ஆழி சூழ் உலகு நாவலை நான் படித்ததில்லை.
அது எழுதப்பட்டுக்கொண்டிருந்த போது, தற்செயலாய் அதன் பதிப்பாளர் தமிழினி வசந்தகுமாருடன் ஒற்றைக்கொற்றையாய் இருக்க நேர்ந்தது. இப்படியொரு பெரும் நாவல் உருவாகிக்கொண்டிருப்பதாய் பொங்கிப் பூரித்தார் பதிப்பாளர். இலக்கியச் சூழலை நான் தலைமுழுகி இருந்த காலம் அது. எனவே எவ்விதச் சலனமுமின்றி அப்படியா எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவரது கைபேசி ஒலித்தது. இம்முனையில் பதிப்பாளர் அம்முனையில் எழுத்தாளர்.
அவர்களின் உரையாடலுக்கிடையில் வந்த ஒரு வரி, 'அந்த சாமியாரை ஊருலேந்து மெட்ராசுக்குக் கூட்டிகிட்டு வந்துருப்பா'. இதைக் கேட்டதும், அடப்பாவிகளா எழுதப்படுவது நாவலா இல்லை சினிமாவுக்கு சீன் பிடிக்கும் ஓட்டலறை டிஸ்கஷனா என உவ்வே என்றாகிவிட்டது.
தப்பித்தவறி ஒருவேளை நான் நாவலைப் படிக்க நேர்ந்தால், அதன் முற்போக்காள ஆதரவாளர்கள்போல் தலை கிறுகிறுத்து சாமியாடுவேனா இல்லை குறைந்தபட்சம் அது என்னை ஈர்த்துப் படிக்கவைக்குமா என்றுகூட இன்று என்னால் கூறவியலாது. எதுவொன்றையும் அதுவரை எழுதப்படவில்லை என்கிற ஒரு காரணம் மட்டுமே சிறந்ததாக்கிவிடாது, எழுத்தில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கவும் வேண்டும் என்பதே காலத்துக்கொவ்வாத என் அசட்டுத்தனமான பிடிவாதம்.
என்றைக்கோ என்றிலிருந்தோ நீங்கள் சிறப்பென்று மதித்த ஒன்று, அதை எழுதியவனின் வேறு ஏதோ ஒன்றைப் பற்றிய கருத்துத் தெரிவிப்பு காரணமாய் செருப்பு என்று ஆகிவிடுமா?
புத்தகம் வெளியான பின்பு, மோடி ஓசன்னாவை ஜோடி பாடி இருந்தால் அந்த மொழிபெயர்ப்புப் பதிப்பகம் ஒரு பிரதி விடாமல் ஆங்கில ஆழி சூழ் உலகைத் திரும்பப் பெற்று கொளுத்தி இருக்குமோ? அவர்களின் அன்றைய புகழ்ச்சியும் இன்றைய இகழ்ச்சியும் ஆளுக்கா எழுத்துக்கா? அன்றைய உச்சி முகர்வின் அடிப்படை, எழுத்துதான் என்பது சத்தியம் என்றால் இன்று அந்த ஆள் எக்கேடு கெட்டால்தான் என்ன? ஆங்கில இலக்கிய வெளிக்குள் இவர்கள் செலுத்த நினைத்தது பரதவர் வாழ்வையா அல்லது ஜோ டி குரூசின் கிறித்துவ பாஸ்போர்ட்டையா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலக்கியத்துக்கும் இடதுசாரிகளுக்கும் இரண்டும் ஒரே எழுத்தில் தொடங்குகின்றன என்பதைத்தவிர வேறு எந்த சம்மந்தமும் இல்லை என்பது இன்னுமொருமுறை ருசுப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த விவகாரத்தில்.