எழுத்தாளர்களுக்கு எடிட்டர் தேவை.
'கிளாசிக் என்று 19ம் நூற்றாண்டில் தேடினால் யாரும் இல்லை. வார் அண்ட் பீஸ், கரமஸாவ் பிரதர்ஸ் எல்லாம் இந்த நூற்றாண்டில் வந்திருந்தால் நிச்சயமாக எடிட் செய்யப்பட்டு இருக்கும்.' என்றார் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி ஃபேஸ்புக்கில்.
இதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவரிடம் நான் சொல்லிக்கொண்டிருந்தால்,
முதலில் இவருக்கு உடனடியாய் ஒரு எடிட்டர் கம் நல்ல மொழிபெயர்ப்பு கன்சல்ட்டண்ட் தேவை. நல்லி குப்புசாமியைக் காட்டிலும் ஜி. குப்புசாமி நன்றாக மொழிபெயர்க்கிறார் என்று கீழே இருப்பதை சுட்டிக்காட்டி, என் இன்பாக்ஸில் வந்து ஓட்டுகின்றனர் இதைப் படித்தோர்.
ஒருத்தனை விடாமல் எல்லோரையும் நோண்டிக் கொண்டிருப்பதால் ஏற்கெனவே ஏகப்பட்ட பகை எனக்கு. எழுத்தாளர்களில் நண்பர்களே இல்லாதவன் அநேகமாய் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பதினாறு வருடங்கள் எழுத்தாளனாகவே இல்லாமல் இருந்திருக்கிறேன். அப்படியே ஒருவேளை, சிறுவர்களின் கேப் துப்பாக்கி போல டொப்பு டொப்பு என்று கேப் விடாமல் தொடர்ந்து எழுதிக் கொடு இருந்திருந்தாலும் எனக்கு அவ்வளவு சுலபத்தில் யாரையும் பாராட்டத் துப்பு கிடையாது. வாய் ருசியில்கூட உச்சத்தில் மட்டுமே திருப்தி அடைவதால் நான் கண்ட ஒரே பலன், உப்புமா மட்டுமே பண்ணத் தெரிந்தவளாய்க் கல்யாணமாகிவந்த என் மனைவி, நன்றாக சமைப்பதாய் நான் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாள். சுலபத்தில் திருப்திப் படாததன் மூலமாக மட்டுமே உச்சத்தை எட்ட முடியும் என்கிற மூட நம்பிக்கையில் உழலும் பரலோகவாசி நான். எனவே என்னை எவராவது வெளிப்படையாய்ப் பாராட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதெல்லாம் பேதமை.
இதையெல்லாம் மீறி எனக்கும் லைக் போட அப்பித்தப்பி இருக்கும் ஜி. குப்புசாமி போன்ற ஓரிருவரைக் கூட எனக்கு ஜென்ம எதிரியாக்கிவிடுவதில் இந்த இன்பாக்ஸ் மக்களுக்கு அப்படி என்ன குஷியோ தெரியவில்லை.
ஏம்ப்பா இப்புடிப் பண்றீங்களேப்பா. போலீசைக் கூப்புடுவேன்.
//"Fuck with me again, you're history. Capiche?"//
Tobias Wolff's short story, "Bullet in the Brain"
//“ஒருமுறை என்னுடன் புணர்ந்துதான் பாரேன். நீ சரித்திரமாகி விடுவாய். கப்பீ. . . . . ஸி?”//
யாருமே எதையுமே படிப்பதில்லை என்பது துல்லியமாக நிரூபணமாகிறது - ’படிப்பது’ என்பதன் உண்மையான பொருளில் யாருமே எதையுமே படிப்பதில்லை என்பது. இல்லை என்றால் இது எப்போதோ விவாதப் பொருள் ஆகியிருக்கும். பாவம் ஜி. குப்புசாமியும் எழுத்தாளர்களுக்கு எடிட்டர் தேவை என்று அனாவசியமாய் வாய் விட்டிருக்க மாட்டார்.
நான் எழுதியிருக்கும் இதில் எதை எடிட் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் ஜி. குப்புசாமி. வேண்டுமானால் க்ரியா ராமகிருஷ்ணனை ஒரு முறை கலந்து கொள்ளுங்களேன்.