(மச்சி சார் என்று அழைக்கும் அளவிற்கு பரிச்சயம் இல்லாததாலும் பிரதர்என்று அழைக்கும் அளவிற்கு இன்னும் நெருங்கி வராததாலும் திரு மாமல்லன் சார் என்று அழைக்கவே விரும்பிகிறேன். இதில் எனக்கு ஒரு ஆத்ம சந்தோசம் என்ன வென்றால் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசான் ஒருவராக உங்களை என்னால் நினைக்க முடிகிறது...)
திரு மாமல்லன் சார்,
என்னைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்பதற்கு புதியதொரு அர்த்தத்தைக்கொடுத்து , சிந்தனையைத் தூண்டியவர் நீங்கள். (எழுத்தாளன் என்பவன் யார் என்று இது வரை 1000 அர்த்தங்களும் 1008 விளக்கங்களும் கொடுக்கப் பட்டிருக்கிற சூழ்நிலையில்)
நிற்க ... நான் உங்களின் எல்லா பதிவையும் படித்திருக்கிறேன்... ஆனால்இலக்கியம் அல்லாத விஷயங்களே எனக்கு அதிகம் புரிகிறது... பின்னர் நான்உங்களை எப்படி புதியதொரு அர்த்தத்தை கொடுத்தவர், சிந்தனையைத்தூண்டியவர் என்கிறேன் என்றால் சாமனியர்களுக்காக நீங்கள்மேற்கொண்டிருக்கும் சமீபத்திய உங்கள் புனித பயணம்...
குமுதம், விகடன், ஓ பக்கங்களுக்காக கல்கி என்று படித்து கொண்டு...நடுத்தரவர்க்கதிற்கே ஆன தட்டயான, திராபையான சிந்தனைகளோடு சுற்றிகொண்டு இருந்தாலும் கையாலாகாத தனம் கையறு நிலை என்று புலம்பிகொண்டு மட்டும் இல்லாமல்...எங்காவது மனதிற்கு ஒவ்வாத காரியம்நிகழும் போது ...
ஒன்றை மட்டும் விடாமல் செய்கிறேன். அது - ஆண்டவனிடம் வேண்டுவது.நிச்சயமாக இது கையாலாகத்தனம் இல்லை. ஏன் எனில் ... இருகைகளையும் கூப்பி கண்களை மூடி தான் வேண்டுகிறேன். அப்படித் தான்"அப்போதும்" வேண்டினேன் ...எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டும்என்று...
அதே போல் மனதிற்கு பிடித்த காரியங்கள் நிகழும் போதும் அந்தஆண்டவனை வேண்டுவேன்...
இப்போதும் வேண்டுகிறேன்... நீங்கள் நீண்ட காலம் நோய் நொடி இன்றி மனநிறைவுடன் வாழ வேண்டும் என்று அந்த ஆண்டவனிடம் வேண்டுகிறேன். உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
அன்புடன், நெல்சன்
அன்பான நெல்சன்,
தங்கள் மடலை தற்போதுதான் கவனித்தேன்.
வேண்டுதலுக்கு நன்றி!
பிரச்சனை என்னவென்றால் எதிரெதிர் ஆண்டவர்கள் எதிரெதிர் பிரார்த்தனைகள்.
வேளை தவறாது போடப்படும் ட்விட்டுகளில் இருக்கும் அன்பு நேயம் தியானம் தேவி பிரேயர் மயிறு மட்டை எல்லாம் உதட்டுச் சாயங்களால் எழுதப்படுகின்றன. உள்ளம் கரவில் தோய்ந்து கிடக்கிறது.
ஆண்டவனே எதிரில் வந்து, உங்கள் தவறு என இந்த விவகாரத்தில் ஒன்றுமே இல்லையா, சற்றே பரிசீலித்துப் பாருங்கள் என்றாரென்றால், வந்த ஆண்டவன் செந்திலாண்டவராக இல்லாது, ஐயங்காராகவே இருந்தாலும் கட்டணமில்லா ஆசிட் திருமஞ்சனம் அவருக்குக் கிடைப்பது உறுதி.
இப்படிக்கு,
குற்றாலத்துக் ”குரங்கே மரத்தைவிட்டு இறங்கே” என ஆங்கில லிபியில் டைப்படித்து ட்விட்லாங்கரில் அன்பாகக் கூறினாலும்
தளுக்கிக் கொண்டிருக்கும் மரத்தை சிதைத்து சின்ன குச்சியாக ஆக்காமல் பிடித்தபிடியை விடுவேனா என்கிற குரங்கு.