சத்ரபதி வெளியீடு என்ற பெயரிலான என் பதிப்பகத்தின் மூலம் அறியாத முகங்கள் என்கிற 11 கதைகள் கொண்ட என் முதல் சிறுகதைத் தொகுப்பை 1983 டிசம்பரில் 8/- ரூபாய் விலை வைத்து 1200 பிரதிகள் வெளியிட்டேன். 600 பிரதிகள் நூலகத்துக்குப் போக, 90களுக்குள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் என்கிற 9 கதைகள் உடைய இரண்டாவது தொகுப்பும் சத்ரபதி வெளியீடாக 1986 டிசம்பரில் 10/- ரூபாய் விலையில் 1200 பிரதிகள் வெளியானது. நூலகத்துக்குப் போனது போக அள்ள அள்ளக் குறையாது இருந்துகொண்டே இருந்தவற்றை கண்ட இடங்களிலும் ’தள்ளி’ பெரியவர் ஒருவர் உதவியால் பல்லாண்டுகளில் விற்றுத் தீர்ந்தது
உயிர்த்தெழுதல் என்னும் பெயரில் 7 கதைகள் அடங்கிய தொகுப்பு 1994 டிசம்பரில் 30/- ரூபாய்க்கு வெளியாயிற்று. நூலகத்திலிருந்தும் க்ரியாவின்/திலீப் மூலம் விற்ற 30-40 பிரதிகளில் இருந்தும் கிடைத்தது தவிர நயா பைசா பெயரவில்லை. கோவை விஜயா பதிப்பகம் (50+50) வேலாயுதம் அவரது சீமந்த புத்திரன் என பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டேன். மதுரையில் ஒரு நாய் எனப் பெரும்பாலும் எந்த நாயும் விற்ற புத்தகங்களுக்கான பணம் மட்டுமல்ல அனுப்பிவைத்த பார்சல் செலவைக் கூடக் கொடுக்கவில்லை. எந்த நாயின் கையைபோய் நான் உடைப்பது.
இன்னொரு நண்பரும் கடன்கொடுக்க முன்வந்தார் என்பதால், நண்டு கொழுத்து வளையில் தங்காமல், அறியாத முகங்களின் இரண்டாம் பதிப்பை ஆஃப்செட்டில் அடித்து ரூபாய் 30/-க்கு 1200 காப்பி வெளியிட்டது. நூலகம் /நூலகத் திருவிழாவில் கொஞ்சம்போல விற்றன.
இவ்விரண்டும் 300 / 400 பிரதிகள் மீதமிருக்கவே ஒருமுறை கடுப்பாகி எடைக்குப் போட முடிவு செய்திருப்பதாய் முன்றில் மகாதேவனிடம் தெரிவித்தேன். உங்கள் எழுத்தின்மீது உங்களுக்கே மதிப்பில்லையா என்று கோபப்பட்டார். அதீத மரியாதை இருப்பதால்தான் வாசகனிடம் கொண்டுசெல்ல இயலாமை காரணமாகத்தான் வீடு மாறும்போதெல்லாம் அதை வீட்டின் மூலையில் கிடத்தி, பார்க்கப்பார்க்க ரத்தக் கண்ணீர் வருகிறது என்றா சொல்ல முடியும். விற்ற காசைக் கொடுத்த மூன்று அபூர்வ மனிதர்களில் அவரும் ஒருவர் எனவே அவரையும் பகைத்துக்கொள்ளல் விவேகமில்லை.
மூன்றுமாத ஆறுமாத இடைவெளியில் GPFம் அலுவலகக் கூட்டுறவு சொசைட்டி லோனுமாகப் போட்டு, புத்தகம் போட நண்பர்கள் கொடுத்த கடனை அடைத்தேன்.
16 ஆண்டு இடைவெளிக்குப் பின் 2010 ஆகஸ்ட் 16ல் நான் இணையத்தில் எழுதத்தொடங்கிய சமயத்தில் அகநாழிகை பொன் வாசுதேவனின் முயற்சியால் அவ்வாண்டு டிசம்பரில் எனது அத்துனைக் கதைகளையும் ஒன்றாக தொகுத்து விமலாதித்த மாமல்லன் கதைகள் என்கிற பெயரில் ரூபாய் 180/-க்கு உயிர்மை வெளியிட்டது. இன்னும் எத்தனைப் பிரதிகள் தங்கியுள்ளன அதனால் உயிர்மைக்கு என்ன நட்டம் என்கிற விபரங்கள் மனுஷ்ய புத்திரனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வெளியிட்டால் அந்த நட்டத்தை ஈடுகட்ட செக்குடன் தயாராய் இருக்கிறேன் மனுஷின் அன்பு மட்டும் பஞ்சமின்றி இன்றுவரை கிடைத்து வருகிறது. நன்றி.
2012 டிசம்பரில் சின்மயி விவகாரம் - மறு பக்கத்தின் குரல் என்று இணையத்தில் எழுதி வெளியிட்ட கட்டுரைகளைத் திரும்பவும் சத்ரபதி வெளியீடாக 600 பிரதிகள் அச்சிட்டு கிழக்கு பதிப்பகத்தின் உதவியுடன் 120/- ரூபாய்க்குக் கொண்டு வந்தேன். ஒருவர் 50ம் மற்றொருவர் 75மாக வாங்கியது உட்பட கிட்டத்தட்ட 500 பிரதிகள்வரை அநேகமாக புத்தகக் கண்காட்சியிலிலேயே விற்றுவிட்டது. இன்னமும் 100-120 பிரதிகள் கைவசம் இருக்கின்றன. இன்று மாலை தொடர்புகொண்டபோது, 10ஆம்தேதிவாக்கில் கொடுங்கள் என்று கிழக்கு பிரசன்னா கூறினார். அத்துனைக் கட்டுரைகளும் இணையத்தில் இருந்துகொண்டிருந்தும் இத்துனைப் பிரதிகள் விற்றது வியப்புதான்.
இணையம் வந்த இந்த மூன்றாண்டுகளின் முடிவில், இதுவரை அச்சில் வந்திருக்கும் எனது அனைத்துக் கதைகளையும் சத்ரபதி PDF என்கிற வெளியீட்டின் மூலம் இனி வெளியிடுவதாகத் திட்டம்.
அச்சுவடிவில் பணம் செலவழித்து வாங்க விரும்புவோருக்கு பழைய சரக்குகளின் விலை திருத்தப்படாது, அந்த காலத்தில் அச்சிடப்பட்டு விலைபோகாது தங்கிக் கிடக்கும் புத்தகங்கள், அதே 30 ரூபாய் விலைக்குக் கிடைக்கும்.
காசு கொடுத்து வாங்கிப் படிப்பதோ PDFஐத் தரவிறக்கிப் படிப்பதோ அல்லது படிக்காமல் விடுவதோ அவரவர் விருப்பம்.
மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் எனது அமேஸான் பக்கத்தில் கிடைக்கின்றன. https://www.amazon.com/-/e/B076QJWXHB