03 February 2012

ரஜினி அவர்களுக்குப் பாராட்டு விழா

கலைஞர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதுதான் உலகம் முழுமையும் நம்பும் பொதுக் கருத்து. ஆனால் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய சாதனைகளைப் பாராட்டுவதைவிடவும் ஒருபடி மேலே போய், உச்ச நட்சத்திரத்தைப் உச்சி குளிரப் புகழ, உலக இலக்கிய வாசிப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்த்தியது இந்த விழாவின் இன்னொரு சிறப்பு.

***

ஒரு உலக இலக்கிய எழுத்தாளரின் கதை மேடையில் சொல்லப்பட்டது. 

ஒரு ஊரில் ஒருதாய் இருந்தாள் அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது. தாய் ஏதோ வேலையாய் குழந்தையைவிட்டு விலகியிருந்த நேரத்தில் அந்த ஊரில் இருந்த ஒரு எமன் அந்தக் குழந்தையின் உயிரைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். குழந்தையைக் காணாத தாய் அந்த எமன் பின்னாலேயே ஓடுகிறாள். ஒரு தருணத்தில் சட்டென எமன் மறைந்துவிடுகிறான். 

என்ன செய்வது என்று தவித்த தாயிடம் ஒரு முள்செடி சொல்கிறது உன் குழந்தையைப்போல எண்ணி என்னைத் தழுவிக்கொண்டால் எமன் இருக்கும் இடத்தை நான் சொல்லுவேன். தாய் முள்செடியைத் தன் குழந்தையைப்போல் தழுவி  முத்தமிடுகிறாள். உடலெல்லாம் முள் கிழித்து ரத்தம் வடிகிறது. 

அதைப் பார்த்து நெகிழ்ந்த முள்செடி, நேராகப்போனால் ஒரு கிணறிருக்கும் அதைத் தாண்டி நேராகச் சென்றால் எமனுடைய வீடு வரும் என்கிறது 

ரத்தம் வடிய எமனிருக்கும் இடம்தேடி தன் குழந்தைக்காகச் சென்றுகொண்டிருந்தவள் தூர்ந்துபோன கிணற்றைத் தாண்ட நேர்கையில் கிணற்றிலிருந்து குரல் கேட்கிறது. 

அள்ள அள்ள எல்லோருக்கும் நீரை வாரி வாரிக் கொடுத்தவன் நான். இனி உபயோகமில்லை என்றதும் மனிதர்கள் என்னை உதாசீனப்படுத்திவிட்டார்கள். நான் தூர்ந்துபோய்விட்டேன். நீ உனது கண்ணீரால் என்னை நிரப்பினால் நான் எமன் இருக்கு இடத்திற்கு வழி சொல்கிறேன் என்றது.

(ஏற்கெனவே முள்செடி வழி சொன்ன எமனிருக்கும் இடத்திற்கு எத்துனை பேர் எத்துனைமுறை வழி சொல்வார்கள் என்றேல்லாம் கேள்வி கேட்காமல் உலக இலக்கிய உபன்யாசம் கேட்க வேண்டும்)

அந்தத்தாய் கிணற்றுக்குள் அழுது தன் கண்ணீரை விடவும் கிணறு சுரக்கத்தொடங்கியது. நேராகப்போனால் எமனிருக்கும் இடம் என்று வழியைச் சொல்லுகிறது.

குழந்தையைத் தேடி, குழந்தையின் உயிரை வைத்துக்கொண்டிருக்கும் எமனைத் தேடி அந்தத்தாய் உடலெல்லாம் ரத்தம் வடிய அழுத கண்ணீர் வழிய சென்று கொண்டிருக்கையில் ஒரு கழுகு குறுக்கிடுகிறது.

உன் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுத்தால் அதை சாப்பிட்டுவிட்டு எமனிருக்கும் இடத்தை சொல்வேன் என்கிறது. (ஏற்கெனவே இரண்டுமுறை எமனிருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட அந்தத்தாய் இன்னொருமுறை கழுகிடம் கேட்கவே இல்லையே அவளுக்கு அப்ப்டியான அவசியம் ஏதும் இல்லையே என்றெல்லாம் கேட்கக்கூடாது. பாராட்டு விழா என்றால் என்ன  சும்மாவா?)

தாய் தனது கண்களைப் பிடுங்கிக் கொடுத்து விடுகிறாள். கழுகும் அதை , எதை? கண்களையா? (கதையைக் கேட்காமல் ஒருமை பன்மை பார்த்துக்கொண்டிருக்கலாமா? கழுகுக்கென்ன பெரிய இலக்கணக் கவலை) கண்ணை சாப்பிட்டுவிட்டு எமனிருக்குமிடத்திற்குக் கழுகு வழிசொல்கிறது. நேராகப்போ அங்கே ஒரு தோட்டமிருக்கும் அங்கே தான் எமன் இருக்கிறான் என்கிறது.

ரத்தம் வடிய அழுகை வழிய கண்களும் இல்லாத தாய் (சிவாஜி அவர்களின் கருப்பு வெள்ளைப் பாவன்னாப் படங்கள் எவருக்கேனும் நினைவுக்கு வந்தால் அதற்கெல்லாம் உலக இலக்கியம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?குழந்தையைத் தேடிக்கொண்டு இரண்டு கண்களும் இல்லாத தாய் எமன் இருக்கும் தோட்டத்திற்குச் செல்கிறாள். 

