29 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 3

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// தி.க. வீரமணி

மானமிகு ஆசிரியர் திரு.வீரமணி அய்யா அவர்களின் இந்த அறிக்கைக்கு மாறாக, திருமணம் ஆகக்கூடிய பெயர்த்திகள் யாரேனும் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி இருக்கின்றன என்பதை அனுமானத்தின் அடிப்படையில் விளக்கி இருந்தேன். 

இதற்கு வந்த எதிர்வினைகளில் சில, 

1. //புரூப் பத்தலை// 

சரியாக மெய்ப்பு பார்க்கவில்லையோ? அதனால், வெளியிட்ட கட்டுரையில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருந்துவிட்டனவோ என்றுதான் முதலில் தோன்றியது. சொன்னவரிடம், சுட்டிக்காட்டி இருக்கலாமே என்றதும், அசைக்க முடியாத ஆதாரங்களை நீங்கள் முன்வைக்கவில்லை என்றார்.

அந்த உரையாடல் நடந்திருக்கவே சாத்தியமில்லை என்பதை சாதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட வாதம்தான் திரு.வீரமணி அவர்களின் அறிக்கையான, //முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// என்பது. அதை அசைத்துப் பார்ப்பதுதான் அந்த கட்டுரையில் செய்ய முடிந்த காரியம்.

மற்றபடி, 2000த்தில் ’பெரியவருக்கும்’ மானமிகு ஆசிரியர் அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ வீடியோ ஆதாரங்களை வெளிடச்சொல்லிப் பகுத்தறிவாளர்கள் கேட்பார்களேயானால் இந்த முழுமூடனால் எப்படி வெளியிடமுடியும்?

2. //ஆதாரமில்லாத அவதூறு//

கடவுள் இருக்கிறது / அல்லது இல்லை என்கிற வாதப் பிரதிவாதங்கள் கூட ஆதாரமற்ற அவதூறுகள்தாம். தமிழ்க் கடவுள் முருகன் இப்படித்தான் இருப்பார் என்று நீ பார்த்தாயா என்று கேள்வி கேட்டு எளிதாக வீழ்த்திவிட்டு திருவள்ளுவர் இப்படித்தான் இருப்பார், தமிழ்த்தாய் இப்படித்தான் இருப்பார் கண்ணகி இப்படித்தார் இருப்பார் என்று பகுத்தறிந்து சிலை எழுப்பி பெருமைப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உலகத்தின் உண்மையான ஒரே கடவுளான அல்லாஹ் உருவமற்றவன் என்னும் இஸ்லாத்தை நோக்கி, அல்லாஹைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்றும் நாள்தோறும் மேற்கு திசை நோக்கி அய்ந்து வேளை தொழுவேண்டும் என்கிற மார்க்கத்தைப் பார்த்து அல்லாஹை நம்புபவன் முட்டாள் என்றும் இதைத் தவறாது கடைபிடிப்பவனே உண்மையான முசல்மான் என்கிற, கடவுள் சொல்லக் கேட்டு திருக்குரானை எழுதிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹை பரப்புபவன் அயோக்கியன் என்றும் மானமிகு வீரமணி அவர்கள் கூறுவாரா?

உருவ வழிபாட்டை, உருவத்துடன் உள்ள கடவுளர்களைக் கும்பிடும் இந்துக்ளைத்தான் வீரமணி கண்டிக்கிறார். நம் அல்லாஹைப் பற்றியோ அல்லது நம் ஏசுவைப் பற்றியோ மூச்சே விடுவதில்லை என்று எண்ணிக்கொள்வதால்தானே பெரியார் திடலில் இஸ்லாமியத் திருமணங்கள் நடக்கின்றன. அல்லாஹைத் தவிர வேறு எவரும் கடவுளே இல்லை. அல்லாஹ் மட்டுமே கடவுள் என்று கூறும் முசுலீம்களால் இந்த முரணை எப்படி எந்த உறுத்தலுமின்றி எடுத்துக்கொள்ள முடிகிறது.

இஸ்லாமியத் திருமணக் கூடங்களின் போதமை காரணமாகவும் வீரமணி நிர்வகிக்கும் கல்யாண மண்டபம் விசாலமாய் இருக்கிறது என்கிற நடைமுறை செளகரியத்துக்காகவும்கூட வசதியான முஸ்லீம்கள் இந்த நாத்திகக் கூடத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் போலும்.

