01 December 2012

வாழும்போதே கிடைத்த நினைவுகூறல்

இலக்கிய நண்பர்கள் - விமலாதித்த மாமல்லன்

ந.முருகேசபாண்டியன்

புத்தகத்தின் மூலம் காலத்தைக் கடந்து, நினைவுகளில் மிதந்து பயணிப்பது அருமையான அனுபவம். புத்தகத்துடன் வாசிப்பின் வழியே ஏற்படும் உறவு, நாளடைவில் அதை எழுதியவருடன் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. அந்தவகையில் விமலாதித்த மாமல்லன் என்ற ஆளுமையுடன் எனக்கேற்பட்ட நட்பு, சென்னைத் தெருக்களில் இன்றும் மிச்சமிருக்கின்றது. கோவையில் 1981இல் நடைபெற்ற 'இலக்கு' கருத்தரங்கில் மாமல்லனைப் பார்த்ததாக ஞாபகம். சிவந்தமேனி, சராசரி உருவம், முகமெங்கும் அப்பிய கறுந்தாடி, ஊடுருவும் விழிகள் என நீளமான முரட்டு கதர் ஜிப்பாவில் அலைந்து கொண்டிருந்த மாமல்லனின் தோற்றம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது intellectual எனப்படும் அறிவுஜீவி பிம்பத்தின் மீது தீவிர இலக்கியம் சார்ந்த இளைஞர்களுக்கு நிரம்ப ஆர்வம். நீளமான முடி, தாடி, ஜோல்னா பை, கசங்கிய ஆடை, விரலிடுக்கில் புகையும் பீடியுடன் எதையோ தேடும் கண்கள் என நடைமுறையிலிருந்து வேறுபட்டு வெளிப்பட்டோம். எல்லாவற்றையும் மறுதலிப்பது என்ற நிலையில் கலகக்காரன் என்ற பிம்பம் எங்களுக்குப் போதையை அளித்தது. சமூகம் இதுவரை உருவாக்கியிருந்த மதிப்பீடுகளைச் சிதைத்துப் புதிய வகைப்பட்ட மதிப்பீட்டை உருவாக்கக் கலகத் தோற்றம் உதவியது. இடைவிடாமல் தேநீர் குடித்தல், செய்யது அல்லது கணேஷ் பீடி புகைத்தல் மூலம் சூரியனுக்குக்கீழ் சகலமும் குறித்து விவாதங்கள் நடைபெற்ற சூழல், ஒருவகையில் அர்த்தமிக்கதுதான். அப்புறம் சேகுவேரா, நக்சலைட் போன்ற இடதுசாரிப் பிம்பங்களின் மீது மாளாத காதல் வேறு. இப்படியான அறிவுஜீவித்தளத்தில் மாமல்லனும் நானும் ஒன்று சேர்ந்தோம்.

"அவன் நம்பள மாதிரி ஆள். ரொம்ப நல்லவன்பா. மெட்ராஸ் போகிறப்ப அவனைப் பார்" எனச் சொன்னது நம்பிதான். 1985இல் சென்னையில் தங்கிட அறை தேடி அலைந்து திரிந்தபோது, நந்தனம் கலால் அலுவலகம் போய் மாமல்லனைப் பார்த்தேன். உடனே எனது 'வீடுபேறு' பிரச்சினை மாமல்லனுக்கானதாய் மாறிப்போனது. மாலையில் தி.க.சி.யைப் பார்த்தோம். எனக்குத் தங்க அறை கிடைப்பது குறித்து மிகவும் ஈடுபாட்டுடன் பேசிய தி.க.சி.யின் பேச்சு எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தியது. எனக்கு அப்பா வயதிலிருந்த தி.க.சி. முன்பின் அறியாத என்னிடம் காட்டிய ஈடுபாடு, இப்பவும் என் நினைவில் உள்ளது. சென்னை மாதிரி பிரமாண்டமான நகரில், தி.க.சி. தனக்கான அடையாளத்துடன் இலக்கியம் சார்ந்தவர்களிடம் செலுத்திய அன்பு ஒப்புவமை அற்றது. அப்புறம் மாமல்லனுடன் போய்ப் பிரபஞ்சனைப் பார்த்ததும், அவர் தங்கிய ராயப்பேட்டை, நாகராஜன் மேன்சனில் தங்கியதும் தனிக்கதை.

"கரடி சைக்கிள் விடும்போது நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா?" என்ற கவிஞர் விக்ரமாதித்யனின் எளிய வரிகள் மாமல்லனைப் பார்க்கும்பொழுது எனக்குத் தோன்றும். எப்பொழுதும் அழகிய சைக்கிளில் பயணிக்கும் மாமல்லனுக்குக் கவச குண்டலம்போல சைக்கிள் விளங்கியது. வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது நந்தனத்திலிருந்து ராயப்பேட்டைக்குச் சைக்கிளை மிதித்து வரும் மாமல்லன், சாதாரணமாய்ப் பேசும்பொழுது 'ங்ஙோத்தா' என எடுத்தெறிந்து பேசுவது போலத்தோன்றும். ஆனால் உள்ளுக்குள் அன்புக்கு ஏங்கக்கூடிய பையன். எல்லோரிடமும் அன்பையும் பிரியத்தையும் வேண்டிய மாமல்லனைப் புரிந்தவர்கள் மிகச் சிலர்தான். எண்பதுகளில் கையில் காசில்லா விட்டாலும் கவலையற்ற மனநிலை எங்களுக்கு வாய்ந்திருந்தது. அனடோல் பிரான்ஸ், ஹெமிங்வே, டால்ஸ்டாய், காமு, தாஸ்தாயேவ்ஸ்கி, ஸெல்மா லாகர்லெவ் என உலகத்து இலக்கிய ஆளுமைகளை விரட்டிவிரட்டிப் படித்துவிட்டு விடியவிடியப் பேசிக் கொண்டிருந்த காலகட்டம். சம்சா, தேநீர், சிகரெட் என நாயர் கடையில் வட்டமாகப் பேசத் தொடங்கும் பேச்சு, மூன்று மணி நேரங்கள்கூட நீளும். சில வேளைகளில் ஆளுக்கு நான்கு தேநீர்க் கோப்பைகளைக் காலி செய்திருப்போம். துரை என்று அழைக்கப்படும் வித்யா சங்கர், விக்ரமாதித்யன் அவ்வப்போது குழுவாகச் சேர்ந்துகொள்வார்கள். எல்லோருக்கும் காத்திரமான அபிப்ராயங்கள் இலக்கியத்தை முன்வைத்து இருந்தன. இடைவிடாமல் பேசிய பேச்சுகள் இன்றும் ராயப்பேட்டை தெருக்களில் மிதக்கின்றன.

நரசிம்மன் என்ற பூர்வதேய நாமமுடைய மாமல்லன் பிறப்பினால் மராத்தியர். அவர் வீட்டில் தனது தாயுடன் மராத்தியில்தான் பேசுவார். நரசிம்மன் என்ற பெயர் தோற்றுவிக்கும் புனைவு சார்ந்த புராணத்திற்கப்பால் இயல்பிலே சுறுசுறுப்பான மாமல்லன், சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், ஆனால் பட்டம் பெறவில்லை. ஞாநியின் பரிக்ஷா நாடகக்குழு தொடங்கி சோதனை நாடகங்களில் ஆர்வமுடன் பங்கேற்ற மாமல்லனுக்கு வித்தியாசமான விஷயங்களில் ஈடுபாடு அதிகம். இதனால் பேச்சு தெனாவட்டாக இருக்கும். தான் சரியென நம்பியதை, ஏற்படவிருக்கும் இழப்புகள் குறித்து அக்கறையற்று, அதைச் செயல்படுத்தத் துடிக்கும் இயல்புடையவர். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது போன்ற தொனி இப்பவும் மாறவில்லை. இன்று பத்திருபது கதைகள், அல்லது நாற்பது கவிதைகள் எழுதிவிட்டு, சீனியர் எழுத்தாளர்கள் எழுதியவை முடிஞ்சு போச்சு, எனத் தனது புகழ்க் கொடியைத் தானே பறக்கவிட்டு மகிழும் இளைஞர்களுடன் ஒப்பிடும்போது, மாமல்லன் முழுக்க வேறுபட்டவர். தனது எழுத்தை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்ற மன ஆவலுடன் செயற்பட்ட மாமல்லன் காவி உடுத்தி வட இந்தியாவிற்குத் தேசாந்திர யாத்திரை போனார் என்பது பலரும் அறியாதது. இரண்டு முறை வட இந்திய யாத்திரை போன அவருடைய முயற்சியில் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. மீண்டும் சென்னைக்கு வந்து வழமையான பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அவருக்குள் எப்பொழுதும் கனன்று கொண்டிருந்த கங்கின் விளைவாக 1985இல் சமூகசேவகர் பாபா ஆம்தேவ் நடத்திய சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டு 5000 கி.மீ. பயணமானார். அந்தப் பேரணி தேசிய ஒருமைப்பாட்டை முன்வைத்தது என நினைக்கிறேன். சைக்கிள் பேரணி எங்கள் ஊரான சமயநல்லூர் வழியாகச் சென்றபோது, நெடுஞ்சாலையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கதராடை உடுத்தியிருந்த சேவகர்களிடையே மாமல்லனின் முகம் எனக்குத் தட்டுப்படவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை இடைவிடாமல் துரத்திக் கொண்டிருந்தது என்றுதான் கருத வேண்டியுள்ளது. சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தபோதும் அவருடைய தேடல் வெவ்வேறு தளங்களில் விரிந்து கொண்டிருந்தது. அவர் தேடிச்சென்றது கிடைத்ததா எனத் தெரியவில்லை. ஒருக்கால் புனைவியல் நாவல்களின் நாயகன் போன்று சாகசங்களில் ஈடுபடுவதை அவரது உள்ளம் விரும்பியிருக்கலாம்.

'முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்' சிறுகதைப் புத்தகம் மூலம் தனது வருகையைப் பகிரங்கப்படுத்திய மாமல்லன் எழுத்தின் மீது எனக்குப் பெரிய அளவில் ஆர்வமில்லை. இதுகுறித்து நானும் அவரும் பல முறை பேசியிருக்கிறோம். நகர்ப்புற மத்தியதர வர்க்கத்து மனநிலை சார்ந்து ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சினைகளை மையமிட்ட இவரின் கதையுலகு, பூஞ்சானாக எனக்குத் தோன்றியது. பொதுவாகப் பார்ப்பனர் சாதியினரின் மனோபாவம் சார்ந்த கதைகள், குறிப்பிட்ட அம்சத்தைப் பதிவாக்குவதைத் தவிர, வாசிப்பில் வேறு அனுபவங்களைக் கிளர்த்துவதில்லை. இந்நிலைக்கு மாமல்லனும் விதிவிலக்கு அல்ல. மாமல்லனிடம் தான் செய்யும் செய்நேர்த்தி குறித்து எப்பவும் மிகுந்த அக்கறை இருக்கும். தொழில்நுட்பவாதி கலைஞன் ஆக முடியாது எனக் கேலி செய்வேன். "போங்கப்பா Southதில இருந்து வர்ற ஆளுங்க எல்லாம் இப்படித்தான் இருப்பீங்க" என்பார்.

அசோகமித்திரன், சுந்தரராமசாமி, சுகுமாரன், திலீப் குமார் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் மீது மாமல்லனுக்குப் ப்ரியம் அதிகம். நகரத்து மனிதர்களை மெல்லிய குரலில் தள்ளி நின்று விவரிக்கும் அசோகமித்திரன் எழுத்து எனக்குப் பிடிக்கும் என்றாலும், ஏதாவது எதிர்மறையாகச் சொல்லி மாமல்லனைச் சீண்டுவது எனக்கு வாடிக்கை. சுந்தரராமசாமியை நேரில் பார்த்து உரையாடி, அவர் எழுதிய கடிதங்களைப் பெட்டகமாகப் பாதுகாக்கும் எனது நண்பர்களில் மாமல்லன் முதன்மையானவர். சு.ரா. பற்றிப் பல்வேறு புனைவுகளையும் பெருமைகளையும் பேசுவது, ஒருவகையில் மொக்கைதான். சு.ரா.வின் எழுத்தைவிட, அவரது ஆளுமையின்மீது மோகம்கொண்ட மாமல்லன் போன்றோர் எண்பதுகளில் தமிழகமெங்கும் பரவலாக இருந்தனர். படைப்பின் தரம்/தரமற்றவை குறித்த சு.ரா.வின் அதீத ஈடுபாடு இலக்கியத்திற்குத் தரப்படும் இடத்தை மிகைப்படுத்துகிறாரோ என்று தோன்றும் (அந்தக் காலகட்டத்தில் எனக்குச் சு.ரா.வுடன் நட்பு எதுவுமில்லை). ஒரு தடவை மாமல்லன் சு.ரா.வின் மகள் திருமண அழைப்பிதழுடன் என்னைப் பார்க்க வந்தார். திருமணம் நிகழுமிடம் நாகர்கோவில். எனவே அங்கு செல்வதாக மாமல்லன் உற்சாகத்துடன் தினமும் கூறியது, ஏனோ எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. "சென்னை எக்மோரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயிலில் கல்யாணப் பத்திரிகையைக் காட்டினால் இலவசமாக நாகர்கோவில் போகலாம். வழி முழுக்க எழுத்தாளர்கள் ஏறிக்கொள்வார்கள். மாமல்லா நீ Freeயாகவே நாகர்கோவில் போகலாம்" என்று கேலியாகச் சொன்னேன். எனது கேலியால் எரிச்சலடைந்த மாமல்லன் எதுவும் பேசவில்லை. அப்புறம் அந்தக் கல்யாணத்துக்கும் ஏனோ அவர் போகவில்லை.

மராத்தி பார்ப்பனர் குடும்பப் பின்புலமுடைய மாமல்லன் ஒருமுறை கே.கே.நகரிலிருந்து அவருடைய வீட்டிற்கு அழைத்துப் போனார். செல்லும் வழியில் அவருடைய அம்மாவின் 'மடி', 'ஆசாரம்' பற்றிக் கூறிக்கொண்டே வந்தார். சிறுவனாக இருக்கும்போது, அம்மாவை ஆசையாகத் தொடப் போனால் 'மடி', என்று தள்ளிப்போவார் என்ற விஷயம் எனக்குச் சரியாக விளங்கவில்லை. ஏதோ சடங்கு என்று நினைத்துக் கொண்டேன். அவருடைய தாயார் பரிமாறிய சைவ உணவு அற்புதமாக இருந்தது. இப்பவும் அந்த உணவின் சுவை எனது நினைவில் உள்ளது. எங்களுக்கு முன்னால் இருந்த கிண்ணத்தில் இருந்த பொறியலை எடுத்து இலையில் போட்டுக் கொள்வதற்காகக் கரண்டியைத் தொடமுயன்றபோது, அவரது அம்மா பதறிப்போனார். மாமல்லன் 'வேண்டாம்' என்றார். அப்புறம்தான் தெரிந்தது. நான் அந்த உணவினைக் கரண்டியால் தொடுவதனால் அது 'மடி'யாகி விடும் என்று. எனக்கு அந்தச் சம்பவம் வேடிக்கையாக இருந்தது.

விளாத்திகுளத்திலிருந்து நண்பர் ஜோதிவிநாயகம் சென்னைக்கு வந்து எனது அறையில் தங்கியிருந்தார். அப்பொழுது ஜோதி, மாமல்லன், நான் மூவரும் தேநீர்க்கடைக்குப் போயிருந்தோம். பேச்சுத் தீவிரமானது. காரல் மார்க்ஸ் பற்றியதாக விவாதம் சுழன்றது. திடீரென மாமல்லன், "ங்ஙோத்தா... மார்க்ஸ் தேவடியாப் பையன்... என்னமா எழுதியிருக்கான்" என்று சொன்னவுடன் எனக்குப் பயங்கரக் கோபம். "மூஞ்சியைப் பேர்த்திடுவேன்... மார்க்ஸை எப்படித் தேவடியாப் பையன்" எனச் சொல்லலாம் என மாமல்லனை அடிக்கக் கையை ஓங்கினேன். என்னைத் தடுத்தார் ஜோதி. மாமல்லன் ஏதோ சமாதானம் சொல்லியும் என் மனம் கேட்கவில்லை. இரண்டு பேரும் மார்க்ஸை முன்னிட்டுக் 'காய்' விட்டுக்கொண்டோம். இரு வாரங்கள் சந்திக்கவில்லை. எனக்கு என்னமோ மிகவும் நெருக்கமான உறவினை இழந்தது போன்று மனவருத்தம். அப்புறம்தான் தெரிந்தது, 'மெட்ராஸ் பாஷையில் மார்க்சின் திறமையை மாமல்லன் பாராட்டியிருக்கிறார்' என்று. மீண்டும் பேச்சுகள் நீண்டன. எங்கள் இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் மீறி ஒருவகையான ப்ரியம் ஆளுமை செலுத்தியது.

திடீரென மழைக்கோட் அணிந்துகொண்டு ஒருநாள், என்னைப் பார்க்க மாமல்லன் வந்தார். லேசான தூறல். பேசிக்கொண்டு இருவரும் நடந்தோம். மழை நின்றுவிட்டது. என்றாலும் வண்ணமான கோட்டினைக் கழற்றாமல் மாமல்லன் சைகிளை உருட்டிக் கொண்டு வந்தார். வண்ணநிலவனைப் பார்க்கப்போனோம். அவர் உற்சாகமாகச் சிரித்து எங்களை வரவேற்றார். மாமல்லனின் மழைக்கோட்டைப் பார்த்தவர் சொன்னார், "யோவ் இதெல்லாம் அக்கிரம்யா.. மெட்ராஸில் எப்பவாச்சும் மழை பெய்யுது. அதுல இப்படி மழைக்கோட்டுப் போட்டால், வர்ற மழையும் வராமப் போயிடும்பா" என்று. எனக்குச் சிரிப்புத் தாளமுடியவில்லை. "யே... இந்தத் தெற்கத்தி ஆளுகளே இப்படித்தான்பா" என்று பதில் அளித்தார் மாமல்லன்.

'பதினொரு முட்டாள்கள் விளையாட, பத்தாயிரம் மடையர்கள் பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட்' என்று எரிச்சலுடன் கிரிக்கெட்டைப் புறக்கணித்த என்னுடைய செயல் மாமல்லனுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. எனக்குக் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுத்த அவர் பேசிய பேச்சுகள் நிஜமானவை. ஆனால் அவை எனக்குள் ஊடுருவ முடியவில்லை. "ஏன்பா மட்டையைத் தூக்கிச் சுழற்றி அடிக்கும் லாவகம், பந்து காற்றைக் கிழித்துப் பறக்கும் வேகம், ஓடிவந்து காத்திருந்து பந்தைப் பிடிக்கும் அற்புதமான கேட்ச்..." என அருமையான நாட்டிய நிகழ்ச்சியை விவரிப்பதுபோல நீளும் மாமல்லனின் பேச்சு எனக்குப் போரடிக்கும். "இந்த sஷீutலீல இருந்து வர்ற ஆளுக நல்லா இலக்கியம் பேசுறீங்க... நல்ல இலக்கியம் எதுவெனத் தெரிஞ்சிருக்கு... ஆனால் இந்தக் கிரிக்கெட்டை மட்டும் ஏன்பா வெறுக்கிறீங்க" என்பார். வானொலியில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பது, கிரிக்கெட் விளையாட்டு பற்றிய தகவல்களை மணிக்கணக்கில் பேசுவது போன்றவற்றை அலட்டலாகப் பலர் செய்வதைப் பார்த்துத்தான் எனக்குக் கிரிக்கெட் மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது.

சென்னையில் பல்வேறு திரைப்படங்களை மாமல்லனுடன் பார்த்திருக்கிறேன். மிஸ்டர் டவுட் ஃபயர், ஹிஸ்டரி ஆப் வோர்ல்டு எனப் பட்டியல் நீளும். வெளிநாட்டுத் தூதரகங்களில் காட்டப்படும் படங்கள், ஃபிலிம் சொசைட்டி படங்கள் எனப் பார்ப்பதிலும் அவை பற்றிப் பேசுவதிலும் எங்களுக்கு ஆர்வம் அதிகம். டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா' நாவலின் மொழியாக்கத்தினை ஓரிரவில் வாசித்துவிட்டு, எப்பொழுதும் 'அன்னா கரீனா' நினைவாகவே அன்றைய காலகட்டத்தில் இருந்தேன். சத்யம் தியேட்டரில் பார்த்த ஆங்கிலப் பட டிரைலரில் கதாநாயகி ஓடும்ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகக் காட்சி இருந்தது. அப்படம் வெளியானவுடன் இரவுக் காட்சிக்கு இருவரும் போனோம். அன்னா கரீனா படத்தைத் தயாரிப்பது தொடர்பான அப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்த நடிகை, ஓடும் ரயிலில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள். திரையரங்கத்தை விட்டு லாட்ஜூக்குப் போகும் வரையில் அப்படத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

துரை Freelancer ஆகப் பத்திரிகைகளில் பணியாற்றினார். விக்ரமாதித்யன் நாடாறு மாதம், காடாறு மாதம் என இருந்தார். நான் ரூ. 660/- ஊதியத்தில் சென்னையில் மலேசிய மொழி படித்துக் கொண்டிருந்தேன். மத்திய அரசு அலுவலரான மாமல்லன்தான் எங்கள் குழுவில் ஓரளவு வசதியானவர். அவருக்கு அப்பொழுது ஊதியம் ரூ.960/- என நினைக்கிறேன். நால்வரும் கூடினால் உற்சாகத்துக்குப் பஞ்சமேது? ஒரே கேலி, கிண்டல், அடாவடிகள். ஒருமுறை மயிலாப்பூரில் நடைபெற்ற 'இலக்கியச் சிந்தனை' நடத்தும் மாதாந்திரக் கூட்டத்துக்குப் போயிருந்தோம். ஏதாவது முக்கியமான கேள்வி கேட்டுப் பிரச்சினையைக் கிளப்புவதில் மாமல்லனுக்கு எப்பவும் ஆர்வம். விக்ரமாதித்யன் 'ஏ... வேணாம்பா கேட்காதே' என்று தடுப்பார். நான், "மாமல்லா சும்மா கேளு... அப்புறம் நானும் பேசுறேன்" என்று தூண்டி விடுவேன். அப்புறம் என்ன... கூட்டம் களை கட்டிவிடும். ஒருமுறை ஓவியக்கலைஞர் 'அமுதோன் என்பவரைப் பார்த்து உனக்கு ஓவியமும் தெரியாது கவிதையும் தெரியாது என்று மாமல்லன் சொல்ல, கூட்டத்தில் சச்சரவாகி விட்டது. அந்தக் கூட்டத்திற்கு மனைவியுடன் வந்திருந்த 45 வயது வயதான சிவந்த தோற்றமுடையவர், "இந்தாங்கோ லட்சுமணன் கூட்டம் ஒன்னும் டீசண்டாக இல்லை. பேமிலியோட வர்றவா எல்லாம் இனி எப்படி வர்றது" என்று அமைப்பாளரிடம் படபடத்துக் கூறினார். "பேசமா நீங்க மயிலாப்பூர்ல ஏதாவது மடத்துக்குப் பஜனைக்குப் போங்கோ... இங்கே வராதீங்க" என்று நான் சொன்னவுடன் மாமல்லனுக்கு ஏக உற்சாகம். அன்றைய காலகட்டத்தில் இலக்கியக் கூட்டங்களில் கேள்விக் கணைகளை வீசிப் பரபரப்பை ஏற்படுத்திய மாமல்லனின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்று சனிக்கிழமை. இரவு 7 மணிவாக்கில் எங்கள் நால்வர் குழு பாண்டி பஜாரில் கூடியது. அன்றைய இரவின் ஸ்பான்சராக ஏற்கனவே மாமல்லன் அறிவித்திருந்தார். ஒரே கொண்டாட்டம். எல்லோரும் காற்றில் மிதந்து கொண்டிருந்தோம். போதையில் மாமல்லன் தன்னைப் பிராமணர் இல்லை என்பதை வலிந்து நிறுவுவார். விக்ரமாதித்யன் தன்னைப் பிள்ளைமாராக நிறுவுவதுடன், "யேய்... நீ பார்ப்பான்" என அவரைச் சீண்டுவார். இருவேறு போக்குகளிடையே நாங்கள் மந்தைவெளி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அப்பொழுது இரவு 11 மணியே இருக்கும். செல்லும் வழியில் 'சங்கர மடம்' என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த பெரிய கட்டடத்தைப் பார்த்தவுடன் துரை, "யேய் நான் சங்கரரின் அத்வைதம் மீது ஒன்றுக்குப் போகிறேன்" என்று மடத்தின் காம்பவுண்டு சுவரை நோக்கி மூத்திரம் பெய்ய முயன்றார். மாமல்லன், "அது தப்பு வேணாம் துரை" என்று தடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. சிறிது தொலைவு போனவுடன் மாமல்லன், "யே கண்ணதாசன் வீடு வந்திருக்கு... அவரோட பாடல்கள் மீது ஒன்றுக்குப் போகிறேன்" என்று செயலாற்ற முயன்றார். துரை பதறிப்போய்த் தடுக்க முயன்றது பலிக்கவில்லை. அந்த இரவில் அப்படியே நடந்து மந்தைவெளி போய், அங்கிருந்து மயிலாப்பூர் வழியாக ராயப்பேட்டை நாகராஜன் மேன்சனுக்கு வந்தபோது தலைக்கோழி கூவியிருக்கும். பொழுது விடிந்து 8 மணிக்கு எழுந்து பார்த்தால் யாரையும் காணவில்லை. முந்திய நாள் இரவில் நடந்தது கனவு போன்ற பிரேமை என்று தோன்றியது.

சென்னையில் தங்கியிருந்த ஓராண்டில் நெருக்கமான சிநேகிதராக இருந்த மாமல்லனுடன் ஏற்பட்ட தொடர்பு காலப்போக்கில் மெல்ல அறுந்துபோனது. அப்புறம் 2000இல் திருச்சியில் அவரது அலுவலகத்தில் போய்ப் பார்த்தவுடன், வா வீட்டுக்குப் போகலாம் என அழைத்துப்போய் மதிய உணவு வழங்கியது, அடுத்த கட்ட நிகழ்வு. பறவைகள் காணாமல் போவதுபோல நண்பர்களும் தொலைந்து போகின்றனர். அது சோகமானது.

2010இல் நரைத்த முடிகளுடன் தடித்த உடம்புடன் குட்டையாகச் சென்னை கூட்ட அரங்கின் முன்னால் பார்த்தவுடன் ஒரு கணம் மாமல்லனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. எண்பதுகளில் என்னவொரு சிவந்தமேனி, ஜொலிக்கும் கண்கள், துருதுருவென பேச்சு, பரபரப்பான உடல்... என இருந்த மாமல்லனா இப்படி உருமாறி விட்டார் என நினைத்துக்கொண்டேன். அன்றைய காலகட்டத்தில் தற்செயலாக அவரைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர், தனது படத்தில் ஹீரோவாக நடிக்கக் கூப்பிட்டதும் இவர் மறுத்ததும் தனிக்கதை. காலம் எவ்விதமான பாரபட்சமும் இல்லாமல், தனது தடத்தினை மாமல்லன் மீதும் பதித்துள்ளது என்பதற்கு அடையாளம்தான் இன்றைய அவரது உருவம்.

புனைகதை என்ற பெயரில் பம்மாத்து, திருகல், செறிவு என உருவாக்கப்படும் நிலைக்கு மாறாக மாமல்லனின் புனைவுலகு எவ்விதமான ஆடம்பரங்களும் இல்லாமல், இயல்பான எளிய மொழியில் விரியக்கூடியது. அவரைச் சுற்றிலும் நிகழும் அவர் அறிந்த எளிய மனிதர்களின் விஷேசமான அம்சங்களைத்தான் பெரும்பாலும் கதைக்களன்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். எனவே சில கதைகள் அவருடைய அனுபவமும் தன் வரலாறும் கலந்தவை என்ற உணர்வை வாசிப்பில் தருகின்றன. மாமல்லனின் புனைவுலகம் ஒப்பீட்டளவில் மிகவும் சுருங்கியது. எங்கும் கசப்பும் வெறுமையும் வறட்சியும் வறுமையும் நிலவும் சூழலில் மனித இருப்பு தானாக அர்த்தமிழந்து போவதைக் கதைகளின் வழியாக மாமல்லன் பதிவாக்க முயன்றுள்ளார். இன்றைய மறுவாசிப்புக் காலகட்டத்தில் மாமல்லனின் புனைகதைகள் பெறுமிடத்தை இளம் வாசகர்தான் மதிப்பிட வேண்டும்.

இன்னும் பத்தாண்டுகள் கழித்துப் பார்த்தாலும் கட்டிப்பிடித்துக் கொண்டு பேசுவதற்கு எனக்கு மாமல்லனிடம் விஷயங்கள் உள்ளன. தாஸ்தாயேவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' சிறுகதையில் வரும் பெயர் அற்ற இளைஞன் போல 1985இல் சென்னையில் நான் தங்கி இருந்தபோது, அந்த மாபெரும் நகரின் விநோதங்களையும் கொண்டாட்டங்களையும் அறிமுகப்படுத்திய இளைஞரான மாமல்லனின் உற்சாகத்திற்கு அளவேது? இன்று அவர் இணையத்தின் மூலம் வலைப்பூவிலும் முகநூலிலும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறார். என்றாலும் அது ஒரு கனாக்காலம்... இல்லையா மாமல்லன்?


    உயிரெழுத்து - அக்டோபர் 2012 இதழ்

    ***

    இதில் நினைவுப்பிழைகள் தகவல் பிழைகள் சில உள்ளன. இது முருகேசபாண்டியனுடைய நினைவில் பார்வையில் தங்கியுள்ளதுபடி அவனைப் பொறுத்தவரை சரிகூடத்தான். 

    இதில் எதைவிடவும் பெரிய குறையாக எனக்குப் படுவது ’அர்’ விகுதியில் அவன் என்னைக் குறிப்பிடுவதுதான். பொதுவெளி ’மரியாதை விளி’ புண்ணாக்கு மசுரெல்லாம் எவனுக்கு வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் இவன் என்னைவிட ஓல்ட்டு. சரியாகச்சொன்னால் சமயவேலுக்கு ஈடு. ஃபேஸ்புக்கில் வருஷம் போடாமல் டிசம்பர் 26 என்று சினிமாக்காரிபோல எழுதிக்கொண்டிருக்கிறான்.

    எனது நெருங்கிய நண்பர்களில் ஷங்கர ராமன் அசோகமித்திரன் சுகுமாரன்  சுந்தர ராமசாமி  போன்ற சிலருக்கு மட்டுமே என்னையும் பிடிக்கும். என் கதைகளையும் பிடிக்கும். பெரும்பாலான இலக்கிய நண்பர்களை, சி.மோகன், வசந்தகுமார், விக்ரமாதித்யன், சமயவேல் போன்றோரை என் கதைகளைக் காட்டிலும் நான்தான் அதிகம் வசீகரித்திருக்கிறேன்.  

    இலக்கியமோ அலுவலகமோ பின்விளைவுகள் எதைப்பற்றியும் கவலைப்படாத, வரும்போது எதிர்கொள்ளலாம் என்ன தலையா போய்விடும் என்கிற கலகக்காரனாகவே வாழ்ந்துவிட்டேன். இனியும் இப்படியே சமரசமின்றி மிச்சமிருக்கும் காலத்தையும் வாழ்ந்து தொலைக்க முடிந்தால் அதுவே பெரிய வரம்.

    செத்தபிறகு அஞ்சலியாகத்தான்,இப்படியான ஏதோவொரு கட்டுரை எழுதப்பெறும் பாக்கியம், கையளவிலான தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும். எனக்கு வாழும் போதே வாய்த்திருப்பது பெரிய பாக்கியம்.

    இதைப் படித்துவிட்டு, தமிழச்சி தங்கபாண்டியன் அலைபேசியில் அழைத்து, ரொம்பப் பிரமாதமாக இருந்ததாக ரொம்பநேரம் பாராட்டினார். 

    எழுதிப் பதிவு செய்த முருகேச பாண்டியனைப் பாராட்டுவதற்கு பதிலாய், வாழ்ந்த என்னைப் பாராட்டுகிறாரே என்று வியப்பாக இருந்தது.