On Wed, Feb 22, 2012 at 8:30 PM, Anandh Kumar <***@gmail.com> wrote:
அன்புள்ள மாமல்லன்,
'சிறுமி கொண்டுவந்த மலரி' லிருந்து உங்கள் எழுத்துக்களை தீவிரம்மாக படித்து வருகிறேன் (இதுவரை வலைப்பக்கத்தில்தான்) நேற்று தங்கள் வலைப்பதிவில், 'ரோஸ் மில்க்' படிக்க நேர்ந்தது. அருமையான விவரிப்பு. ஆனால் கடைசியில் ஒரு சிறு குழப்பம். நான் அந்த காட்சிக்குள்ளேயே இருந்ததால் அந்த இல்லாத வரி சரியான நேரத்தில் என்னை கொஞ்சம் அந்நியாமாக்கிவிட்டது.
நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது, இவன் ஏகே-47 காரனை கடந்து, மூடப்பட்டுக்கொண்டிருந்த கடை நோக்கி செல்கிறான். கடைசியில் தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஏகே 47 காரனை பாட்டி அழைக்கிறாள், ஆனால் அவன் எப்போது நடந்து அருகில் வந்தான் என விவரிக்கவே இல்லை. என்னை சட்டென்று இந்த காட்சி கதையிலிருந்து அந்நியப்படுத்திவிட்டது.
"கையைக் காட்டி ஏகே47ஐ அழைத்தார் பாட்டி. அவன் வேறு யாரையோ அழைப்பது போல கவனிக்காது இருந்தான்.
அட வாய்யா கூச்சப்படாதே என்பதுபோல் பாட்டி கூப்பிட்டார்.
அவன் லஜ்ஜையுடன் சிரித்தபடி வேண்டாம் என்றான்.
விஷமொன்றும் கலக்கவில்லை. இவருக்குக் கொடுத்ததைத்தான் உனக்கும் கொடுக்கிறேன் கடை மூடும் நேரம் வா குடி என்றார்.
குழந்தைமுக வீரன் டம்ளரைக் கையில் எடுத்துக் குடிக்கத்தொடங்கினான்."
நான் ஏதும் இங்கு தவறாக சுட்டிக் காட்டுகிறேனா? இது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு அத்தியாயம் என்பதால் இதை சுட்டுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆனந்த்
***
<நாவலின் ஒரு அத்தியாயம்> என்றுதான் இல்லை. நாசமாய்ப் போகத்தக்க சண்டைப் பதிவாக இருந்தாலும் குறைகளை சுட்டிக் காட்டலாம். காரனம் அவற்றையும் நான் அதே தீவிரத்துடன்தான் எழுதுகிறேன். ஆகவே என்னிடம் நடக்கும் ப்ரூஃப் ரீடிங் என்னை இன்னும் கூர்மையாக்கும் என்றே நம்புகிறேன்.
குறையைச் சுட்டிக்காட்டுபவனை, கைநீட்டி அவதூறு செய்கிறான் என்றோ, வேலையில் குறை சொல்லி என்னை மிரட்டுகிறான்,சோற்றிலே மண் அள்ளிப்போடப் பார்க்கிறான் என்று பொய்யான பிலாக்கணம் வைக்கமாட்டேன் அல்லது ஐயையோ கொல்றாங்களே கொல்றாங்களே என டப்பிங் குரலில் உடான்ஸ் ஆடமாட்டேன். குறைகளைச் சுட்டுபவர்களை கிழட்டு மூடத்தனத்துடன் ப்ரூஃப் ரீடர்கள் என்று இழித்துரைக்கவும் மாட்டேன்.
ரோஸ் மிலக் எப்படித் தொடங்குகிறது?
<முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.>
< தோன்றியது> யாருக்கு என்று சொல்லப்பட்டிருக்கிறதா?
யாரோ ஒருவருக்கு என்பது (சொல்லப்படாமல்) தொக்கி நிற்கிறது.
இங்கு சொல்லப்படாத தகவல் உங்களை அந்நியப்படுத்தாதது என் அதிருஷ்டம். பல பத்திகள் கழித்துதான் பாத்திரத்தின் பெயரே சொல்லப்படுகிறது.
ஆனால் கதையின் விவரிப்பு முழுக்க அந்த பாத்திரத்தின் ’பார்வை’யிலேயே சொல்லப்படுகிறது.
பார்வை என்பதைப் அந்தப் பாத்திரமெ பார்த்தது என்கிற பொருளில் நேரடியாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இப்போது, உங்களை ’அந்நியமாக்கிய’ இறுதிப் பகுதிக்கு வருவோம்.
உங்கள் பிரச்சனை, தொலைவில் இருக்கும் ஏகே 47 வீரனைப் பாட்டி அழைக்கிறாள். அவன் நடந்து வரும் ஷாட் எழுதப்படவில்லை என்பதுதான் இல்லையா?
சரி கதையின் இறுதிப் பகுதி எப்படித் தொடங்குகிறது?
<இருட்டுச் சந்து எங்காவது போய் சிகரெட் பிடிக்கவேண்டி, பொற்கோவில் வளாகத்தை விட்டு அந்த இரவில் தெருவிற்கு இறங்கியதும் எதிரில் தெரிந்தது, யாருமற்ற இருட்டில் ஏகே 47ஐத் தோளில் மாட்டியபடி உலாத்திக்கொண்டிருந்த வீரரும், சற்றுத்தொலைவில் அடைக்கப்பட்டுக்கொண்டிருந்த,பாதியாய்த் தெரிந்த கடையில், பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக்கொண்டிருந்த பெண்மணியும்தான்.>
நர்சி என்கிற பாத்திரத்தின் பார்வையில்தான் எதிரிலிருக்கும் காட்சி தெரிகிறது.