இப்போதிருக்கும் பிரமாதமான கட்டிடமாக இல்லையெனினும் பந்தல் போட்டு, பெரிய அளவில் கூட்டம் நடத்துகிற இடமாகத்தானே இருந்தது எப்போதும் இருந்தது பெரியார் திடல். இறைமறுப்புத் திருமணங்கள் அல்லாத 'பிற மதச் சடங்குகள்படி நடக்கும் திருமணங்கள்' பெரியார் காலத்திலோ அல்லது மணியம்மையார் காலம் வரையிலோ கூட பெரியார் திடலில் நடந்திருக்கின்றனவா?

இறைமறுப்பை, இந்துக்களிடம் பெரியார்  முன்வைத்ததற்குக் காரணம், பெரும்பான்மை இந்துக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கி சுய மரியாதையை ஊட்டி அனைத்து இடங்களிலும் நீக்கமற வியாபித்திருந்த பிராமணச் சிறுபான்மையை ஓரம்கட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தானே? சமூகத்தில் பிராமணன் பிரதானமாக இருக்கக்காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகள். அவை இயல்பானவை என்கிற மூட்டம் கடவுளின் பெயரால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கடவுளின் பெயரால் அதைக் கட்டமைத்தவன் பார்ப்பான் எனவே பார்ப்பானை, பார்ப்பான் உருவாக்கிய மதத்தை, அவன் உருவாக்கிக் காலம்காலமா அவன் கட்டிக்காக்கும் கடவுளை, கடவுளின் இருப்பை கேள்விகேள் என்றார். 

படிப்பறிவற்ற பகுத்தறிவற்ற காட்டுமிராண்டி தான் பார்த்து பயந்த தன்னைத் தாக்க வல்லமையுள்ள இயற்கையின் அம்சங்கள் அனைத்தையும் கடவுளாகக் கற்பித்துக்கொண்டு கும்பிடத் தொடங்கினான். இதிலிருந்து பிறந்ததுதான், கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி.

தான் பார்த்து பயந்த கடவுளை, சமூகத்தைப் பயமுறுத்தித் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காகத் தான் வைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அறியாது அப்பாவித்தனமாய் கடவுளை நம்புபவன் முட்டாள்.

இந்த சூழ்ச்சியை சூதினை வெளிப்படையாக எவரும் அறிந்துவிடாதவண்ணம், கடவுளின் பெயரால் புனைகதைகளை உருவாக்கி, சாதிய ஏற்றத்தாழ்வுகள் காலகாலமாய் இருந்து வந்தன அவை என்றென்றைக்கும் இருக்கும் என்பதை நியாயப்படுத்த கடவுளை பரப்புபவன் அயோக்கியன்.

எனவே
கடவுள் இல்லை! இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி 
கடவுளை நம்புபவன் முட்டாள் 
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்

என்று பெரியார் கூறியதையே  காலத்துக்கும் சொல்லிக்கொண்டு ஆனால் பிற மதங்களின் கடவுள்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் பகுத்தறிவா?

வாழ்நாள் முழுக்க நாத்திகராய் இருந்து பிரச்சாரம் செய்த பெரியார் தாசன் கடைசி காலத்தில் அப்த்துல்லாஹ் என்கிற இறை நம்பிக்கையாளராக மதம் மாறி இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டது சிறந்த காமெடி. ஆனால் நீங்கள் இகழ்வதால் நான் தமிழ் ஹிந்துவிலோ தமிழ் பிராமினிலோ சேர்ந்துவிடும் காமெடியெல்லாம் செய்துவிடமாட்டேன்.

//மற்றச் சமூகங்களிலும், நாடுகளிலும் கூட, மூட நம்பிக்கைகள் உண்டு என்கின்றனர் - ஒப்புக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை என்னிடம் அழகாகச் சொன்னார்: “முட்டாள்தனமும், மூட நம்பிக்கையும் என்ன உன் நாட்டுக்கு, உனது மக்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பது போல ஏன் நினைக்கிறீர்கள்? அது உலகத்திற்கே சொந்தம்” என்றார்கள்.

அதை நன்கு புரிந்தவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்//

பக்கம் 11 மூட நம்பிக்கைகள் - கி. வீரமணி

ஆவி எழுப்பி மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் அந்த ஆவிகளையும் ஈடுபடுவதால்தான் பெந்தகொஸ்தே கூட்டங்களை நடத்த பெரியார் திடல் பகுத்தறிவோடு திறந்துவிடப்பட்டதா மானமிகு ஆசிரியர் அவர்களே?

