விடுமுறையாக இருந்தாலும் வேலையாக பைக்கில் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தது.சர்ர்ரியான வெயில். வீடு வந்ததும் அசந்து தூங்கிவிட்டேன்.
நேற்றிலிருந்து விட்டுவிட்டு விடுதலைக்கும் வீரமணி சாருக்கும் பதில் சொல்லுமுகமாய் எழுதிக்கொண்டு இருப்பதை இன்றேனும் முடிக்க வேண்டும்.
ஆங்... திரும்புகாலில், பெரியார் திடலின் முகப்பில் இருந்த வாடிய வாழை மரம் கட்டிய பந்தல் கண்ணில் பட்டது.
எழுதும்போது அப்படித்தான் எழுத வேண்டும் அப்போதுதான் நம் ஊரில் எழுத்தாளன் என்று ஏற்பார்கள். இந்த எழுத்தாளப் பயல்களுக்கு மட்டும் அதென்னமோ எல்லாமே எதேச்சையாகவும் தற்செயலாகவுமே நடக்கும். காரனம் கலைஞர்களாம். பிளான் எல்லாம் எதையும் பண்ணமாட்டார்களாம். ஆல் வேய்ஸ் சரஸ் டேன்சிங். ஆட்டோமேடிக்கலி லிட்டரரி ரைட்டிங் போரிங் வித்தவுட் எனி பிளானிங். அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. எங்கெங்கோ சுற்றிக்கொண்டு எங்கோ போனவன் வேலை முடிந்து திரும்பும் போது இங்கிருந்து எதாவது மெயின் ரோடுக்குப் போவது எப்படி என்று கேட்டேன்.
செருப்பால் அடித்தது போல வந்தது பதில்.
உங்களுக்கு எங்கே போக வேண்டும்?
ஆணவம் பொடித்து அடக்கமாய் பதில் சொன்னேன். பெசண்ட் நகர் போக வேண்டும் என்று.
நேரா போயி ரைட் எடுங்க மெயின் ரோடு வரும். அதுல லெஃப்ட் எடுங்க மேம்பாலம் தெரியும். வில்லிவாக்கம் ரூட்டா அண்ணா நகர் வழியாவானு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்.
இவர் வழி சொன்னது ஜென் போல இருந்தது என்று எழுதினால் மார்டர்ன் எழுத்தாளன் பிம்பம் உருவாகி, ஃபேஸ்புக்கில் நாற்பது ஜென் கமெண்ட்டுகளும் நானூறு லைக்குகளும் கிடைக்க வாய்ப்புண்டு.
ஆக பாலத்தில் ஏறும் போது இடப்பக்கமாய் இறங்கி கொன்னூர் சாலையைப் பிடித்தால் அய்யனாவரம் செல்லலாம் எனத் தோன்றியதும்தான் வழியில் பெரியார் திடலை எட்டிப் பார்த்தால் என்ன என்று குறுக்கேத்தமான எண்ணம் உண்டாயிற்று என்பதுதான் நிர்வான உண்மை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். நாம் குள்ளலார்தானே எனவே பெரியார் திடல் முகப்பில் வாடிய வாழை மட்டையைக் கண்டதும் மனம் எள்ளலால் துள்ள, குறுகுறுப்பில் விஷமத்தனம் உதட்டை க் கோணலாக்க உள்ளே சென்றேன்.
திவ்ய ஸதலங்களுக்குச் சென்றால் உண்டியலில் ஏதாவது போட வேண்டாமா? எனவே வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு முதலில் தெரிந்த புத்தகக் கடை நோக்கிப்போனேன். கடைக்குள் போகுமுன் வெளியிலிருந்தபடியே கண்ணாடியில் தெரிந்த புத்தகங்களை நோட்டம் விட்டேன். நம் டாப்பிக்குக்கும் பர்சுக்கும் தோதாயிருக்கும் என்கிற பட்சி சொல்படி உள்ளே நுழைந்து குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துப் பின்பக்கம் பார்த்தேன். நயமான விலை 5 ரூபாய். புத்தகத்தை வெகுஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளாவிட்டால் பட்சியின் இறகு போல பறந்துவிடும் கெனத்தில் இருந்தது. முகப்போடு சேர்த்து மொத்த புத்தகமும் 16 பக்கங்கள். வெளியில் கலர் உள்ளே கறுப்பு வெள்ளை. இந்தக் கட்டுரை இந்தப் புத்தகத்தைவிட பெரிதாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம்.
