16 September 2012

பெரிய கடவுளுக்கு சிறிய காணிக்கை


காசு கண்ணன் மீது உயிர்மை மனுஷ்ய புத்திரன் அவதூறு வழக்கு போடவேண்டும்.

சின்ன விஷயங்களின் கடவுள்

அருந்ததி ராய் தமிழுக்கு வாராத காதை

கண்ணன்

<ஓர் இடத்தில் முன்பணமாகச் சில ஆயிரங்களை இழந்த பதிப்பாளர்கள் அப்பாவித் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தாம் கொடுக்க வேண்டிய பாக்கி ராயல்டி தொகை எத்தனை லட்சம் மிச்சமிருக்கும் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.> 

இந்த ஒரு வரிக்காகவே மனுஷ்யபுத்திரன் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காசு கண்ணன், ஒருமைக்கு பதிலாய் ‘பதிப்பாளர்கள்’ என்று பன்மை உபயோகித்து மனுஷ்ய புத்திரனைத்தான் மறைந்திருந்து தாக்குகிறார்.  

நவம்பர் 2011ல் மனுஷ்ய புத்திரனை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, 
<’உங்க புக்கு அறுநூறு போட்டேன். இருநூறு போயிருக்கு.> என்று எவ்வளவு உண்மையாகக் கூறியவர் என்று எனக்குத்தான் தெரியும். 

காரணம், டிசம்பர் 2010ல், 
<அடுத்த வருஷம் இதே இடத்துல சந்திப்போம். 70 காப்பி போயிருந்தா உங்க புக்கு ஹிட்டுன்னு அர்த்தம் என்றார்.>

சமீபத்தில் ஓரிரு மாதங்கள் முன்பாக, ஞாநி வீட்டுக் கேணி கூட்டத்தில்கூட உயிர்மை 15%ஓ 12.5%யோ ராயல்டி தருவதாக எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார் மனுஷ்ய புத்திரன்.

ஆகவே தயையுள்ள மனிதரும் தன்மானமுமுள்ள கவிஞருமான மனுஷ்ய புத்திரன், காசு கண்ணன் மீது அவதூறு வழக்கு போட்டே ஆகவேண்டும். அருந்ததிராய் என்றில்லாமல்,குறைந்தபட்சம் ராயல்டி மேட்டரில் செய்யப்பட்டிருக்கும் அவதூறுக்காகவேனும் மான நட்ட வழக்கு போடவேண்டியது தவிர்க்க முடியாததாய் ஆகிவிட்டது. 

வழக்கு என்று வந்தால் செலவுக்குக் குறைவில்லை. உயிர்மை எனக்குத் தரவேண்டிய, என்றாவது ஒரு நாள் தரவும்போகிற, 26.12.2010 முதல் 26.11.2011வரை விற்றிருக்கும் 200 பிரதிகளுக்கான ராயல்டி தொகையான (180X12.5%=22.50 X200=4500) நான்காயிரத்து ஐநூறு ரூபாயை இந்த வழக்கின் செலவுக்கு வைத்துக்கொள்ளும்படி எனது நன்கொடையாக அளிக்க முன்வருகிறேன். 

தயவுசெய்து காசு கண்ணன் மீது மட்டும் கேஸ் போடாமல் விட்டுவிடாதீர்கள். உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அருந்ததி ராய் மீதும் அவர்களது ஏஜெண்டு மீதும் வழக்கு போடுங்கள். இதை சும்மா விடக்கூடாது. லண்டனுக்கேகூட போய் வழக்கு நடத்துவோம். செலவைப் பற்றிய கவலையை விடுங்கள். அத்துனை எழுத்தாளர்களையும் அவரவர்க்கு வரவேண்டிய ராயல்டியை 'மனுஷ்ய புத்திரன் மான நட்ட நிதி’க்கு நன்கொடையாய்க் கொடுக்கச்சொல்லி மன்றாடிக்கேட்பது என் பொறுப்பு.

இலக்கிய பதிப்பாளருக்கு தமிழ் எழுத்தாளன் இதுகூட செய்யவில்லையென்றால் அவன் என்ன எழுதி என்ன பயன்?