சிலநாள் முன் X நிறுவனத்திலிருந்து அலுவல் நிமித்தமாய் Outlook ஃபைலான .pstயை எடுத்து வந்தேன். அவற்றில் ஒன்று திறந்தது ஒன்று மறுத்தது. திறக்க மறுத்த பைலுக்கு உதவி கேட்டேன் சிலர் சுட்டி கொடுத்தனர் மேலோட்டமாய் முயன்று விட்டுவிட்டேன். காரணம், திறந்த பைலில் இருந்த மெய்ல்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. அவற்றிலிருக்கும் டேட்டாவை எடுப்பதே பெரும்பாடாய் இருந்தது. ஒவ்வொரு மெய்லிலும் தேவைப்பட்டதெ தென்னவோ கடைசி வரி மட்டுமே. ஆனால் ஒவ்வொன்றாய் எடுத்து Excelலில் ஒட்டிதான் ஆய்ந்தாக வேண்டும். ஒருவழியாய் டேட்டா இருந்த அறுநூற்று சொச்சம் மெய்ல்களைத் திறந்து ஓரிடத்தில் ஒட்டி முடித்துத் தேடினால் தேவைப்பட்ட முக்கியமான தகவல் அகப்படவில்லை. திரும்பவும் அந்நிறுவனம் சென்று துருவியதில் மேனேஜருக்கு வந்து சேரும் ஆட்டோமேட்டட் மெயில்களில் நிறைய தகவல் இருப்பது தெரியவந்தது. அவரது .pst ஃபைலை எடுத்துப் பார்த்தால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மெய்ல்கள் இருந்தன. ஒவ்வொரு மெய்லிலும் நோட்பேட் அட்டாச்மெண்ட்டாய் 500 முதல் ஆயிரம் வரிகளில் டேட்டா. ஒவ்வொன்றாய் திறந்து ctl+A ctl+C ctl+V என Excelலில் ஒட்டி ஒட்டி கடந்த மூன்று நான்கு நாட்களாய் சீரழிந்து கொண்டிருந்தேன்.
கூகுளில் தேடாமல் தகவல் சரிபார்க்காமல் ஒரு ட்விட்டுகூடப் போடாதவன் எப்படித்தான் கூகுளை எட்டிகூடப் பார்க்காமல் இப்படிக் கிடந்து அல்லாடிக்கொண்டிருந்தேன் என நினைக்கவே வெட்கமாய் இருக்கிறது.
பிளாகில் நான் எழுதியிருப்பவை மிகவும் பயனுள்ளதாய் இருப்பதாய்ப் பலர் பலமுறை என்னிடம் தனிச்செய்தியில் தெரிவித்திருப்பதோடு இணையத்திலும் எழுதியிருக்கிறார்கள். இது சாதாரணமாய்த் தெரிந்திருக்கவேண்டிய சமாச்சாரம்தானே இலக்கிய அரிசுவடிதானே இதையென்ன இவ்வளவு பெரிய விஷயமாய்ப் பேசுகிறார்கள் என்றுகூட சிலமுறை தோன்றியதுண்டு.
இணையமும் கணினியும் அலுவலக வேலையில் எனக்கு உதவியிருப்பதைப் போல உடன்பிறந்தவன்கூட உதவுவானா என்பது ஐயம்தான். அப்படி என்னதான் தெரியும் என்றால் உருப்படியாய்ச் சொல்ல பெரிதாய் முழுதாய் ஒன்றுகூடக் கிடையாது. ஆனால் ஏதேதோ தெரியும். அதற்கான தருணம் வரும்வரை அது தெரியும் என்பதேகூடத் தெரியாது.
இப்படியொரு பிரச்சனையுடன் மாங்குமாங்கென முட்டிக்கொண்டிருப்பது திடீரென முட்டாள்தனமாய்ப் பட்டது. நாளைக்காலை எப்படியாவது இந்த வேலையை முடித்து அதிகாரியிடம் முடிபுகளைத் தெரிவித்தே தீருவதென எனக்கு நானே உறுதிபூண்டேன். வேறொன்றுமில்லை இதற்குமேலும் இதை இழுத்துக்கொண்டு கிடப்பது அவமானமாக இருந்தது.
அடிக்கடிப் போகவேண்டிய இடமென்றால் குறுக்குவழி தேடி நெடுநேரம் அலைவது அறிவீனமில்லை என்பது என் அபிப்ராயம். கூகுளில் தேடினேன். Outlookகே இல்லாத கம்ப்யூட்டரிலும் Outlook மெய்ல் இணைப்புகளை அப்படியே நோட்பேடாக ஒரே ஃபோல்டரில் போட்டுக்கொள்ள ஒரு தெய்வம் மென்பொருளை உருவாக்கி இலவசமாய்க் கொடுத்திருந்தது http://www.nirsoft.net/utils/outlook_attachment.html
ஒரு ஃபோல்டரில் இருக்கும் ஒரே மாதிரியான ஃபைல்களை ஒரே ஃபைலாய் இணைக்கக் கிடைக்காத மென்பொருளா http://download.cnet.com/Free-File-Merge/3000-2064_4-10559926.html
எல்லாவற்றிலும் காசு பார்க்க எண்ணாது இணையத்தில் எத்தனையோபேர் உபயோகமாய் என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள் யாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது.