05 March 2012

விருதுன்னா சும்மாவா?

இன்று காலையில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தபோது, இணைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி, உங்கள் நண்பருக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருக்கிறது, நீங்கள் சொல்லவே இல்லையே என்றாள்.

யாருக்கு? எனக்கேத் தெரியாதே என்றபடி வாங்கிப் பார்த்துவிட்டு, அவனை அலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

அப்படியா பத்திரிகையில் வந்திருக்கிறதா? உறவினர் வீட்டுப் பூணூலுக்காகப் போய்க்கொண்டிருக்கிறேன் இன்னும் பத்திரிகை பார்க்கவில்லை, அது 24ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 24அன்று காலையில் நீ ரயிலில் சென்றபடி அழைத்தபோது இதற்கு வாழ்த்து தெரிவிக்க அழைக்கிறாய் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் நீயோ திருச்சி உமாபதியின் இறப்புச் செய்தியைத் தெரிவித்தாய். அந்தத் தருணத்தில் இதை எப்படிச் சொல்வதென்று சும்மா இருந்துவிட்டேன்.

நீ திரும்ப எழுத ஆரம்பித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி, அவ்வப்போது படிக்கிறேன், ரொம்பவெல்லாம் புரிகிறது என்று சொல்ல மாட்டேன், சமயத்தில் கோட்வர்ட் எல்லாம் போட்டு எழுதுவது யாரையென்றெல்லாம் புரியவில்லை என்றான்.

எம்டிட்ரம்மா?

ஆமாம்

ரொம்ப அவசியம். அதோட ஒரிஜினல் பேரைச் சொன்னால் மட்டும் உனக்குத் தெரிந்துவிடப்போகிறதா? இண்டர்நேஷணல் லெவலில் வாய்கிழியப் பேசும் லோக்கல் முதலை. அது கிடக்கட்டும். 79 கோடி எந்தக் கம்பெனி?

பெயரைக் கூறினான்.

அதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். கேஸ் என்ன?

கொஞ்சம் சிடுக்கானது. இறக்குமதி...

மோசடியின் மோடஸ் ஆப்பரேண்டி என்ன?

மோசடி என்று சொல்ல முடியாது...

போதுண்டா நியாயஸ்தா. அப்படியே கோர்ட்டில் பேசுவது போலவே சொல்லவேண்டும் என்று இல்லை. சும்மா சாதாரனமாகச் சொல்லு.

ஏய் எழுதிகிழுதித்தொலைக்காதே.

அடச்சீ அப்படியே எழுதுவேனா?

அவ்வளவுதான். உஷாராகிவிட்டான். எங்கே தனது குடுமி மாட்டிக்கொண்டுவிடுமோ என்று தப்பித்தோம் பிழைத்தோமென, டேய் சிக்னல் கட்டாகுது நானே அப்பறமாக் கூப்புடுறேன் என்று ஓடியே விட்டான்.

இன்னொருவனை அழைத்து விசாரித்தேன்.

என்னடா அவன் பேயக் கண்டவனாட்டம் ஓடறான்.

பின்ன. நீ பாட்டுக்கும் எல்லாத்தையும் நெட்ல எழுதிவுட்டுட்டேனா?

டேய் என்னடா ஆயிடும்? பார்ட்டியே பண்ணின தப்பை ஒத்துகிட்டு தானே மச்சி அவ்ளோ பணத்தையும் திரும்பக் கட்டியிருக்கான்.

நீ சண்டைக்கினே பொறந்தவன். அவன்லாம் அப்பிடியாடா? உங்கிட்டப்போயி வாயைக் குடுத்தோமேன்னு இன்னிக்கி ராத்திரி அவனுக்கு ஜன்னியே வந்துரும் பாரு. எதுக்கும் நாளைக்கிக் காத்தால ஆபீஸ் வந்ததானான்னு ஃபோன் பண்ணி செக் பண்ணிக்க மச்சி.

ரொம்ப ஓட்டாத மச்சி. மேட்டரை சொல்லு. 

என்னைவிட அவுருக்கு இன்னும் டீடெய்லா தெரியுண்டா அவுரைக் கேளேன்.

