சிலும்பியிலிருந்து உள்ளே போய் வெளியேறிய புகைமண்டலம் அந்த மாடி அறையையே கந்தர்வலோகமாய் ஆக்கிக்கொண்டிருந்தது. சிரிப்பும் கும்மாளமுமே அந்தப் பிராந்தியத்தின் தேசிய கீதம். அங்கே எவர் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கிண்டலடித்துச் சிரிக்கலாம். பிரதான தெய்வத்திற்குப் பிடித்தது எது பிடிக்காதது எது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமே அவசியம்.
ஸ்தல தெய்வம் குபீரென சிரித்தது.
சுற்றியிருந்தோரில் சிலர் என்ன என்ன என்றார்கள். சிலர் சும்மா சிரித்து வைத்தார்கள்.
இல்லே நம்ப ஆலமர சாமியாரை நெனச்சிகிட்டேன் சிரிப்பு வந்துடிச்சி.
சொல்லுங்க சொல்லுங்க
சாமியாருக்கு எதைப் பத்தியும் கவலை யில்லை. கோமணம் மறைச்சிருக்கா வெலகியிருக்கான்னுகூடக் கவலையில்லாத கட்டை. ஐயோ பாவம் ரொம்நாளாச்சேன்னு எவனோ ஒருத்தன் பக்கத்துல ஒக்காந்து அடிச்சி விட்டுகிட்டு இருப்பான். சாமியாருக்கு அதப்பத்தியும் கவலையில்லை. அதுக்கும் கிகிபுகின்னு ஒரு சிரிப்பு. சிலும்பிய வாயில வெச்சா இழுத்து குப்புனு வுடுவாரு. தன் ஒடம்பே வேற எவனோடதோங்கறாப்புல இருந்த சாமியார் அவுரு.
இந்தக் கதை நடந்த காலம் எப்பொதோ யாருக்குத் தெரியும். அது கிடக்கட்டும். நடந்த கதையை சொல்லக்கேட்டே கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஓடிவிட்டன. கஞ்சாப்புகை சிகரெட்டாகிவிட்டது. இந்திய வோட்கா என செல்லமாக அழைக்கப்பட்ட லோக்கல் சாராயம் ரெமி மார்ட்டினாகிவிட்டது. ஸ்தல தெய்வமும் சாமியாரும் இரண்டறக்கலந்து கோவணம் களைந்து ஜீன்ஸ் டீஷர்ட்டாக மாறவும் ஆலமரத்தடி வட்டமாகிவிட்டது. ஆனாலும் இணைய மரத்தடி வட்டத்தில் அதே அடித்துவிடும் அற்புதக் காட்சி.
ஒரே வித்தியாசம், அப்போது சாமியாருக்கு எவனோ ஒரு சிஷ்யன் அடித்து விட்டான். இப்போது குஞ்சுகளை வட்டமாக உட்காரவைத்து பழைய சொய்யா உருண்டையை எடுத்து விவாதம் என்கிற பெயரில் உருட்டியபடி,குரு ஒவ்வொன்றுக்காய் அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்.
உலகம் கெக்கெக்கே என கரம்கொட்டிச் சிரிக்கிறது. சிரிப்பாய் சிரிக்கிற வாழ்வில் எவன் சிரித்தால் யாருக்கென்ன?