சினிமாவை ஆராதிக்கும் மிகுந்த நுண்ணுணர்வுடைய கலைஞர் என்கிற தம்மைப் பற்றிய பிம்பத்தை கவனமாக முன்னிலைப்படுத்துவதில் முதன்மையான சினிமாக்காரர் பாலுமகேந்திரா. அவருக்கு அந்த பிம்பத்தை அளிப்பதைத் தமிழகத்தின் பெரும்பான்மையும் தனக்குச் செய்துகொள்ளும் கெளரவமாகக் கருதுகிறது. அல்லது மேடைக்கு மேடை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி சினிமாக்காரர்கள் அவரை வாணளாவப் புகழ்ந்து அப்படிக் கருதும்படியாக தூண்டுகிறார்கள். இணைய அறிவுஜீவி லார்வாக்களின் மூர்க்கக் கொண்டாட்டக் கூவலில் காது ஜவ்வு கிழியாத குறை.
பாலுமகேந்திரா தம் கதையைப் படமாக எடுப்பதே தமக்குக் கிடைத்த பெரிய கெளரவம் என்று கருதாத இலக்கிய எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா என்பதுகூட சந்தேகம்.
87- 94 காலகட்டங்களில் எழுத முடியாமல் நான் அவஸ்தைப்பட்ட போதிலும் சரி 1994 உயிர்த்தெழுதலுக்குப் பின், எழுத்தை முற்றாகக் கைவிட்டு இறந்துபோன காலத்திலும் சரி, என்னை நேரடிப் பரிச்சயம் இல்லாதபோதிலும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என்று எந்த பேட்டியில் கொடுக்கும் பட்டியலிலும் என் பெயரை பாலுமகேந்திரா சேர்க்காது இருந்ததே இல்லை.
80களின் சென்னை பிலிம் சொசைட்டி திரையிடல்களில் அடிக்கடி பார்த்திருந்தாலும் அவருடன் எனக்கு அறிமுகம்கூடக் கிடையாது. யாரும் அறிமுகப்படுத்தியதும் இல்லை. நானாக அறிமுகப்படுத்திக்கொள்ள முயற்சித்ததும் இல்லை. எவரும் அறிமுகப்படுத்தாமைக்குக் காரணம், இதை அறிமுகப்படுத்தப்போய் இது ஏதாவது ஏடாகூடமாகப் பேசி நம் பெயர் ரிப்பேர் ஆகிவிட்டால் என்கிற கனவானிய பாதுகாப்புணர்வுதான் காரணமாய் இருக்க வேண்டும்.நானாக முயற்சிக்காததுக்குக் காரணம் பிரபலத்தைக் கண்டு ஈஷிக்கொள்ள இளிப்பதாய் எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்கிற தன்பயம்தான்.
90ஆக இருக்கலாம் சரியாக நினைவில்லை. ஒருமுறை பிரசாத் லேப் வாயிலருகில் நிழலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சாய்ந்தபடி பாலுமகேந்திரா தனியாக நின்றிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. எதிரெதிராய் பார்த்துவிட்டதால் குறுஞ்செயலாய் சைகையில் வணங்கிபடி தயக்கத்துடன் நெருங்கி வெட்கம் பிடுங்க என் பெயரைக் கூறினேன். ஓ நீங்கதானா அது. ஐ லைக் சம் ஆஃப் யுவர் ஸ்டோரீஸ் மேன். ஐயாம் யுவர் ஃபேன் என்று உற்சாகமாகக் கட்டியணைத்துகொள்ளாத குறையாய் கைகுலுக்கி அருகிலிழுத்துக் கொண்டார்.
என்னை உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும் அந்த கூச்சம் காரணமாகவே உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை.
உங்களை எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கூறிவிடுவேன்
அதுவும் எனக்குத் தெரியும் அருகில் வரத் தயங்கியதற்கு அதுவும் ஒரு காரணம்
அதற்கெல்லாம் அவசியமே இல்லை. நான் ரொம்ப சாதாரனமாகப் பழகக்கூடியவன். என்ன எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்?