புத்தகத்துடன் வெளியில் வந்து வண்டி எடுக்கையில் பிரமாதமாக உருப்பெற்றிருக்கும் இடத்தை ஒரு ஃபோட்டோ எடுத்தால் என்ன என்று உள்ளூர ஆசை. போட்டோ எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது என எங்கேனும் எச்சரிக்கை இருக்கிறதா என நானிருந்த இடத்திலிருந்து பார்த்துக் கொண்டேன். என் கண்ணுக்கு எதுவும் தட்டுப்படவில்லை.
என்னதான் பார்ப்பனர் அல்லாதார் எல்லோருக்கும் திறந்துகிடக்கும் எதைய்மே ஓப்பனாய் பேசிய பெரியாரின் திடல் என்றாலும் முன் அனுமதியின்றி படம் எடுத்தது அதுவும் பாப்பாரப்பயல் படம் எடுத்தது தவறு நாங்கள் இலவசமாய் விளம்பரம் வாங்கிக் கொள்வதில்லை, ஊர்பேர் தெரியாத விமலாதித்த மாமல்லன்களுக்கு நரசிம்ம அய்யங்கார் எனத் திட்டி ஓசி விளம்பரம் கொடுப்பதே எங்கள் கொள்கை எனவே இந்தப் படங்களை நீக்க வேண்டும் என ஆசிரியர் சொன்னால் நீக்க சித்தமாய் இருக்கிறேன்.
வண்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து சிக்னலில் வலப்பக்கம் திரும்பி எக்மோர் செல்லும் பாலத்திலும் ஏறிவிட்டவனுக்கு சுவாரசியமான எதையோ விட்டுவிட்டது போல உறுத்தல். திரும்ப திடலுக்கு வந்து, இம்முறை, சற்று உள்ளே போய் இடது பக்கம் ஆவின் பால் கடையைத் தாண்டி இருந்த கட்டிடம் முன் வண்டியை நிறுத்தினேன்.
என் கல்லூரி நாட்களில் பந்தல் போட்டு மேடை இருந்த இடம்தான் இப்போது பெரியார் மையம் என்கிற கல்யான மண்டபமாய் ஆகி இருக்கிறது போலும். இஸ்லாமிய திருமண வரவேற்பு தெளிவாகத் தெரிந்தது. ஹஜ் யாத்திரை சென்று வந்தவர் குடும்பத் திருமணம்.
இஸ்லாமியர்களின் திருமணம், அதுவும் ஹஜ் யாத்திரை சென்று வந்தவர் வீட்டுத் திருமணங்கள்கூட கடவுள் மறுப்புத் திருமணங்கள் என்று இன்றுதான் தெரிய வந்தது.
அல்லாஹ் என்பதே இறைவன்தான் என்று நான் இதுநாள் வரை நினைத்திருந்தது எவ்வளவு பெரிய தவறு.
வாடகைக்கு வீடு கொடுக்க உங்கள் மதமோ ஜாதியோ எனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என்று விளம்பரம் கொடுத்தவன்தான் நான். என் வீடு இன்னும் காலியாக இருக்க இதுவும் ஒரு காரணமோ என்னவோ.பிராமணாளுக்கு மட்டும் என்று பச்சையாகச் சொல்லாமல் வெஜிடேரியன் ஒன்லி என நாசூக்காக விளம்பரம் செய்திருந்தால் இந்நேரம் எனக்கு நான்கு மாத வாடகை கிடைத்திருக்குமோ என்னவோ. ஆனால் அப்படியெலாம் சாதுர்யமாய் இருக்க நான் என்ன நாத்திக ஹோல்சேலரா? நான் வெறும் நரசிம்ம அய்யங்கார்தானே வீரமணி அய்யா!
என் பிரச்சனை இஸ்லாமியர்களோ இஸ்லாத்தின் ஐந்து வேளை ‘இறை’ தொழுகையோ அல்ல. அது அவர்களின் விருப்பம். தேர்வு. மட்டும்ல்ல அரசியல் நிர்ணயச் சட்டத்தின் படி இந்நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் எவ்வித பேதமுமின்றி வழங்கப்பட்டுள்ள உரிமை.
