01 March 2015

நான் ஏன்?


இந்தக் கதையை எந்த விதமாகவும் நிராகரிக்க முடியாது - தனிப்பட்ட அடையாளங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமேயானால் இதற்கு இவ்வளவு பெரிய அடிதடி எதிர்ப்பு வந்திருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். 

எழுத்தாளன் என்கிற அந்தஸ்தை சுஜாதா போன்ற கேளிக்கையாளர்களுக்கும்கூட கொடுக்க நேர்வது, அவர்களும் எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது என்கிற சலுகையின் அடிப்படையில் மட்டுமே. 

அநேகமாய் எழுதப்பட்ட எல்லா கதைகளும் நிஜத்தில் நடந்தவைதான். ஆரம்ப எழுத்தாளன் தனக்கு நடந்ததை அல்லது தான் பார்க்க நடந்ததை அப்படியே எழுதிவைத்து விடுவான். நடந்தது அல்ல அதைப் பற்றிய பார்வையே ஒருவனை எழுத்தாளனாய் ஆக்குகிறது என்கிற தெளிவு வரவே பலருக்கு ஒரு ஆயுள் பிடிக்கக்கூடும். பார்வை என்பதை, ஜெயகாந்தனைப்போல் பேசியே கொல்வதைப் பார்வையாய் குறிப்பிடவில்லை. 

சம்பவங்களின் கோர்வை அல்ல இலக்கியக் கதை என்பது. நிகழ்ந்த சம்பவங்கள் மீதான எழுத்தாளனின் விமர்சனமே அதை இலக்கியம் ஆக்குகிறது. அந்த விமர்சனத்தை ஜெயகாந்தன் மாநாட்டு உரையாக்கிவிடுகிறார் என்பதுதான் அவர் மீதான விமர்சனமே. 

புலியூர் முருகேசனின் இந்தக் கதையை அப்படியொன்றும் மோசம் என்று சொல்லிவிட முடியாது. மிகச்சிறந்த கதையாய் வந்திருப்பதற்கான அத்தனைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வக்கிரம் பிக்கிரம் என்பதெல்லாம் சமூகத்துக்காக நாம் பூசிக்கொள்ளும் மேற்பூச்சுகள். மற்றபடி அவரவர் மனத்தை ஆழ்நிலை வசியத்துக்கு ஆட்படுத்தினால் உள்ளே பதுங்கி இருப்பவை அவரவரை விட்டத்தில் தொங்கவிட்டு விடும்.

அதைக் குரூடாக நேர்த்தியின்றி அப்பட்டமாய் எழுதியிருக்கிறார். அதுகூட எனக்குப் பிரச்சனை இல்லை. அதை அப்படியே கொண்டு சென்றிருக்கலாம். அப்பன்காரனுக்குப் பின் ஊரே அவனைப் பயன்படுத்திக் கொள்வதை பாம்புக்காரன்களாய் எழுதுவதுதான் எனக்கு ஆபாசமாய்ப் பட்டது. இதுவரை விழுந்துகொண்டிருந்த யதார்த்தத்தின் அறை இந்தப் பூடகத்தால் கிளுகிளுப்பாக ஆகத் தொடங்கியதுதான் எனக்கு அருவருப்பாய் பட்டது.

சம்பவங்களின் அதிர்ச்சி மதிப்பீட்டில் நல்ல எழுத்தாளனின் கவனம் ஒரு போதும் குவியாது. அது விகடன் வார்ப்பு வேஷதாரிகளுக்கான குறி. வாசகனை இழுப்பதற்கு சுஜாதா சொல்லிக்கொடுத்த சூத்திரம். ஒரு போதும் இலக்கியம் இதில் அக்கறையே கொள்ளாது. கருப்பு சிவப்பு வெளுப்பில் பிரா போடாத முலை முயல் குட்டி போல் துள்ளுவதைச் சொல்லுவதுதான் சுஜாதாவின் நோக்கம். மரமேறியை நாயகனாக்குவதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். அதுதான் அடுத்து பெயர் மாற்றத்துடன் வெளியான ரத்தம் ஒரே நிறத்தில் வெள்ளைக்காரியின் முலை விவரிப்பாய் ஆயிற்று. எதிர்த்த நாடார் குலமும் சேர்ந்து ஊரே விழுந்துவிழுந்து படித்தது. போங்கடா பூனாங்களா பாத்துக்குங்கடா உங்க பொம்பிளை அக்கறையை என்று சொல்லாமல் சொன்னார்கள் சுஜாதாவும் குமுதமும்.

நல்ல எழுத்தாளனின் திறமைக்கு சவால் விடும் இடம் சம்பவமன்று. நிகழ்ந்த சம்பவத்துக்கான பின்புலமே. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மனித மனத்தின் அவஸ்தையே. அதை விடுத்து சம்பவத்தின் அதிர்ச்சிகரத்திலேயே உழன்று கொண்டிருப்பது அதன் உக்கிரத்தைக் கெடுத்து கிளுகிளுப்புக்கு சரித்துவிடும் எழுத்தாளன் அறியாமலேயே. கிளுகிளுப்பின் இடம்தான் பாமரனின் இடம். அதை ஊர்பேர் ஜாதி தனி நபர் அடையாளங்களுடன் துல்லியப்படுத்தி வேறு காட்டுவது எழுத்தாளனின் அற்பத்தனம். 

புலியூர் முருகேசன் செய்த தவறைத்தான் ஏற்கெனவே செய்திருந்தார் பெருமாள்முருகன். 

இலக்கியவாதிகளில்லை என்பதே இவ்விருவரின் பிரச்சனையும். இருவருக்குமே பிரச்சனை வந்திருப்பதற்கான காரணமும் அதுவே.