எழுதுவதே இல்லை.
நோநோநோ அதை மட்டும் விடவே கூடாது. நாட் மெனி ஆர் கிஃப்டட் வித்.
91ஆக இருக்கலாம். அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி பாலுமகேந்திராவிடமிருந்து அஞ்சலட்டை வந்தது. அதைப் பார்த்து அலுவலகமே கொண்டாடியது - இந்த சண்டைக்கார நாயிடமும் உருப்படியாக ஏதோ இருக்கிறது அடுத்த கமல் இதுதான் என்று.
என் போர்வை கதைக்கு, 91ல் அனுமதி கேட்டு, பின்பு அதைக் குறும்படமாக எடுத்து 2000-01ல் அது தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகப்போகும் அன்றுதான் பத்மா (ஞாநி) திருச்சி அலுவலகத்தில் யாருக்கோ தகவல் சொல்ல, அவர் மூலம் எனக்குத் தெரிய வருகையில் ஒளிபரப்புக்கு சில மணித்துளிகளே இருந்தன. உள்ளூர மனம் பரபரப்பில் பிசைந்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மனைவி சகிதம் டிவி எதிரில் உட்கார்ந்தவன், பார்க்கப்பார்க்க ரத்தம் கசிந்தேன்.
அடுத்த நாள் அலுவலகம் சென்றபோது, BV என்கிற B. வேணுகோபால் எனும் தெலுங்கு சூப்பிரெண்டெண்ட், முகத்தில் கடுப்பு கொப்புளிக்க,
பிராமணனைப் பாப்பான் பாப்பான்னு ஊரெல்லாம் திட்டறது போதாதுனு ஊர் மெச்சறதுக்காக உங்களை மாதிரி பிராமணன்களும் சேந்ந்து திட்டுங்க என்று துப்பாத குறையாய் நச்சினார்.
சார். என் கதையை, அவுரு கதையா, இதனைக் கப்பியா எடுத்ததுக்கே உங்குளுக்கு இவ்ளோ கோவம் வருதே, பாலுமகேந்திரா மட்டும் என் கதையை என் கதையாவே எடுத்திருந்தா நீங்க என்னைக் கொன்னே போட்டுருப்பீங்க என்றேன்.
ஆமாய்யா ஊருக்கெளச்சவன் பாப்பாந்தானே அதான் பூணூலோட காட்டறே. ஏன் துலுக்கனை வெச்சிக் கதையெழுதி அவன் அடையாளத்தோட படம் எடுத்துக் காட்டேன் வெட்டிப்புடுவான் வெட்டி உன்னுதை நீட்டி வெச்சி என்றார் BV.
கதையில் இருக்கும் போலி ஆசார அவஸ்தையும் இல்லை அந்த பிராமண குடும்பத்தின் மாதக் கடைசி வறுமையும் இல்லை அடுத்தடுத்த வீட்டு ஆனால் பேசுமொழியால் பேதப்பட்ட பிராமனர்களுக்கு இடையிலான மேலோட்ட சிநேகபாவமும் அடியோட்ட இடைவெளியும் இல்லை அலுவலகத்தில் வறுமைக்கூடாகவும் தலித்திடம் வெளிப்படுத்தும் கதாநாயகனின் ஜாதீய மனப்பான்மை, சாமர்த்தியத்துக்கு எதிராக உண்மையான உணர்வு உண்டாக்கும் நெகிழ்வு, பொய் சொன்னதற்கான குற்றவுணர்வு, அதற்காக மன்னிப்பு கேட்க நினைக்கும் இளக்கம்,பிராமணனாய் தான் பட்ட அவஸ்தையில் அணுவளவும் படாது சாவு விழுந்த பத்தர் வீட்டுக் குடும்பம் சாஸ்திரத்தை நடைமுறையில் லவலேசமாய்க் கடந்து செல்வது, காரியம் முடிந்தபின் இதுவென்ன பெரிய விஷயம் என்கிற அலட்சியத்துடன் ராவ்ஜி தம் யதாஸ்தானத்தையடைதல் என இவை எதுவுமே பாலுமகேந்திரா டிவிக்கு எடுத்த குறும்படத்தில் இல்லை.
