கோட்டைக்கும் எக்மூருக்கும் தி நகருக்குமாகவென்று மாறி மாறி அலச்சலிலேயே கழிந்தது இன்றைய தினம். அலுவலக விழாவுக்காக நிறைய தோழர்கள் கோவைக்குச் சென்றுவிட்டதால் அநேகமாய் யாருமில்லை. அலைந்ததன் சோர்வு அதன் காரணமாய்க் கூட அதிகமாய்த் தெரிந்திருக்கலாம். வீட்டிற்குச் சீக்கிரமே கிளம்பிவிட்டேன் ஆறரை மணியளவில். கூடவே இருந்தது, செடி கதையின் முதல் வரைவை இழைத்திழைத்து இன்று முழுமையாக்கிவிடலாம் என்கிற எண்ணம்.
ஆள்வார் பேட்டை ஆண்டவரின் அலுவலகத்தைத் தாண்டும் பொழுது பஜ்ஜி சாப்பிடலாமே என்று தோன்றியது. அதற்குள் கிடைத்த இடைவெளியில், போலீஸ் இல்லாதபோது சிக்னலில் நிற்பதில்லை எனும் கொள்கைப்படி, பாலத்தின் அடியில் புகுந்து பெட்ரோல் பங்க்கையும் தாண்ட்டிவிட்டதால், இடதுபுறமாய் வண்டியை மயிலைக்குத் திருப்பினேன்.
ஜன்னல் கடையில் வாழைக்காய் மிளகாய் பஜ்ஜிகள் மட்டுமே இருந்தன. ஹெல்மெட்டைக் கழற்றியவன் தலையில் அப்படியே தங்கிவிட்டிருந்தது கர்ச்சீப் கட்டு. நெரிசலான தெருவின் எதிர்சாரியில், பஜ்ஜிக் கடையையே பார்த்தபடி போய்க் கொண்டிருந்த வசந்த்துக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் பார்வை என்னையும் தடவித் தாண்டிச் செல்லவே, வலக் கையை உயர்த்தினேன். ஏய் என்று அருகில் வந்தான்.
என்ன அன்னிக்கி சொன்னா மாதிரி வேற எதுக்காகவாவது பஜ்ஜி திங்கிறாப்பல நிக்கிறியா இல்லை நிஜமாவே பஜ்ஜிக்காகதானா.
யோவ் நிஜமாபஜ்ஜிக்காகதான்யா
இவ்ளோ பெரிய தொப்பையை வெச்சிகிட்டு இன்னும் பஜ்ஜி வேற சாப்பிட்டுகிட்டு இருக்கியா. கதை எழுதியிருக்கியாமே ரொம்பப் பிரமாதமா இருக்குனு ஷங்கர் ராமன் சொன்னாரு... என்றான் தோளில் கையை வைத்து.
பரிசு
அவர்கிட்டக் குடுத்திருந்த பிரிண்ட்டவுட்டைத் திரும்ப வாங்கிட்டியா
தீபாவளி மலரில் படியுங்கள் என்று ஷங்கர் ராமன் வசந்த்திடம் சொல்லியிருந்தது தெரியும். எனவே மையமாகத் தலையை ஆட்டி வைத்தேன். அவன் குடுடா என்று வெளிப்படையாய்க் கேட்கவுமில்லை இந்தா என்று என் கணினிப் பையிலிருந்து எடுத்து நான் கொடுக்கவுமில்லை.
வசந்த் அசோகமித்திரனின் விமோசனம் ஷூட்டிங்கில் இருக்கிறான் என்று எனக்கும் தெரியும். ‘தீபன்’ காளீஸ்வரிதான் கதாநாயகி என்பது உட்படத் தெரியும். இதைக்கூட வசந்த்தும் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை.
எழுத்தாளன் எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளாதே எழுத்தாளன் என்றால் எழுது என்றது ஒரு இணைய பல்லி.
அது உண்மையைத்தான் சொல்லி இருக்கிறது.
சார் என்றும் தலைவர் என்றும் சினிமாக்காரர்களைக் கொண்டாடி விளிக்கும் எழுத்தாளர்கள் சூழ் இலக்கிய உலகில், எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள எனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன் எப்போதாவது.