டேய் எவன் பேரையும் கோட் பண்ணமாட்டேண்டா. சொல்லுடா.

மச்சி, நார்மலான ஜனங்கன்னா, ஒழுங்கா இருக்கற நூல்கண்டை, எவ்ளோ தேவையோ அந்த அளவுக்கு அவுத்து எடுத்துகிட்டுத் திரும்ப எடுத்த எடத்துலையே வெச்சிரும். ஆனா நீ என்னா செய்வே?. வெளில ஒழுங்கா சுத்தியிருக்கறா மாதிரித் தெரியுதுங்கறதாலயே, நூலோட பிகினிங்கும் சரியாதான் இருக்கும்னு எப்பிடி நம்பமுடியும்னு சொல்லி, நூல்கண்டை அவுப்ப. ரெண்டாவுது மூணாவுது லேயர்லையே அது கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கும். பாத்தியா நாம்ப நெனச்சது சரிதான்னு உனக்கு குஷி புடுங்கிக்கும். கரகரன்னு நூல்கண்டை அவுத்துக்கிட்டேப் போவ. கை வலியப்பத்தியோ கழண்டுவிழற நூலைப்பத்தியோ உனக்குக் கவலையே இருக்காது. வெறி பிடிச்சாப்புலப் போயி உள்ள வெச்சிருக்கிற பேப்பரே கசங்கின குப்பைனு  பெரிய கண்டுபிடிப்பு மாதிரி சொல்லுவே. திரும்ப மொதல்லேந்து எடுத்து ஒழுங்கா சுத்தறேன் பாருன்னு ஆரம்பிப்பே. பக்கத்துலப் பாத்தா, அதுக்குள்ள கழட்டிப்போட்ட நூலு மொத்தமும் சிடுக்காயிட்டிருக்கும். அது என் தப்பான்னு வேற ஆர்க்யூ பண்ணுவே.அப்பறம் எவனாலையுமே எடுக்க முடியாத சிடுக்கை உசுரைக்குடுத்து எடுக்கக் காலைப் பரப்பிகிட்டு ஒக்காந்துருவே.

டேய் மேட்டரைத் தெரிஞ்சிக்க உங்கிட்ட வந்து மாட்டிகிட்டேன்ட்டு இந்த ஓட்டு ஓட்டறியா மவனே உன்னை வெசுக்கிறேன்.

அப்பிடி இல்லை மச்சி இதுவே நாங்கன்னா, நூல்கண்டு நடுவுல முடிச்சிருந்தா இன்னா இல்லே அறுந்திருந்தாதான் இன்னா முடிச்சி போட்டுகிட்டாப் போச்சின்னு பாத்துட்டுப் பாக்காத மாதிரி தளுக்கா சிரிச்சிகிட்டே தாண்டிப் போயிருவோம்.

அடப்பாவி இதான் என்னப்பத்தின உன் அபிப்ராயம்னு இத்தனை நாள் சொல்லவே இல்லே.

சொல்லிட்டு சூவை எவன் புண்னாக்கிக்கிறது.

இப்ப சொல்லிட்டியே

நான் எங்க சொன்னேன்? 

சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் விசாரித்ததில் அரசல்புரசலாய்த் துண்டு துணுக்காய்த் தெரிய வந்ததை ஒட்டவைத்ததில் கொஞ்சம் தெளிந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

ஆனால் சமர்ப்பிக்கப்பட்டவை அனைத்தும், பேர்க்கொத்த பெரிய நிறுவனம் என்கிற நம்பிக்கையின்பேரிலும் சமர்ப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பணம் கொடுத்தாக வேண்டும் என்று ஆணையே இருப்பதாலும் தப்பித்தவறித் தாமதமாகிறது என்கிற தகவல் மேலே போனால் தலையே போய்விடும் என்கிற பயத்தின் காரணமாகவும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் சார்ட்டட் அக்கவுண்டண்டும் ஆவனங்கள் சரியாக இருக்கின்றன என்று சான்றிதழ் வழங்கியிருந்தாலே போதும் பரிசீகிக்கத் தேவையில்லை என்று சட்டமே சொல்கிறதே என்பதாலும் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று செக்காகிப் போய்க்கொண்டே இருந்திருக்கின்றன.

