06 January 2013

இருளும் ஒளியும்

இந்த 2.36AMல் என் அறையில் இருக்கும் குழல்விளக்கு ஒளியில் இந்த அட்டை ஐஃபோனின் லென்சுக்கு ஓரளவு பளிச்சென்று தெரிந்திருக்கிறது என்றே இந்த முகப்பைப் பார்க்கையில் தோன்றுகிறது. என் கண்ணாடி லென்சுக்கு அவ்வளவு பவர் இருப்பதாய்த் தெரியவில்லை. 


புத்தக வெளியீட்டு விழா முடிந்து கிளம்புகையில் புக்பாய்ண்ட்டின் கீழ் படிகளில் முடிச்சாய் நண்பர்கள் கூட்டம். ஜோசஃப் என்கிற ஜேஜே தயாளன் திடீரென்று கூறினான்.

உன்னோட அறியாத முகங்கள் காப்பி இருக்குமா எனக்கு வேணும்.

அறியாத முகங்கள் எதுக்கு மொத்தமா உயிர்மை வெளியிட்டது இருக்கே. தறேன்.

ஆதிமூலம் வரைஞ்ச முதல் பதிப்பு வேணும். எங்கிட்ட இருந்துது. இப்ப யார்கிட்டையோ போயிடுச்சி.

அது என்கிட்டையே ஒண்ணுரெண்டுதானே இருக்கும்.

இருக்கறதுல ஒண்ணு குடு எனக்கு வேணும் என்றான்.
அருகில் இருந்த சுரேஷ்குமார் சிரித்தபடி எங்கிட்ட ரெண்டு இருக்கு என்றார். ஜோசஃப் தன்னிடம் புத்தகம் இல்லை என்று சொல்வது சுரேஷ்குமாரின் புத்த அட்டை குறித்துதான் என்று எனக்குத் தோன்றியது என் பிரமையாகவும் இருக்கக்கூடும்.

நவீன ஓவியம் பற்றி நல்ல கருத்து இல்லாத வசந்தகுமார் அறியாத முகங்கள் அட்டைப்படத்தைப் பற்றி அடிக்கடி கூறும் கருத்து அது என்னப்பா கிறுக்குத்தனமா கோணை எழுத்து என்பதுதான்.

புத்தகத்துக்கான அட்டை அர்த்தபூர்வமாய் இருக்கிறதா கண்ணைக் கட்டி இழுகிறதா என்பதுதான் என் முதல் கவனமாய் இருக்கும். என்னுடைய புத்தகங்கள் மட்டுமன்றி நட்புக்காக நான் மேற்கொண்ட அனைத்து புத்தக தயாரிப்புகளிலும் அட்டை வடிவமைப்பை மனக்கண்ணில் வடித்துக்கொள்ளும் போதே இவ்விரண்டுக்கும் தனி கவனம் செலுத்துவதைத தீவிரமாய் மேற்கொண்டிருக்கிறேன். 

சுரேஷ்குமார இந்திரஜித் 79-80லிருந்தே நெருங்கிய நண்பர் என்பதாலும் கவிதையின் இருண்மை காரணமாய் நுழைய முடியாது தவித்த அதனாலேயே தவிர்த்த பிரமிளை, இல்லப்பா அவந்தான்யா தமிழ்க் கவிதை என்று பல்முளைக்க இயலாது தடித்திருந்த ரசனையின் ஈறைக் கீறிவிட்டவர் என்பதாலும் ஞாநியின் பரீக்‌ஷாவில் இருந்து இலக்கியத்துக்கு வரக்கூடிய சாத்தியமுள்ள ஒரே ஆள் நீதான்யா என்று ஊக்கப்படுத்தியவர் என்பதாலும்  இலை கதை ’ஹிட்’டானதும் வித்தியாசமாய் எழுதுகிறேன் பேர்வழி என்று நொண்ணையாக ஒன்றை எழுதிக் கொண்டுபோய் அவரிடம் காட்ட, ஏய் இதைப் போய் யாருக்கும் படிக்கக் கொடுத்துடாதே இலையினால கெடச்ச பேரு குட்டிச்சுவராயிடும் என்று குட்டியவர் என்பதாலும் அவரது கதைகளைக் காட்டிலும் அவர் மீது மிகுந்த வாஞ்சை உண்டு.  சுரேஷ்குமார் உடபட எவரும் என்னைத் தனிப்பட அழைக்கவில்லை எனினும் அந்த விழாவுக்குச் சென்றதற்கு உண்மையான காரணம் இவைதான். நான் சென்றதே 7.45க்கு. நெடுங்காலம் கழித்து சந்திக்க நேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