படத்தில் அவன் எந்த ஜாதிக்காரன் என்பதே சாமர்த்தியமாய் இல்லாது ஜனநாயகனாகிவிட்டான். சாவு வீட்டில் சாப்பாடு கொண்டுவரும் தர்மசங்கடம் மட்டுமே தமாஷாகி இருக்கிறது. தலை எழுத்து.
எடுத்ததே பாதிகதை. அதையும் எடுத்தவிதம் எலும்பும் தோலும்.
படத்தில் அவன் எந்த ஜாதிக்காரன் என்பதே சாமர்த்தியமாய் இல்லாது ஜனநாயகனாகிவிட்டான். சாவு வீட்டில் சாப்பாடு கொண்டுவரும் தர்மசங்கடம் மட்டுமே தமாஷாகி இருக்கிறது. தலை எழுத்து.
எடுத்ததே பாதிகதை. அதையும் எடுத்தவிதம் எலும்பும் தோலும்.
இதையெல்லாம் எழுதப்பட்ட கதையில் உள்ளது உள்ளபடி, சினிமாவில், டிவியில், தமிழில், தமிழ் நாட்டில் எடுப்பது நடவாத காரியம் எனில் அதை எடுப்பதைத் தவிர்ப்பதே நுண்ணுணர்வுள்ள எவரும் இயல்பாய் செய்யக்கூடிய காரியம்.
இந்த விடுபடல்கள் சுந்தர ராமசாமி ஜேஜே சில குறிப்புகளில் சொல்வதுபோல்,
“சொல்லாமல் விடப்படும் பகுதிகள், உண்மையைத் தொகுக்க முன்னும் கலை மனத்தின் ஆவேசத்தில் கழிந்துபோனவை என்றால் குறைசொல்ல எதுவுமில்லை. கலை உண்மையை ஸ்பரிசிக்க, கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும். தள்ள வேண்டியவற்றைத் தள்ளும். ஆனால் அவன் சொல்லாமல் விடும் பகுதி தந்திரபூர்வமானது. வாசகத் திருப்திக்குப் போடும் தூண்டில் அது.”
நமுட்டுச் சிரிப்பை வழவழைக்கும் கதை நிகழ்வுகளைக் காமெடி என்கிற பெயரில் எதோவாக்கி சில சினிமா தியேட்டர்கள் இடையிடையில் ட்யூப் நெகட்டிவில் கொடுக்கும் கிளுகிளுப்பு ஷொடாய்ங் டச்சை தொடக்கத்திலேயே கொடுத்து குறும்படமாய் சுருட்டுவதே பாலுமகேந்திராவின் நோக்கமும் உயரமும் என்றே தோன்றுகிறது.
கதை எடுக்க 500ஓ 1000மோ கொடுக்கப்பட்ட அட்வான்ஸை கெளரவமாய் எண்ணி வாங்கிக்கொண்டு, கதையை சிதைக்காது காட்சி ஊடகத்துக்கு வேண்டியபடி மற்றிக்கொள்ளலாம் என கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தால் ஒட்டுமொத்தமாகக் கற்பழிக்க சம்ம்மதித்ததாய் எடுத்துக்கொண்டு சின்னாபின்னப்படுத்துவதுதான் நுண்ணுணர்வா? கலையை ரசிக்கும் மனமா? என்ன அக்கிரமம் என்று துடித்தேன்.