<ரோஸ்மில்க் நல்ல திடத்தில் இருந்தது. உயரமான டம்ளரில் கொடுக்கப்பட்டதைக் குடித்தபடி பக்கவாட்டில் பார்த்தான். சற்றுத் தொலைவில் துப்பாக்கிக் குழந்தை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தான் பார்ப்பது தெரிந்ததும் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். நாயொன்று வந்து வாலாட்டிவிட்டுக் கடந்து சென்றது.>
சரி சம்பவத்திற்கு வருவோம்.
<குடித்துவிட்டு டம்ளரையும் காசையும் கொடுக்கப்போக, அதைக் கண்டுகொள்ளாமல், கீழே வைத்த டம்ளரில் பாட்டி திரும்பவும் ரோஸ் மில்க்கை ஊற்றுவதைப் பார்த்துப் பதறியவனாய் வேண்டாம் வேண்டாம் என்றான் நர்சி.
அட சும்மா குடியப்பா என்பது போல் அதட்டினார் பாட்டி.
கூச்சத்துடன் மூச்சு வாங்கக் குடிக்கத் தொடங்கினான். ரோஸ்மில்க் பாத்திரத்தைக் கையில் எடுத்து இன்னொரு லோட்டாவில் ஊற்றி, கையைக் காட்டி ஏகே47ஐ அழைத்தார் பாட்டி.>
நர்சி, பாட்டிக்கு எதிரில் இருப்பதால் பாட்டி ஏகே 47னைத்தான் அழைக்கிறாள் என்பது ஊகத்தில் தெரியும் ஆனால் நர்சி திரும்பிப் பார்த்தான் என் எழுதப்படவில்லையே இருந்தும்
<அவன் வேறு யாரையோ அழைப்பது போல கவனிக்காது இருந்தான்.>
இது எப்படி நர்சிக்குத் தெரியும்? இங்கே அவன் திரும்பிப் பார்த்தான் - மாதிரியான வரி இல்லாதது உங்களை அந்நியப்படுத்தி இருக்க வேண்டுமே?
அட வாய்யா கூச்சப்படாதே என்பதுபோல் பாட்டி கூப்பிட்டார். இது நர்சிக்குத் தெரியும் ஆனால்,
<அவன் லஜ்ஜையுடன் சிரித்தபடி வேண்டாம் என்றான்.>
நர்சி திரும்பிப் பார்த்தான் என்கிற வரி இல்லையே? இருந்தும் இது எப்படி நர்சிக்குத் தெரிந்தது என நீங்கள் ஏன் அந்நியப்படவில்லை?
அது போலவே ஏகே 47 நடந்து பாட்டியிடம் வந்து சேர்வதும் வார்த்தைகளில் நடக்காமல் கதையில் நடக்கிறது.
எல்லா காட்சிகளும் தொடர்ச்சியாய் ஒரே ஷாட்டில் இருக்க இது வாழ்க்கையில்லை கலை.இதில் காட்டவேண்டியது எது உணர்த்தபடவேண்டியது எது காட்டாமலே புரிந்துகொள்ளப்படவேண்டியது எது என்பது படைப்பாளியின் தேர்வு. பொழுதைப் ’போக்க’ படிக்க வரும் மட்டிக்கும் ’கதை’ புரிய வேண்டும் என்று மெனக்கெடுபவன் வணிக எழுத்தாளன். தான் சொல்வதை எவ்வளவு செறிவாக சொல்ல முடியும் என்பதிலேயே தன் கவனத்தைக் குவிப்பவன் கலைஞன்.
சொல்லப்படாத பகுதிகளிலும் தேர்ந்த வாசகனின் மனதிற்குள் கதை ‘நடந்து’ கொண்டுதான் இருக்கிறது.
<அவன் வேறு யாரையோ அழைப்பது போல கவனிக்காது இருந்தான்.>
<அவன் லஜ்ஜையுடன் சிரித்தபடி வேண்டாம் என்றான்.>
மேற்கூறிய இரண்டு இடங்களில் தங்களிடமே இது நிகழ்ந்துள்ளது என்பது உங்களுக்குப் பிடிபடுகிறதா?
செலெக்ஷன்னு வரச்சையே எடிட்டிங் வந்துட்றதே ரியலா நடந்ததைத்தான் எழுதறேன்னு எப்டி சொல்ல முடியும் என்று நேர்ப்பேச்சில் சொன்னார் சுஜாதா இந்தாளைப்போய் ஒண்ணுமில்லேன்னு சொல்லமுடியுமா என்று 82ன் காவிப்பயணத்தில் சுராவிடம் மல்லுக்கட்டினேன். அவர் புத்திசாலியில்லேன்னு நான் சொல்லலியே. ரொம்ப புத்திசாலினுன்னா சொல்றேன். புத்திசாலித்தன்த்துக்கும் ஆர்ட் அண்ட் லிட்டரேச்சருக்கும் என்ன சம்மந்தம் என்றார்.
மேற்படி உரையாடல் என்ன சொல்ல வருகிறது என எவருக்கேனும் குழப்பமாக இருக்குமேயானால் இன்றைக்குத் தின்றது செரித்தது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.