1989ல் M80. 1997ல் சேத்தக். 2003ல் TVS விக்டர். 2008ல் TVS Flame. 2012ல் Honda ட்விஸ்டர். இத்தனை வண்டிகள் மாறினாலும் மாறாத காரியம் வருடம் தவறாமல் நியூலான் போட்டு விடுவது.
எப்படி செய்ய வேண்டும் அப்படிச் செய்தால் அது என்னென்ன செய்யும் என்பதையும் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.
http://www.nulonindia.com/productdetails/nulon-engine-treatment-50-ml.html
M80ஐ 92 வாக்கில் ரீபோர் செய்யவேண்டி வந்த போது போர் பிஸ்டனைக் கழற்றிய மெக்கானிக் போரைப் பார்த்து, என்ன சார் இப்படி புத்தம் புதுசாட்டம் இருக்குது என்று அசந்து போய்விட்டார்.
முதலில் Nulon பற்றி விசாரித்தபோது அதுல்லாம் வேலைக்காவாது சார் என்ஜின் கெட்டுரும் என்றவர் அவர்தான், பிறகு என்னைப் போலவே அவரும் நியூலான் உபாசகர் ஆகிவிட்டார்.
வழக்கமாய் இந்த நியூலானை வாங்குமிடம், ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் இருக்கும் குருதேவ் ஆயில் கடை. கடந்த ஆறு மாதங்களாய் வருவதில்லை நிறுத்திட்டாங்க போல இருக்கு சார் என்கிற பதிலே வந்துகொண்டு இருந்தது.
ஷெல் பெட்ரோல் போட்டும் என் வண்டி என்ஜிணின் கரகரப்பு நிற்கவில்லை. நல்ல மைலேஜ் கொடுக்கக்கூடிய ஹோண்டா ட்விஸ்டரை வெறும் 33 கிலோ மீட்டர் ஓடியதுமே நெடும் பயண உற்சாகக் கோளாறில் 80, 90ல் செங்கல்பட்டுக்கு தொடர்ந்து மூன்று தினங்கள் ஓட்டிக்கொண்டுபோய் நாசம் பண்ணியது நான்தான். ஆயினும் செம பிக்கப் இருந்த வண்டி. உடலைக் கூச வைத்துக்கொண்டிருந்த கரகரப்பை குணமாக்கதான் நியூலானைத் தேடிக்கொண்டு இருந்தேன்.
இணையத்தில் தேடி, கிடைத்த டெல்லி நம்பரைத் தொடர்புகொண்டு சென்னையில் எங்கு கிடைக்கிறது என விசாரித்து நம்பர் வாங்கிக்கொண்டு சேமியர்ஸ் ரோடை, அடையார் கேட் ஓட்டலிலிருந்து கூவம் வரை அங்குமிங்குமாய் அலைந்ததுதான் மிச்சம். கடைசியில் அது இருந்ததோ மந்தைவெளியில் தேவநதன் தெரு திரும்பியதும் இருக்கும் சேமியர்ஸ் ரோடின் சிறு துண்டில், சீனிவாசன் தெருவுக்கு எதிரில்.
2 ஸ்ட்ரோக் வண்டிகளுக்கு பெட்ரோலிலும் 4 ஸ்ட்ரோக் வண்டிகளுக்கு என்ஜின் ஆயிலிலும் ஊற்றி வண்டியை ஓட்டத் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் நம் வண்டியா என்று வியக்கும் விதத்தில் சத்தம் குறைந்துவிடும். பொதுவாக திராட்டிலை மூடினால், நீங்கள் ஓட்டும் வேகத்திற்கு வண்டி எவ்வளவு தூரம் ஓடி நிற்கும் நிலைக்கு வரும் என்பது, கூறுள்ள எந்த வண்டி ஓட்டிக்கும், தன் பெண்டாட்டியைப் பற்றித் தெரிந்ததைவிட துல்லியமாகத் தெரிந்திருக்கும். நியூலான் போட்டபின், இன்னும் முன்பே மூடியிருக்கலாம் போல இருக்கிறதே என்று வியந்தபடி திராட்டில் முறுக்கலை புதிய கதிக்கு ஏற்ப சரி செய்து கொள்வீர்கள். அதிகம் முறுக்க வேண்டிய அவசியம் இருக்காது. திராட்டிலை அதிகமாய்த் திறந்து அவசரமாய் பிரேக் அடிப்பதில் சக்திதான் விரயம். அதிகம் முறுக்கப்படாத மனைவி சுமுகமாய் இருப்பதைப் போல வண்டியும் சுகமாக ஓடிக்கொண்டிருக்கும்.
பயன்படுத்திப் பாருங்கள் அதன் பிறகு நியூலானுக்கு நீங்கள் இலவச பிராண்ட் அம்பாசிடர் ஆகிவிடுவீர்கள் என்னைப் போலவே.