கொஞ்ச நேரத்துக்குமேல் ஒரு இடமாய் குந்தமுடியாத ஜெமினி குண்டி என்பதால் சுகுமாரன் தம்மடிக்க வெளியில் போனதை முகாந்திரமாய்க்கொண்டு, புக்பாய்ண்டின் புகைமுக சிட்டவுட்டுக்காய் வந்தேன். பைப்புடன் பாரதி மணி இருந்தார். இவ்வளவு உழைப்பையும் இந்த புத்தகத்தில் போய் போட்டிருக்கிறீர்களே இதற்கு பதிலாய் உங்கள் படைப்பில் போட்டிருக்கலாமே என்று புகைந்தார்.  

எழுதத் தூண்டப்படும்போது மட்டுமே எழுதுவதுதான் என் இயல்பு. இதை எழுத வேண்டும் அதை எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு எழுத நான் தொழில்முறை எழுத்தாளன் இல்லை. சின்மயி விவகாரம் எழுத உந்திற்று எழுதினேன். இது ஆவணப்படுத்தப்பட வேண்டிய காரியம் என்று தோன்றிற்று எனவே புத்தகமாய்க் கொண்டு வருகிறேன். இது இல்லையென்றால் எதுவுமே எழுதாமல் இருந்திருப்பேனே தவிர, இதற்கு பதில் வேறு எதையாவது ’உருப்படியாய்’ எழுதி இருப்பேன் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்றேன். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இது கண்டிப்பாய் எழுதப்படவேண்டியது என்பதையும் மறுக்க முடியாது என்றார் பாரதி மணி அவர்கள். ஆனாலும் இதை இவ்வளவு தீவிரமாய் எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம்தான் என்றார்.

ஒரு ட்விட்டு போட்டதற்காக இரண்டு பேர் ஜெயிலுக்குப்போய், அவர்களது வேலை போய், வாழ்வில் தீராத அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு எதுதான் எழுதப்படவேண்டிய சீரியஸான விஷயமாக இருக்கக்கூடும் என்று எனக்குப் புரியவில்லை. 

இலக்கியவாதி எழுதிய புத்தகம்தான் எனினும் இலக்கியவாதிகளுக்காய் எழுதிய புத்தமல்ல என்று பின்னட்டையில் கொட்டையாய் போட்டுவிடுவதுதான் நியாயமான காரியம் என்று படுகிறது. எவனெவனுக்காகவோ எழுதாமல் உனக்காக எழுது, உலகமே எதிர்த்தாலும்  உனக்கு சரியெனப்பட்டதை மட்டுமே எழுது என்பதல்லவா இலக்கியத்தின் அரிச்சுவடி.

நிகழ்வரங்குக்குள் சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்தில் திரும்ப வெளியில் வந்தேன். புக்லேண்ட் பால்கனி இருளின் பாதுகாப்பு, கொசுக்கடியையும் மீறி நேரத்துக்கு நேரம் பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் வல்லமை வாய்ந்தது. பாரதி மணி இருந்த கதவுச் சட்டகத்தில் இப்போது சலபதியும் பிரபஞ்சனும் இருந்தனர்.

கங்கை கொண்டான் இயக்கிக்கொண்டிருந்த கண்ணீரில் எழுதாதே படத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த 1980-81லிருந்தே பிரபஞ்சனைத் தெரியும். அவரது முட்டை நாடகத்தில் சைக்கிள் இளைஞனாய் நடிக்கும் கல்லூரி மாணவனாய் அறிமுகமாகி அவர் கண்ணெதிரிலேயே எழுத்தாளனாய் விரிந்தவன். எனினும் யார் யாரைப் பற்றிச் சொல்லும் கருத்தையும் சம்பந்தப்பட்டவரிடம் சென்று இன்னார் உங்களைப் பற்றி இப்படிச் சொன்னாரே என்று சொல்லிவிட்டுதான் அன்றைய இரவு உணவையே சாப்பிடுபவன் என்பதாக என்மீது அவருக்கு அபார அபிப்ராயம் இருந்ததால், நாளாக ஆக என் தலையைப் பார்த்ததுமே ரொம்ப உஷாராய் அமைதியாகிவிடுவார். அல்லது கிடைக்கும் முதல் வாய்ப்பில் இடம் விட்டு அகன்று விடுவார். 