//பகலில் உள்ள 12 மணி நேரத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு அதிகமாக அதை வீணடிக்காமல் பயன்படுத்தி வெற்றி காணுகிறோமோ அதைப் பொறுத்துதானே தனி மனிதர்களின் - சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அமையக்கூடும்.//

பக்கம் 2 மூட நம்பிக்கைகள் - கி. வீரமணி

அடுத்து 3ஆம் பக்கத்தில் ஜப்பானும் ஜெர்மனியும் பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பதை விதந்தோதி,

//இது எப்படி சாத்தியமாயிற்று? “ராகு காலம், எம கண்டம்” பார்த்து மூன்று மணி நேரம் ஒரு நாளில் வீணாக்கியிருந்தால் இப்படி இவர்கள் வளர்ந்திருக்க முடியுமா?//

என்று பயங்கர அறிவோடு கேட்டுவிட்டு, அடுத்து கணிதமேதையாக அவதாரம் எடுத்து அரட்டுகிறார் ஆசிரியர் அய்யா!

//ஒரு நாளைக்கு 3 ம்ணி நேரம்.
365 நாளைக்கு 365  X 3 = 1095 மணி நேரம் என்றால், இது எவ்வளவு பெரிய தேசீய விரயம்? எண்ணிப் பார்க்கிறார்களா? நம் மக்களும், செய்தி நாள் பலன், ராசி பலன், காலண்டர்களை வெளியிடும் ஏடு நடத்துவோரும்?//

ஒவ்வொரு நாளும் அய்ந்து வேளை ’இல்லாத கடவுளை’த் தொழ நேரம் ஒதுக்குவது வீணடிப்பா இல்லையா?  அப்படி நேரத்தை வீணடிப்பதால் வியாபாரம் கெட்டு இஸ்லாமியர்கள் வீதிக்கு அல்லவா வந்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை. பாய் இப்போது கடையடைத்துவிட்டு தொழுகைக்குப் போயிருப்பார் என்று அவர்கள் திரும்பிவந்து கடை திறக்கக் காத்திருக்கும் இந்துக்கள் எல்லாம் மடையர்கள் இல்லையா?

ஆர்.எஸ்.எஸ். காரனைத்தவிர இந்துக் கடை முஸ்லீம் கடை என்று வித்தியாசம் பாராட்டுவோர் அநேகமாய் எவருமில்லை. போலவே, எதற்கெடுத்தாலும் பார்ப்பான் என்ப் பாரபட்சம் பார்ப்பவர் திராவிடர் கழகத்தவர் தவிர பிராமணர் அல்லாதாரில் எவருமில்லை.

ராகு காலம் எம கண்டம் பார்க்கிற எவனும் கை காலைக் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் சும்மா உட்கார்ந்திருப்பதில்லை. ராகு காலம் எம கண்டம் வருவதற்கு முன்னால் வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டால் அல்லது காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும் என்கிற சமரசத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர். இதற்குக் காரணம் உங்கள் பிரச்சாரத்தால் பெற்ற விழிப்புணர்வு அல்ல. அவசர வாழ்வின் நெருக்கடி அவர்களை இப்படியான நிலை எடுக்க அவர்களை நெருக்கியிருக்கிறது என்பதுதான் நிஜம்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் போய் ராகு காலம் எமகண்டம் போன்ற மூட நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவதைவிட,

//The origins of the Jinn can be traced from the Qur'an and the Sunnah. Allah says:

"Indeed We created man from dried clay of black smooth mud. And We created the Jinn before that from the smokeless flame of fire"
(Surah Al-Hijr 15:26-27)//

ஜின் என்கிற தேவதைகள் பற்றி இஸ்லாமியப் பெரும்பான்மையிடம் பேசி அப்படியெல்லாம் ஏதுமில்லை இதெல்லாம் இஸ்லாத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் முதலில் இதைக் கைவிடுங்கள் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்வது பிழைக்கிற வழியில்லை என்று பகுத்து அறிந்து நடந்துகொள்வதுதான் ’வீரமணி பாப்பானுக்கு சாவுமணி’ எனப் புகழப்படும் மானமிகு ஆசிரியர் அய்யாவின் பகுத்தறிவு.