அவளைப் பார்த்த எமன் சொல்கிறான். இந்தத்தோட்டத்தில் நான் பறித்துவந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் செடிகளாக உள்ளன. உன் குழந்தையின் உயிர் இந்த செடிகளில் ஏதோ ஒன்றில் ஒரு மலராய் இருக்கிறது. அதைப் பறித்தால் உன் குழந்தை கிடைத்துவிடும் என்கிறான்.

ரத்தம் வடிய அழுத கண்ணுடன் கண்களே இல்லாத தாய் கொஞ்சமும் தயங்காமல் நேராகச் சென்று ஒரு செடியில் இருந்த ஒரு பூவைப் பறிக்கிறாள். அவள் குழந்தை கிடைத்து விடுகிறது.

ஆச்சரியத்துடன் அவளிடம் எமன் கேட்கிறான். எப்படி அவ்வளவு சரியாக அந்தப் பூவில்தான் உன் குழந்தையின் உயிர் இருக்கிறது என்று எப்படித் தெரிந்தது?

ஒரு தாய்க்கு தன் குழந்தை எதுவென்று அடையாளம் தெரியாதா?

கதை முடிந்துவிட்டது. ஆனால் பாராட்டப்படும் உச்ச நட்சத்திரத்திரத்திற்கு எங்கே உலக இலக்கியத்தின் ‘செய்தி’ புரியாமல் போய்விடுமோ என்று எழுத்தாளர் வியாக்கியானம் செய்து தம் உரையை முடித்தார்.

***

சும்மா சொல்லக்கூடாது. ரஜினிக்கான பாராட்டு விழாவிற்கு காமராஜர் அரங்கில் நல்ல கூட்டம். எக்ஸைல் விழாவுக்கு வந்த கூட்டத்தைவிட அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதே போல் காலியாய் இருந்த இருக்கைகளும் எக்சைல் வெளியீட்டு விழாவைவிட கனிசமான அளவிற்குக் குறைவு.

***

ஏன்தான் ’வெற்றி’பெற்றவர்களைப் பார்த்து சந்திரபாபுவுக்கு வயிற்றெரிச்சலோ தெரியவில்லை வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை என்று பாடி வைத்த்துவிட்டுப்போனாரோ. போதாக்குறைக்கு இப்படியான சர்வதேச முகூர்த்தம் வெற்றி‘கரம்’மாய் இனிதே நடந்து முடிந்திருக்கையில் ஏதோ ஒரு வயிற்றெரிச்சல் பார்ட்டி இப்படி ஒரு மெய்ல் அனுப்பி இருக்கிறது. இதைப் பிரசுரிப்பதா இல்லையா என்று சற்றே குழப்பமாக இருந்தது. என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமில்லையா எனவே பிரசுரிக்க முடிவுசெய்ய வேண்டியதாகிவிட்டது.

*****************************************************

தமிழில் ஒரு குழு நம் மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து மூலத்துடன் ஒப்பிட்டு மதிப்பிட்டுக்கொண்டிருந்தால், நாம் எவ்வளவு தாழ்வான பணிகளை வெட்கம், மானம் இல்லாமல் இலக்கிய வளர்ச்சி என்ற முகமூடியின் துணையோடு செய்து வருகிறோம் என்பது வாசகர்களுக்குத் தெரியவரும். மூலமொழியிலும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் பிடிப்பில்லாதவர்களும் தனது மேதாவிலாசம் அசிரத்தையாகச் செயல்படும்போதும் துல்லியத்தை இழக்காது என்ற அகங்காரம் கொண்டவர்களும் மொழிபெயர்ப்புகள் மூலம் செய்துவரும் அட்டூழியத்தை வாசகர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப்பார்க்கும் பணியை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஈடுபாடுகொண்ட என் நண்பர் செய்ய முற்பட்டதன் விளைவாக நம் பிரபலஸ்தர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளில் சில பிழைகளைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டிருக்கிறார். அதில் ஒன்று: He gave a ten rupee note என்ற வாக்கியத்தை, புதுமை இலக்கியங்களில் திளைப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஓர் எழுத்தாளர் ‘அவன் ஒரு பத்து ரூபாய் நோட்டையும் ஒரு குறிப்பையும் கொடுத்தான்’ என்று மொழிபெயர்த்திருப்பது. இது சறுக்கல் அல்ல. பொறுப்பின்மை. 

இந்தப் பின்னணியில்தான் ஆர். சிவகுமாரின் மொழிபெயர்ப்பை வாசகர்களிடம் அறிமுகப்படுத்துவதில் சிறிது உற்சாகம் ஏற்படுகிறது. இது சிரத்தையாகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்பதால் தமிழில் மிக அபூர்வமான ஒரு வஸ்து. இவரது பிற மொழிபெயர்ப்பு நூல்களையும் வாசகர்கள் படித்துப்பார்க்க வேண்டும்.

- சுந்தர ராமசாமி 
‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ பக் - 82.
காலச்சுவடு வெளியீடு 2004.