இது எந்த அளவுக்குப் போயிருந்தது என்றால், பிரக்ஞை ரவிசங்கர் எங்கப்போனாலும் கூட யாராவுது கேர்ள் ஃப்ரெண்டோடதான்யா போறான். கூட வற பொண்ணு ஒவ்வொருதடவையும் மாறிக்கிட்டே வேற இருக்கும் என்று சும்மா ஜோக்காக, தமிழவன் சொல்லியதைப் போய் ரவிசங்கரிடமே சொல்லிவிட்டேன். அப்புறம் தமிழவன் எப்போதோ என்னைப் பார்க்க நேர்ந்தபோது, ஏன்யா உங்குளுக்கு அறிவே கிடையாதா, சொன்னதைக் கொஞ்சங்கூட மாத்தாம அப்பிடியே அதுவும் ரவிகிட்டயே போயி சொல்லி வைப்பீரா? என்று தலையிலடித்துக் கொண்டார்.

ரகசியம் காப்பாற்றுதல் என்றால் என்ன என்று எனக்குப் புரிந்ததே இல்லை. சி. மோகன் சொல்வார், ஆமா நீங்க அநியாயத்துக்கும் வெளிப்படையா இருக்கீங்க. கொஞ்சம்போலவாச்சியும்  ரகசியங்களை நீங்க வெச்சிக்கலாம். கொறைஞ்சபட்சம் அடுத்தவன் சொல்ற ரகசியத்தையாவுது காப்பாத்தலாம் என்பார். 

இந்த இயல்பைப் பின்னாளில் நான் திருத்திக் கொண்டேன். எப்படி என்றால் சந்திக்கும் எவரும் எதையேனும் சொல்ல வந்தால், சைக்கிள் ஸ்டேண்ட் எச்சரிக்கையாய், சார் இங்கே ரகசியம் காப்பாற்றப்படமாட்டாது, மீறி சொல்வது உங்கள் ரிஸ்க்கு, பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை என்கிற போர்டை எழுதி கழுத்தில் மாட்டிக்கொள்ளத் தொடங்கினேன்.

இந்த போர்டை காலணா பெயராத இலக்கிய உலகில் மட்டுமின்றி மெய் உலகிலும் மாட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த திருச்சி அலுவலக சூப்பிரெண்டெண்டு,

இப்படி சொல்லிக்கிறது பெருமைனு நெனச்சிகிட்டு இருக்கீங்களா? நீங்க இப்ப பொறுப்புள்ள இன்ஸ்பெக்டர். உங்குளுக்கு இமேஜ் முக்கியம். இமேஜ்னாலே பொய்யின்னு அர்த்தம் இல்லை. நீங்க எப்பிடி இருக்கீங்கனு உங்களை ஒவ்வொருத்தரும் கவினிச்சிகிட்டு இருக்காங்க. கணிச்சிகிட்டும் இருக்காங்க. நம்பத் தகுந்தவர்னு உங்க நடத்தையால உங்க இமேஜை நீங்கதான்  உருவாக்கணும். திறமை மட்டும் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. திறமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்க வேணாமா? இப்பிடியே இருந்தா   டிபார்ட்மெண்ட்டே உங்களை ஒதுக்கி ஓரங்கட்டி வெச்சிடும். ரகசிய துறைகள்ல வேலை செய்யிற வாய்ப்பு கிடைக்கலேனா இன்ஸ்பெக்டர் என்கிற பெயர்ல வெத்துக்கு நாலு ரிப்போர்ட்டு போட்டுகிட்டு வெறும் குமாஸ்தாவாதான் காலத்துக்கும் கிடக்கணும் . பேர் வாங்க முடியாது.

ஆயிரம் அறிவுரைகளைவிட வாழ்க்கை கொடுக்கும் ஒரு அடி சிறந்த ஆசான். 