அதே போல் அதே அரசியல் நிர்ணயச் சட்டமே நாத்திகவாதம் பேசுவதையும் சுதந்திரமாய் சிந்திக்கும் உரிமையையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியிருக்கிறது வரைமுறைக்கு உட்பட்டு.
அதை எதிர்த்து, விமர்சிக்கும் உரிமையையும் போலித்தனங்களை உரித்தெரியும் உரிமையையும் அதே அரசியல் நிர்ணயச் சட்டம் எனக்கும் வழங்கியுள்ளது.
கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி
கடவுளை நம்புபவன் முட்டாள்
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்
என் கேள்வி அல்லாஹ் கடவுளா இல்லையா?
//அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. இது இஸ்லாத்தின் முதல் முழக்கம். ஈமான் என்ற இறைநம்பிக்கையின் முதற்பகுதியும் இதுதான். இதன் பொருள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வழிபடவோ, கீழ்ப்படியவோ கூடாது என்பதாகும்.
முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள். இது இந்தப் பிரகடனத்தின் இரண்டாம் பகுதி. இதன் விசாலமான பொருள்: இறைவனைக் கீழ்ப்படிவது அவனுக்கு மட்டுமே அடிபணிவது என்பது அவனது திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளத்தில் பதித்து நாடி நரம்புகளிலெல்லாம் உறைய வைத்து தன் வாழ்வை வழிநடத்துபவனே முஸ்லிம் எனப்படுபவன்.//
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 6
முரண்பாடுகள் இவ்வலவு சுலபமாய் முழுங்கப்படக் கூடியவையா?
பல்லாண்டுகள் கழித்து உள்ளே நுழைந்ததில் பல பழைய நினைவுகள். பச்சையப்பன் நாட்களில் பெரியாரைப் படிக்க சில முறை சென்ற இடம்தான். 80-81ல் அங்கே பரீக்ஷா நாடகம்கூடப் போட்டு அதில் நடித்ததாகக்கூட நினைவு. பிரபஞ்சனின் முட்டை நாடகமாக இருக்கலாம். அதுதான் பல மேடைகள் கண்ட பரீக்ஷாவின் பெரிய ஹிட். சரிபார்த்துக்கொள்ள ஞாநியை அலைபேசியில் அழைத்தேன். தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாய்க் கூறிற்று. பத்மாவை அழைத்தேன். ஞாநி ஐரோப்பா சுற்றுப் பயணத்தில் இருப்பதாய் தெரிவித்தாள். அவர் எழுதிய ஓ பக்கங்களை எவருக்கும் தெரியாமல் ரகசியமாய் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து புத்தகத்தையும் ரிலீஸ் செய்து சுற்றுப்பயணம் போகிற அளவுக்கு உலக எழுத்தாளர் ஆகிவிட்டார் போலும். நினைவில் சாரு வந்து போனார். மைலாப்பூர் பக்கம் தீய்ந்து புகையும் நெடி அடித்தது. சம்சயங்களுக்காகவெல்லாம் தீயணைப்பு நிலையத்தை தொந்தரவு செய்யலாகாது என்கிற பொறுப்புணர்வுடன் தவிர்த்தேன்.
வேண்டுமானால் பரீக்ஷாவின் சில பெயர்களைக் கூறி விசாரிக்கலாம் என்றாள் பத்மா.
வேண்டவே வேண்டாம் என்று கைபேசியை வைத்து விட்டேன்.
சாரமில்லை. பரீக்ஷா நாடகமென்ன பிசாத்து. அதற்குப்பின் பெரியார் திடலில் ஆவியெழுப்பும் பெந்தகொஸ்தே கூட்டமே நடக்கத் தொடங்கிவிட்டதே :)
ஐயையோ விடுதலை வீரமணி சாரிடம் மன்னிப்பு கேட்கத்தான் இதை எழுதவே தொடங்கினேன் கடைசியில் அதை மறந்துவிட்டேன் பாருங்கள்.