இப்படியாக இரட்டை வாழ்வு வாழ்பவர் கண்டிப்பாக ’ராகு காலம்’ பார்த்திருக்கவே மாட்டார் என்று நம்புவது கூட ஒருவகை மூட நம்பிக்கைதான் இல்லையா? நான், கொள்கையும் வாழ்வும் வேறுவேறாய் இல்லாது வாழ்ந்த ’பெரியவர்’ வார்த்தையை நண்பன் மூலம் கேள்விப்பட்டதை நிஜம் என நம்புகிறேன். எனவேதான் நம்பினால் நம்புங்கள் என்று தலைப்பு வைத்தேன். நீங்கள் இந்துக்களுக்கு ஒன்றும் இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் கிறித்துவர்களுக்கு ஒன்றுமாய் பல ஆக்டிங் கொடுக்கும் வீரமணியை நம்புகிறீர்கள். இதில் அவரவர் சொல்லும் செயலும்தான் ஆதாரம்.

பெரியார் வாழ்விலிருந்து பரமஹம்சரின் குட்டிக்கதை போன்றதொரு நிகழ்வு.

தந்தை பெரியார் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்திலிருந்து செருப்பொன்று அவரை நோக்கிப் பறந்து வந்து பக்கத்தில் விழுந்தது. அருகில் இருந்தோர் பதறினர். அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி கையமர்த்தி விட்டு, ஒற்றைச் செருப்பை எடுத்து தமக்குப் பக்கத்தில் பத்திரமாய் வைத்துக்கொண்டு பதட்டமே படாமல் தமது வெங்காய வெடிகளைத் தொடர்ந்து வீசத்தொடங்கினார் பெரியார்.

கூட்டம் முடிந்து ரிக்‌ஷா வண்டியில் ஏறியவர், கைவண்டிக்காரரிடம், ‘அந்தப் பாலத்து வழியா போ’ என்றார். எதிர் திசையில் ஏன் போகச் சொல்கிறார் எனக் குழம்பினாலும் அய்யா சொன்னால் அதில் எதாவது அர்த்தமிருக்கும் என அந்த வழியாகவே வண்டியை இழுத்துக்கொண்டு போனார் ரிக்‌ஷாக்காரர். சற்று தூரம் சென்றதும் ‘நிறுத்து நிறுத்து’ என்றார் பெரியார். கீழே இறங்கி அங்கு கிடந்த ஒற்றைச் செருப்பை எடுத்து தம்மிடம் இருந்ததுடன் ஜோடி சேர்த்து வைத்துக் கொண்டாவர், ’இப்ப நம்ப எடத்துக்குப் போலாம் போ’ என்றார். வியந்து பார்த்துவிட்டு இழுத்துக்கொண்டு போன கைரிக்‌ஷாக்காரரிடம் சொன்னார் பெரியார். ‘மேடையில வந்து விழுந்தப்பவே பாத்தேன். செருப்பு புதுசா இருந்துச்சி.. அந்தப் பாலத்துப் பக்கத்துலேந்துதான் வந்தாப்புல தோணிச்சி அதான் அங்க போவச்சொன்னேன். புதுசா வாங்கினது ஆச்சேன்னுகூடப் பாக்காம எதோ ஆத்திரத்துல ஒத்தை செருப்பை எடுத்து வீசிட்டான். இன்னோன்னுத்தைக் கழுத்துலையா மாட்டிக்க முடியும் அங்கதான் கெடக்கும்னுதான் அங்க போவச் சொன்னேன். கூட்டம் பேசினதுக்கு நன்கொடை குடுத்துட்டுப் போயிட்டான் பாரு’

நரசிம்ம அய்யங்கார் என்று எனக்கு நாமம் பொட்டு பன்றியின் படத்தையும் போட்டு கரசேவை செய்துகொண்டு புளகாங்கிதப் பட்டுக்கொள்ளும் வீரமணியின் குஞ்சாமணிகளுக்கு ஒரு வார்த்தை. இஸ்லாத்தில் வேண்டுமானால் ’பன்றி’, தீண்டத்தகாத விலங்காக இருக்கலாம். இந்துக்களிடம் அதுதான் நோண்டி நொங்கெடுக்கும் வராக அவதாரம் என்பதை உங்களை அறியாமல் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சொல்லைச் சிரமேற்கொண்டு செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

உங்கள் பகுத்தறிவு ஆசான் அறிவுமிகு வீரமணி அவர்கள் ஊர்பேர் தெரியாத எனக்கு இலவச விளம்பரம் கொடுத்தார் நீங்கள் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருக்கிறீர்கள். இருவருக்கும் மிக்க நன்றி.

வெம்பினால் வெம்புங்கள் 2            (இன்னும் வரும்) வெம்பினால் வெம்புங்கள் 4