இருட்டு பால்கனியில் சலபதி அசோகமித்திரன் பற்றி எதோ பேச, அந்த காலத்து சம்பவம் ஒன்று நினைவுக்கு வரவே அதைக் கூறினேன். 

அண்ணாசாலை ஆவின் மாடி என்று நினைவு. முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமோ என்னவோ. இந்தக் குற்றிலக்கிய உலகம் நவீனமாகி பார்வையாளர்களுக்கு இப்போதுதான் நாற்காலி பாக்கியம் கிடைக்கிறது. அப்போது, கல்யாண மண்டபம் போல விரிக்கப்பட்டிருந்த பட்டை ஜமுக்காளங்களில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுநாயகமாக சு.சமுத்திரம் உறுமிக்கொண்டு இருந்தார். சாணான் எழுதறதை இவன்க ஏத்துப்பாய்ங்களா? இலக்கியமா அங்கீகரிப்பாய்ங்களா? இந்த பிற்போக்கு எழுத்தாளர்களை, குறிப்பாக அசோகமித்திரனை உதைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ உள்ளே கொந்தளிக்கத் தொடங்கிற்று. இலக்கிய உலகிற்குள் வாசகனாக அப்போதுதான் நுழைந்திருந்த சமயம். விகடன் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் சு.சமுத்திரத்தின் ‘முற்போக்கு’க் கதைகளைப் படித்திருக்கிறேன். பூமணி காட்டும் வாழ்வல்ல அவை. ஆழமற்ற மெலோடிராமாக்களாய்த்தான் தோன்றியிருந்தன. வாழ்வு வெறும் பின்புலமாக மட்டுமே சமுத்திரத்தின் கதைகளில் பயன்பட்டிருக்கும் என்பதால் பெரிதாகக் கவர்ந்ததில்லை.  

பரீக்‌ஷாவின் உறுப்பினனாய் ஆகியிருந்த நேரம்.  ஞாநி மூலமாய் அசோகமித்திரன் நேரடிப் பரிச்சயத்துக்கு வந்திருந்த தருணம். அமியையும் திஜாவையும் படித்தபின் வண்ணநிலவனின் எஸ்தரையும் பூமணியின் ரீதியையும் படித்தபின் சு.சமுத்திரத்தின் எழுத்தெல்லாம் எப்படி ஒருவனைக் கவர முடியும்? இவன்லாம் ஒரு எழுத்தாளனா என்கிற இளக்காரம். இரவு நேரக்கூட்டம் என்பதால் அன்று அசோகமித்திரன் தற்காலிகமாய் தப்பித்தார்.

மறுநாள் காலை கல்லூரிக்குப் போய்விட்டு மதிய வாக்கில் அசோகமித்திரன் வீட்டு வெளிக் கதவின் துருப்பிடித்த கொக்கியை நீக்கையிலேயே டைப்படித்துக் கொண்டிருந்தவர் எழுந்திருப்பது தெரிந்தது. 

வாங்கோ என்றபடியே வீட்டுக் கதவைத் திறந்து மர நாற்காலியைக் காட்டியபடி தட்டச்சு முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

சார் சமுத்திரம் உங்களைப் பத்தி திட்டி பேசிட்டு, உதைக்கணும்னு சொன்னார் சார்.

ஹிஹி அப்படியா. ஆமா என்ன இருந்தாலும் அவர் திடகாத்திரமான நல்ல ஒசரமான ஆள் இல்லையா நல்ல வலுவான கால். அதான் சொல்லி இருக்கார். 

என்று திரும்பவும் சிரித்தார். எனக்கோ அவர் உள்ளூர வருத்தப்பட்டு வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார் என்றே பட்டது. 

எப்பிடி சார் இப்படிலாம் பேசலாம்?

மாமல்லன் எவ்ளோ பாத்தாச்சு. இதைவிட மட்டமால்லாம் சீரியஸ் ரைட்டர்ஸ் விமர்சனம் பண்றேங்கற பேர்ல படு மட்டமா திட்டீருக்கா. 

எல்லா வம்புகளையும் வேறு தேடிதேடி படிக்கத் தொடங்கியிருந்த நேரம். மற்றும் மற்றவர்கள் சொல்கிற இலக்கிய சண்டைகள பற்றி கேள்விப்படத்தொடங்கி இருந்ததால் அவர் யார்யாரைக் குறிப்பிடுகிறார் என்றெல்லாம் மூட்டமாகப் புரிந்தது.

