28 March 2012

பெரியார் கொடுத்த விபூதி - நித்ய தடித்தன சதி

<நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.>


நித்ய சைதன்ய யதி எப்போது துறவு பூணுகிறார்?

ஜெயமோகனே உருவாக்கிய ஊட்டி நாராயண குருகுலம் என்கி்ற விக்கிப்பீடியா பக்க ஆதாரத்தின்படி - 

(நடப்பு | முந்தைய)  23:57, 19 சனவரி 2011‎ ஜெயமோகன் (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,536 பைட்டுகள்) (+6,536)‎ . . (புதிய பக்கம்: நடராஜ குருவால் உருவாக்கபப்ட்ட அத்வைத குருகுலம். நாராயணகுரு...)

- 1947ல் நடராஜ குரு ஊட்டி வருகிறார். <எட்டுவருடங்களுக்குப் பின்னர் குரு நித்ய சைதன்ய யதி மாணவராக வந்து சேர்ந்தார்> 1947க்கு எட்டு வருடங்கள் கழித்து, அதாவது 1955ல் நித்ய சைதன்ய யதி 1955ல் துறவு பூண்டார் எனக் கொள்ளலாமா?

அல்லது நித்ய சைதன்ய யதி என்கிற விக்கிப்பீடியா தகவலின்படி, 

<1952ல் அவர் ஊட்டி ஃப்ரென்ஹில் குருகுலத்துக்குச் சென்று நடராஜகுருவின் நேரடி சீடரானார்.>

யதியின் துறவறத்தை 1952ஆகக் கொள்ளலாமா?

எது எப்படியோ ஜெயமோகனின் குருவான நித்ய சைதன்ய யதி துறவு பூண்டது 1950களில் என்று கொள்ளுவது கொள்ளாம்.

ஜெயமோகனால் தொட்டிலில் இட்டு ஈவேரா என்று நாமகரணம் செய்யப்பட்ட ரோடு வெங்கட(நாயக்கர்) ராமசாமி என்கிற பெரியார் அவர்களுக்கும் விபூதிக்கும் 1950களில் ஸ்நானப் ப்ராப்தியாவது இருந்ததா?

<நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார்> என்று எந்த ஆதாரத்தில் ஜெயமோகன் பலமுறை குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்?

இவ்வளவு முக்கியமான சம்பவத்தை, நித்ய சைதன்ய யதி தமது சுயசரிதையில் குறிப்பிட்டிருகிறாரா? பெரியார்-நித்ய சைதன்ய யதி-விபூதி-துறவு சம்பவத்தை நித்யா எங்கே குறிப்பிட்டு இருக்கிறார் என்று அடிக்குறிப்பேனும் கொடுப்பதல்லவா ஜெயமோகன் அடிக்கொருதரம் குறிப்பிடும் அறம்? எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி எழுதுவது என்பது, பொதுவெளியில் நாத்திக வாதத்தை தீவிரமாகப் பரப்பிய காலகட்டத்தில், தனிப்பட்டமுறையில் ஆசார அனுஷ்டானங்களை  பெரியார் கட்டிக்காத்தார் என்று செய்கிற அப்பட்டமான அவதூறன்றி வேறென்ன?

வீட்டிற்குள் பெரியார் பூஜையறை வைத்திருந்தார் என்று அந்தக்கால பிராமண குறுங்குழுக்களில் செய்யப்பட்டுக்கொண்டிருந்த கிசுகிசுப்புக்கும் ஜெயமோகனின் அறச்சிந்தனை அருவிக்கும் வேற்றுமை என்ன? முன்னது வம்புபேசிய வாய்க்கடை ஜொள்ளாக ஒழுகிற்று பின்னது இணையத்தில் டாம்பீக இலக்கிய சிந்தனாவாத மோஸ்தருடன் ஒழுகுகிறது என்பதைத்தவிர.

ஜெயமோகன் என்கிற பெயரை ஜேயமோகன் ஜெயமொகன் என்று குறிப்பிடுவது ஜெயமோகன் என்கிற பெயரைக் கொண்டவருக்கு செய்யப்படும் அவமானமா இல்லையா?

”சந்திரசேகரரும் ஈவேராவும்” என்கிற கட்டுரையில் மட்டுமே தலைப்பு உட்பட (பெரியார் என்கிற பட்டப்பெயரால் குறிப்பிடவேண்டிய கட்டாயமில்லை, அசல் பெயரான ஈ.வெ.ரா என்பதைப் பிடிவாதமாகத் தவிர்த்து) 36முறை ஈ.வே.ரா என்றே குறிப்பிடுவது, 

<ஈவேரா அவர்களின் தனியாளுமை பற்றி எனக்குப் பெருமதிப்பு உண்டு.> என்று சொல்லிக்கொள்பவர் செய்கிற செயலா? அல்லது அறம் என்பது ஜெயமோகன் உபயோகிக்கும் உதட்டுச்சாயத்தின் பெயரா?

< இன்று நான் ஈவேராவைச் சந்தித்தால் என் ஆசிரியரின் ஆசிரியராக அவரை எண்ணி முதலில் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறுவேன்.>

இந்த நிலை உருவாகிவிடாமல் இருக்கத்தான், ஈவேரா என்று ’இல்லாத ஒருவரை’த் தெளிவாகக் குறிப்பிடுகிறாரோ என்னவோ!

K. Damodaran என்கிற பெயரை, தமிழில் இயல்பாக கே.தாமோதரன் என்றுதானே எழுதுவோம். ஆனால் மலையாள உச்சரிப்பு அப்பிதப்பியும் வழுவிவிடாதவண்ணம், கண்ணும் கருத்துமாய் ”கெ.தாமோதரன்” என்று எழுதத்தெரிகிற ஜெயமோகன், எப்போது எழுத நேர்ந்தாலும் தற்செயலாய், எழுத்துபிழைகூட வந்துவிடாதவண்ணம் ஈவேரா என்றே எழுதுவது எதைக் காட்டுகிறது? வணக்கத்தையா வன்மத்தையா?

ஜெயமோகனின் குருவுக்கு, பெரியார் துண்ணூறு கொடுத்த நிகழ்வானாலும் சுந்தர ராமசாமி மீன்குழம்பு தின்ற சம்பவமானாலும், கோமல் இமயமலையை விபூதிமலையாகப் பார்த்ததாகச் சொன்னதானாலும் சம்பவ இடத்தில் ’அவர்களைத் தவிர’ ஜெயமோகன் மட்டுமே இருப்பது ஆச்சரியமான ஒற்றுமை இல்லையா. 

எதற்கும் எந்த ஆதாரமும் கொடுக்கவேண்டிய அறிவார்த்த கட்டாயம் ஜெயமோகனுக்கு மட்டும் கிடையாது என்பது யார் கொடுக்கும் சலுகை?

அல்லும் பகலும் ஆன்மாவைக் குலுக்கிகொண்டிருக்கும் எழுத்தாளருக்குத் தமிழ்கூறும் நல்லுலகு இதைக்கூடக் கொடுக்காவிட்டால் எப்படி?