இது நொள்ளை அது நொட்டை என்று சொல்லி உரிய பணத்தைக்கொடுக்க   இழுத்துப்பறித்து விளையாடும் ஊழியர்களின் ஊழலை ஒழிக்க அரசு எளிமைப்படுத்தியிருந்த நடவடிக்கை அது.

அப்புறம் என்ன பிரச்சனை? அப்படி ஏதேனும் தவறிருப்பினும் நம் தலையிலா விழப்போகிறது? போதாக்குறைக்கு இது ஒன்று மட்டும்தான் வேலையா?அதுவும் கம்பெனி அகண்டாகாரமானதாக இருந்தால் கேட்கவே வேண்டாம். ஆயிரக்கணக்கில் அடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஆண்டவனே வந்து விளக்கெண்ணெய் விட்டு ஒப்பிடத்தொடங்கினாலும் வேலைக்காகிற விஷயமில்லை.ஆகவேதான்.சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் சரியாய் உள்ளன என்று நிர்வாக இயக்குநரும் சார்ட்டட் அக்கவுண்டண்டும் கையொப்பமிட்டுக் கொடுக்கும் சான்றிதழே போதுமானது என்கிறது அரசாங்கம்.

எதையோ பார்க்கையில் எதுவோ கண்ணில் பட பகீலென்றது. அந்த நூலைப்பிடித்து முன்னேறிப்போனால் இறக்குமதி ஆவணத்தில் இல்லவே இல்லாத பொருட்களுக்கெல்லாம் பணம் கேட்டு கிளெய்ம் இருந்தது. ஒரே பகுதி எண் கொண்ட பொருள் நான்கைந்து முறை வெவ்வேறு கிளெய்ம்களில் காட்டப்பட்டு பணம் போயிருந்தது.

என்ன இது?

பொருள் எல்லாம் சரிதான் பேப்பர்தான் மாறிவிட்டது இது கம்பெனி குமாஸ்தாசெய்த குளறுபடி. இப்போது வேண்டுமானால் ஒரிஜினல் பேப்பரை இந்தக் கிளெய்மில் வைத்து விடுகிறோம்.

சரி, வராத பொருட்களுக்கு வாங்கிய பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?

அதை நிர்வாகத்திடம் பேசி சுமுகமாக முடிக்கலாம். தேவைப்பட்டால் பணத்தைக்கூடத் திரும்பக் கட்டிவிடலாம்.

எல்லாம் சரியாய் இருக்கிறது என்றுதானே எல்லோரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீர்கள். கெடு முடிந்து, இவ்வளவு காலம் தாழ்ந்து நாங்களாகக் கண்டுபிடித்தபின் சாதாரணத் தவறுதல் என்பது போல சமாளீப்பது சரியா? இதை எவருமே பார்க்காமல் போயிருந்தால், தரவேண்டாத பணத்தைக் கொடுத்தது அரசுக்கு நட்டமில்லையா?

....

அமல்படுத்தப்படவேண்டிய காரியங்களுக்கான துறைகள் ஒன்றோடொன்று இயந்து செயல்படவதும் அதைப் போலவே செயல்பாட்டுத்துறைகளைக் கண்காணிக்க வெவ்வேறு துறைகள் முரண்பட்ட பார்வையுடன் முழித்துப் பார்த்தபடியே இருப்பதுமாக,  அரசாங்கத்தின் உள் இயக்கம் இரண்டு வகைப்பட்டது. 

செரா (அக்கவுண்டண்ட் ஜெனரல்) டிஆர்ஐ (பொருளாதார புலனாய்வு இயக்ககம்) சிபிஐயின் இஓடபிள்யூ (எகனாமிக்ஸ் அஃபென்ஸஸ் விங்) போன்ற கண்காணிப்புத் துறைகளின் பார்வையில் இந்தக்கோளாறுகள் தட்டுப்பட்டால் இதற்க்குக் கையெழுத்துப்போட்டவன் யார் என்பதல்லவா முதல் கேள்வியாக இருக்கும்?

முதலாவது துறை மட்டுமே அறிவித்துவிட்டு காலக்கிரமத்தில் தணிகைக்கு வருகிற கடப்பாட்டிற்க்குக் கட்டுப்பட்டது.

பின்னிரண்டும் தங்களுக்கு வரும் ஒற்றுத் தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் செயல்படுபவை. பெரும்பாலும் நிறுவனத்தின்மீது அதிருப்தியில் இருக்கும் யாரேனும் இப்படியான காரியங்கள் நடக்கின்றன் என்று வெறும் அலைபேசியில் தெரிவித்தாலே கண்காணிப்பின்கீழ் அந்த நிறுவனம் வந்துவிடும்.

அவர்கள் கண்டுபிடிக்க நேர்ந்தால், இதை அனுமதித்தவனின் கதி என்ன? அப்போது எதையும் பார்க்கவேண்டாம் என்று சட்டம் சொல்கிறதே என்று கூறித் தப்பிக்க இயலுமா? இவ்வளவு கோடி அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறதே எப்படி என்கிற கேள்விக்கு, கம்பெனி குமாஸ்தாவின் அசட்டைதான் காரணம் என்று பதில்கூற முடியுமா? பொருளாதார மோசடி என்றல்லவா இது பார்க்கப்படும்? அவர் சொன்னார் என்று கையெழுத்துப்போட்டேன் என்கிற பெரிய பெரிய அதிகாரியெல்லாம் கம்பியல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்? அரசு ஊழியனான நீ வேண்டுமென்றேதான் பார்க்காமல் விட்டுவிட்டாய் என்று நிறுவனத்துடன் கள்ளக்கூட்டு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படாதா? துறை நடவடிக்கையாக ஒரு கோப்பு திறக்கப்பட்டால் தவறில்லை என்று நிரூபித்து மீள குறைந்தது பத்து வருடங்கள் ஆகிவிடாதா? நிறுவனம் செய்த தவறுக்கு அரசு ஊழியன் பலியாகவேண்டுமா?

மன்னித்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் வேண்டுமென்றே செய்ததில்லை. ஏதோ தவறி விட்டது.

கோடிக்கணக்கிலா?

பெரிய நிறுவனம். நிறைய ஆவணங்கள் அதனால் தொகையும் கொஞ்சம் கூடுதலாகத்தானே இருக்கும்.இதற்கெல்லாம் பணத்தைத் திரும்ப செலுத்திவிட நிர்வாகம் முடிவெடுத்து விட்டது.

76 கோடி கட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் வேண்டுமென்றே செய்யவில்லை, சாதாரண நடைமுறை இடர்பாட்டினால் நிகழ்ந்த தவறுதான் என்று நன்முகத்தைக் காப்பாற்றிக்கொள்ள, சட்டத்தின் படிகளில் எத்துனை முறை உருண்டு விழுந்தாலும் ஒவ்வொரு படிக்கட்டாய் நிறுவனம் உச்சநீதிமன்றம் வரை ஏறிக்கொண்டேதான் இருக்கும்.

ஆனால் அரசு ஊழியனுக்கோ போனால் தலை வந்தால் சான்றிதழ்.

சாதாரண அலுவலகங்களில் இப்படியான குளறுபடியை உச்ச அதிகாரியின் பார்வைக்குக் கொண்டுபோனால், அதிகார மையத்தின் அடியில் எங்கே தன் தலை உருளுமோ என்கிற பயத்தில், கண்டுபிடித்துக் கொண்டு போனவன்தான் முதலில் பலியாவான்.

மேடை கிடைக்கவில்லை என்றால், எவ்வளவு நடனம் தெரிந்துதான் என்ன பயன்?

***

அரசாங்க ஊழியர்களுக்கான ஜனாதிபதி விருது என்றால் என்னவென்று தனது கொசு மூளையால் புரிந்துகொண்டு தனது பின் நவீனத்துவ வாயால் விட்ட குசு என்னவென்று அடுத்துப் பார்க்கலாம்.