பேச்சு அதிலிருந்து வேறு விஷயங்களுக்குக் கிளைவிட்டுப் ப்ரவிற்று. மதிய நேரம் என்பதால் இருவருக்கும் மாமி காபி கொண்டுவந்து கொடுத்தார். தமது டம்ப்ளரை மேசைமீது வைக்கப்போனவர் டைப்படித்துக் கொண்டிருந்த பேப்பர்களை நகர்த்தி இடமேற்படுத்தியபடி,

ஆ. இதப் பாருங்கோ. இது சமுத்திரம் குடுத்ததுதான். அவர் டிபார்ட் மெண்ட்டு ட்ரான்ஸ்லேஷன் ஒர்க்கு. அவர் நெனச்சா யாருக்கு வேணும்னாலும் குடுக்கலாம். ஆனா அவர் எனக்குதான் ரெகுலரா குடுக்கறார். அவாளோட மீட்டிங்குல அப்பிடியும் பேசறார். அவருக்கு என்ன நிர்பந்தமோ? என்று தீவிரமான தொனியில் சிரிக்காமல் கூறினார்.

கொதிக்கும் இளைஞன் தடவிக்கொடுக்கிற இதத்திற்காய் கழுத்தை நீட்டும் மாடாய் அனுபவித்துக் கொண்டிருக்காமல்  சமுத்திரத்தின் நல்ல பக்கத்தை, அவர் செய்த உதவியைக் கூற வேண்டும் என்று அசோகமித்திரனுக்கு  என்ன அவசியம். 

அரசின் அந்தந்த துறை தொடர்பாக ஆங்கிலத்தில் வரும் செய்திகளைத் தமிழிலும் தமிழில் வரும் செய்திகளை ஆங்கிலத்திலுமாக மொழிபெயர்த்து உயர் மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு வைத்து அவற்றை ஆவணமாகவும் சேமிப்பது அந்த கால வழக்கம். அதற்கு பணம் உண்டு. தீவிர கம்யூனிஸ்டாக இருந்த சூரியதீபன் என்கிற பா.செயப்பிரகாசம் கோட்டையில் பிஆர்ஓவாகவும் இருந்தார். இண்டியன் எக்ஸ்பிரஸ் வேலை போய் வழக்காடிக்கொண்டிருந்த சமயத்தில் பா.செ செய்த இந்த உதவிதான் ஞாநியின் இன்மையை ஒருகட்டத்தில் ஓரளவுக்கு சமாளிக்க உதவியிருக்கிறது. கொஞ்சம் இரு இதை முடிச்சுட்டு வந்துடறேன் என்று 17/2 பீட்டர்ஸ் காலனியில் மொழிபெயர்ப்புக்கு இடையில் ஞாநி சொன்னதே நினைவிருக்கிறது.

என்னை ஆதரித்தே ஆகவேண்டும் என்று சமூகத்தைக் காறித்துப்பிக் கட்டாயப்படுத்தாமல் துறவிபோல் வாழ்வதாய் பம்மாத்தாமல் தன் வாழ்க்கையைச் சுமப்பது தன்னுடைய பொறுப்பு என்று எழுத்தாளர்கள் சுய கெளரவத்துடன் வாழ்ந்த காலம் அது. 

எதிரெதிர் அணியில் இருந்து இலக்கியத்துக்காகவும் கருத்து ரீதியாகவும் சட்டையைக் கிழிக்காத குறையாய் சண்டை போட்டுக் கொண்டாலும் சத்தமே போடாமல் காதும்காதும் வைத்தார்போல் வாய்ப்பு கிடைக்கையில் எழுத்தாளன் சக எழுத்தாளனுக்கு உதவிய காலம் அது.

முப்பது முப்பத்திரண்டு வருடங்களுக்குமுன் நடந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பிரபஞ்சன், ரெண்டு பேருமே பெரிய மனுஷங்க பெரிய விஷயம் என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டபடி இருட்டு பால்கனியிலிருந்து வெளியேறி புக்லேண்டின் வெளிச்சமான இடைவழிக்குச் சென்றார்.