக எடுத்து செய்ய வெளிநாட்டு நிதியத்திற்கான விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறதா?
தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களின் வழக்கு மொழிக்குக் கொடுக்கப்படும் இலக்கிய மதிப்பு மரியாதையை சென்னையின் சேரித் தமிழுக்குக் கொடுப்பதில் மொழியாராய்ச்சி மேதைகளுக்கு ஏன் இந்த இளக்காரப் பார்வை? இது மேட்டிமைத்தனம் இல்லையா? வாகன ஜன்னல்வழிப் பார்வையில் இது கலாச்சார சீரழிவாகப்படுகிறதோ? அடுத்தவன் வாழ்நிலையை கீழாகப்பார்ப்பது பிராமணீய பிள்ளைமாரீயமில்லையா? வேறு எந்த வட்டார வழக்கேனும் இப்படி கீழான பார்வையுடன் கிண்டலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? இல்லை சென்னைதமிழ் பேசுவோர் மக்களே இல்லையா? தமிழகத்தின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் பட்டியல் இனத்தோரின் பெரும்பாண்மை, செங்கை மாவட்டத்தில் வாழ்வதும் பொதுவாகவே செங்கை மக்களின் மொழிவழக்கு சென்னையின் சேரித் தமிழுக்கு நெருக்கமாக இருப்பதும்கூட கீழான பார்வைக்குக் காரணமாக இருக்குமோ?