//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி
இது ’உண்மை’ என்கிற பட்சத்தில், இல்லை என்று நிரூபிக்கப்படும்வரை, செவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற வடிவேலுவின் நகைச்சுவை போல, ஊரரிந்த பிரமுகரான தாங்கள், இவ்வளவு அற்பமாகப் பொய் சொல்ல மாட்டீர்கள் என்கிற மூட நம்பிக்கையின்பேரில், தாங்கள் சொல்வதே சாட்சாத் உண்மை என ஏற்றுக்கொண்டு, வழக்கமாக என் பிறந்தநாளன்று, வேறு முக்கியமான வேலைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், (குல தெய்வமான சோளிங்கர் நரசிம்மர் கோவில், தொலைவிலும் மலைமேலும் இருப்பதால்), அழகிய சிங்கராய் ஸ்ரீ நரசிம்ஹர் பின் வாசலில் அமர்ந்திருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று, அங்கிருக்கும் துவஜஸ்தம்பம் முன்னால், ’என்’னைத் துறந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைப் போல, உங்கள் முன் நெடுஞ்சான் கிடையாக விழுந்து, அவ்வளவு பெரியவர் நடக்காத ஒன்றை நடந்ததாகப் பொய்யா சொல்லி இருக்கப்போகிறார், அல்லது இன்னமும் திராவிட பாரம்பரியத்தின் வம்சாவளியாகவே தன்னைக் கருதும் என் நண்பருக்கு அவர் மதிக்கும் பெரியவரை ’இழுத்து’ தங்களை இழித்துரைக்க அப்படியென்ன காழ்ப்பு இருந்துவிடப்போகிறது என்கிற நம்பிக்கையின் பேரில், என்னதான் ‘நம்பினால் நம்புங்கள்’என டிஸ்கிளெய்மரை தலைப்பிலேயே வைத்து எழுதி இருந்தாலும் தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கிற பட்சத்தில் என்கிற ஒன்றைத் தவிர மற்றெந்த நிபந்தனைகளையும் முன்வைக்காது, தங்களது பெயர்த்திகளின் பிறப்புச் சான்றிதழ்களைச் சரிபார்க்காது எழுதிய தவறுக்காக என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இது ’உண்மை’ என்கிற பட்சத்தில், இல்லை என்று நிரூபிக்கப்படும்வரை, செவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற வடிவேலுவின் நகைச்சுவை போல, ஊரரிந்த பிரமுகரான தாங்கள், இவ்வளவு அற்பமாகப் பொய் சொல்ல மாட்டீர்கள் என்கிற மூட நம்பிக்கையின்பேரில், தாங்கள் சொல்வதே சாட்சாத் உண்மை என ஏற்றுக்கொண்டு, வழக்கமாக என் பிறந்தநாளன்று, வேறு முக்கியமான வேலைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், (குல தெய்வமான சோளிங்கர் நரசிம்மர் கோவில், தொலைவிலும் மலைமேலும் இருப்பதால்), அழகிய சிங்கராய் ஸ்ரீ நரசிம்ஹர் பின் வாசலில் அமர்ந்திருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று, அங்கிருக்கும் துவஜஸ்தம்பம் முன்னால், ’என்’னைத் துறந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைப் போல, உங்கள் முன் நெடுஞ்சான் கிடையாக விழுந்து, அவ்வளவு பெரியவர் நடக்காத ஒன்றை நடந்ததாகப் பொய்யா சொல்லி இருக்கப்போகிறார், அல்லது இன்னமும் திராவிட பாரம்பரியத்தின் வம்சாவளியாகவே தன்னைக் கருதும் என் நண்பருக்கு அவர் மதிக்கும் பெரியவரை ’இழுத்து’ தங்களை இழித்துரைக்க அப்படியென்ன காழ்ப்பு இருந்துவிடப்போகிறது என்கிற நம்பிக்கையின் பேரில், என்னதான் ‘நம்பினால் நம்புங்கள்’என டிஸ்கிளெய்மரை தலைப்பிலேயே வைத்து எழுதி இருந்தாலும் தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கிற பட்சத்தில் என்கிற ஒன்றைத் தவிர மற்றெந்த நிபந்தனைகளையும் முன்வைக்காது, தங்களது பெயர்த்திகளின் பிறப்புச் சான்றிதழ்களைச் சரிபார்க்காது எழுதிய தவறுக்காக என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.