03 March 2012

பாகிஸ்தானுக்கு ஆதரவாக விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்பாட்டம்

ஆர்.எஸ்.எஸ் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மற்றும் இந்திய  தேசாபிமான அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றன என்றால்,இந்துக்களின் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்திய தேசத்திற்கு எதிரான காரியங்கள் ஏதேனும் நடந்திருக்கும் என்பதுதான் இதுவரையில் அவர்கள் உருவாக்கியிருந்த பிம்பம். 

ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவான போராட்டத்திலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்பதை நேற்று நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.இதை முழுவதும் படிக்கும் அளவிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் வீரர்களுக்குப் பொறுமையும் புரிதலும் இருக்கும் என்கிற நம்பிக்கையில்லை என்றாலும் எதிரில் இருப்பவனுக்கு செவிப்பறை இருக்கிறதோ இலையோ ஊதுகிற சங்கை ஊதி வைப்பதுதானே எழுத்தாளனின் கடமை.

நேற்று சண்டிகரில், ஒஸாமா பின்லேடன் பற்றிய பட ஷூட்டிங்கில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதற்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.


ஒஸாமா பற்றி அமெரிக்க ஹாலிவுட்காரர்கள் சிறந்த பாகிஸ்தானிய தேச பக்தர் என்றா படம் எடுக்கப்போகிறார்கள்? தீவிரவாதி என்றுதானே காட்டப்போகிறார்கள். தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று காட்டுவது விஷ்வ ஹிந்து பரிஷத் கொண்டிருக்கும் கருத்துக்கு ஆதரவானதுதானே? 

ஒஸாமா பற்றிய படத்தை அவர் பதுங்கி வாழ்ந்த அபொட்டாபாதில் எடுக்க பாகிஸ்தான் அனுமதிக்காது, இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தீவிரமான எதிர்ப்பு வரும் என்பதால்தானே ஹாலிவுட்காரன், அந்த சாயலில் சண்டிகரில் இருக்கும் மணிமஜ்ரா என்கிற சிற்றூரில் செட் போட்டிருக்கிறான். கடைகளின் பெயர்ப் பலகைகளை அபொட்டாபாதில் உள்ள கடைகளின் சாயலிலேயே வடிவமைக்க முற்பட்டிருக்கிறான். பாகிஸ்தான் எப்படி தீவிர வாதத்திற்கு உதவுகிறது என்கிற கருத்தைத்தானே ஐயா படமாக்க முற்பட்டிருக்கிறான்? அதை முடிந்தவரை ஆதாரபூர்வமாய் அசலாகக் காட்டுவதற்காகத்தானே இந்தியாவை நாடி வந்திருக்கிறான். அப்படி வந்திருப்பவன் ஹிந்து தீவிரவாதிகளான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் விருந்தாளி இல்லையா? ஐயா விஎச்பிக்காரர்களே, உங்கள் கருத்தை உலக அரங்கில் சொல்பவனுக்கு நீங்கள் தரும் உபசரிப்பு இதுதானா?

அதெல்லாம் தெரியாது பாகிஸ்தான் கொடியை இந்த மண்ணில் இந்து மண்ணில் இந்திய மண்ணில் ஏற்றுவதா? விடமாட்டோம் விடமாட்டோம் என்கிறது விஎச்பி. 

இப்படியே போனால் வெறும் ஒழிக ஒழிக என்று மட்டுமேதான் எதிர்காலத்தில் சொல்ல வேண்டியதாகிவிடும். பாகிஸ்தான் ஒழிக என்றால் கூட பாகிஸ்தான் என்கிற வார்த்தையை சொன்னதாக ஆகிவிடுமே.

பள்ளிக்காலத்தில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை, எல்லாமே ஊருதான் எல்லோரும் கேளுங்கள் என்றுதான் புரிந்துகொண்டிருந்தோம். ஆசிரியர் சுளுக்கெடுத்து சொல்லிக்கொடுத்த பிறகுதான் உண்மையான அர்த்தம் புலப்பட்டது.

வடமொழியில் வசுதேவ குடும்பகம் என்றால் ஒட்டுமொத்த பூமியும் ஒரு குடும்பம் என்பதுதான் பொருள் ஆனால் விஎச்பியோ, வசுதேவ குடும்பகம் என்பதை வசுதேவரின் குடும்பம் என்று சுளுக்காகப் புரிந்துகொண்டிருக்கிறது போலும்.