இந்தக் குறும்படத்தைத் தெலுங்கில் வெளியிடும் உரிமைக்கான அனுமதி கேட்டு 2500க்கு அவர் செக் அனுப்பியபோது, அதைத் திருப்பி அனுப்புவதாகக் கடுமையான கோபத்தில் கூறினேன்.
கடனில் கம்ப்யூட்டர் வாங்கிவிட்டதால் கூட்டுறவு சொசைடி பிடித்தம்போக, கையில் வந்த சம்பளம் கட்டை. மினிமம் கட்டிய கிரெடிட் கார்டில்தான் மாத மளிகை வாங்கியாக வேண்டிய நெருக்கடியில் இருந்த நேரம். திருச்சியிலிருந்து எஸ்டிடி போட்டு என் கொதிப்பைத் தெரிவித்து அனுமதி மறுத்ததோடு அந்தக் காசோலையையும் திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்தேன். சுந்தர ராமசாமி அவர் கதையை நான் எடுத்தவிதத்தை சிலாகித்தார். சுஜாதா பேருவகை அடைந்தார் வண்ணதாசன் நெகிழ்ந்துபோனார் என்கிறவிதமாக என்னென்னவோ சால்ஜாப்பெல்லாம் சொல்லி பட்டியலிட்டார். பிடிக்கவில்லை என்று கூறும் ஒரே நபர் தாங்கள்தான் என்றார். பரவாயில்லை, உங்களுக்கு சம்மதமில்லை எனில் தெலுங்கில் அதை எடுக்கமாட்டேன் ஆனால் அதற்காகக் காசோலையைத் திருப்பி அனுப்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் பாலுமகேந்திரா. உள்ளதைச் சொன்னால் அவர் திரும்ப வாங்க மறுத்த அந்த 2500 செக் அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த அதிருஷ்ட சீட்டு என்றே சொல்ல வேண்டும். அதற்கு அவருக்கு என்றென்றும் நன்றி.
எழுத்து வேறு மீடியம். சினிமா வேறு ஊடகம். இது போலவே அது இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பதெல்லாம் அந்தக் கதையை அந்த மீடியத்தில் தீர்க்கமாகச் சொல்வதற்காகத்தானேயன்றி தீர்த்துக்கட்ட அல்ல. பட்ஜெட்டுக்குள் சுருட்ட எவ்வளவோ கதைகள் இருக்க இந்தக் கதையின் எள்ளளவு தீவிரம்கூட இல்லாது கெக்கபிக்கே என்று இப்படி எடுக்க அப்படி என்ன அவசியம்?
உண்மையிலே இலக்கிய வாசனையோ நுண்ணுணர்வோ தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்கிற அளவுக்கேனும் இருக்கிற ஒருவர், இந்தக் கதையை இவ்வளவு கேவலமாக எடுப்பாரா என்பதை, கதையையும் படித்து படத்தையும் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.
இந்தக் கதை நேரம் எடுத்த காலகட்டம்தான் பாலுமகேந்திரா தம் வாழ்விலேயே மிகவும் கலாபூர்வமாகத் தன்நிறைவடைந்த நேரம் என்று பல்வேறு வார்த்தைகளில் பலமுறை சொல்லிக்கொண்டு இருக்கிறார் பாவம்.
21 வயது இளைஞனாக நான் எழுதிய கதையை, புகழ்த்தப்பட்ட கலைஞனாக பாலுமகேந்திரா இலக்கியத்துக்கு இழைத்த அநீதியை சுட்டிக் காட்டி விவாதிக்கும்பொருட்டே இரண்டையும் யூட்யூபில் ஏற்றி இருக்கிறேன் - காப்புரிமையைக் காரணம் காட்டி இந்தக் குறும்படத்தை இயக்குனரும் குறுந்தகடாய் வெளியிட்டிருக்கும் வம்சியும் ஒடுக்காமல் இருப்பார்களேயாகில் மிக்க நன்றி.
விமலாதித்த மாமல்லனின்
போர்வை [சிறுகதை]