26 September 2015

வாங்க வாங்க

IFB வாஷிங் மெஷின், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் இடுகல்லாகி நெடுநாளாகிவிட்டிருந்தது. வேறு வாங்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கியே மாதங்களாகிவிட்டிருந்தன. வேலை காரணமாய் நேரம் கிடைக்காமல் நான் முதலில் பார்த்துவிட்டு உன்னை அழைத்துச் செல்கிறேன் என்கிற வாக்குறுதி எனக்கே புளித்துப் போகும் அளவுக்கு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 


ஒரு சனிக்கிழமை இருவரும் கிளம்பிவிட்டோம். ஆதி காலத்தில் வாங்கிய IFB கற்றுத்தந்த பாடத்தில் காட்ரேஜுக்கு செட்டிலானோம். கடைசியில் வாங்கப்போகிற கடை என்னவோ மயிலாப்பூர் வசந்த் & கோதான் என்றாலும் காட்ரேஜ் அதிகாரபூர்வ கடையே என்ன மாடல் என்பதை முடிவுசெய்துகொள்ள சிறந்த இடம் என்பதை ஃப்ரிட்ஜ் வாங்கிய அனுபவம் சொல்லிக் கொடுத்திருந்தது. மேலும் அங்கேயே அவ்வளவுக்குக் கொடுக்கிறார்கள் என வாய்சவடால் அடிக்கவும் தைரியத்தைக் கொடுக்கும் என்று போனால் மைலாப்பூர் காட்ரேஜ் ஷோரூம் பீரோ கட்டில் என விற்றுக்கொண்டிருந்தது. 

வசந்த் & கோவில் எது லேட்டஸ்ட்டோ அதன் அத்தனை சிறப்பம்சங்களையும் விளக்கிய விற்பனையாளர் ஸ்டேண்டுடன் சேர்த்து அதன் இறுதி விலை 24,500/- என்றார். 

கேஷ் பேமண்ட் என்றால் சலுகை ஏதும் உண்டா 

இதான் சார் கடைசி. வீடு பெஸண்ட் நகர்ங்கறதால டெலிவரியை கொஞ்சம் கம்மியா பண்ணித்தரலாம் என்றார் 

மேனேஜரிடம் போய் ரூபாய் நோட்டுக்களைக் காட்டினால் இன்னொரு 500 குறையக்கூடும் ஆனால் வெகு நாட்களாய் மனைவியை வெளியில் அழைத்துச் செல்லாததை, இதைக் காரணமாய் வைத்து நாலு இடத்துக்கு அழைத்துப் போனதாய் கணக்கை நேர் செய்யக் கிடைத்த வாய்ப்பை எப்படித் தவற விடுவது. 

எதற்கும் தி நகர் விவேக் வசந்த்தையெல்லாம் பார்த்துவிடலாம் என்று கிளம்பி நுங்கம்பாக்கம் லெவிஸ் ஷோ ரூமில் 2013ல் வாங்கியிருந்த மனைவியின் ஜீன்ஸை, நடை யோகாக்களின் புண்ணியமாய் ஒரு இஞ்ச் குறைத்து இலவசமாய் ஆல்டர் பண்ணிக்கொண்டோம். அந்த நேரத்தில் எதிரிலிருந்த கண்ணாடியில் ஓஸி லைட்டிங்கில் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு,  வடக்கு உஸ்மான் ரோடு வசந்த் & கோ சென்றால் வாசலிலேயே விற்பனையாளர் கும்பல் வாங்க வாங்க என்று வழியை மறித்தது. 

வழில நின்னுகிட்டு வாங்க வாங்கன்னா எப்பிடிப்பா வறது என்றதும் விலகி வழிவிட்டது. 

முடிவு செய்த மாடலைத் தேடினால் காணவில்லை. 

இருக்கிற மாடலைக் காட்டி இதேதான் சார் அது காலர் ஸ்கேனரும் ஹாட் வாட்டர் வாஷும்தான் அதுல எக்ஸ்ட்ரா. பீஸ் கொடவுன்ல இருக்கு. 

விலை என்ன 

உடனே விலைப் பட்டியலைப் புரட்டி 26,000/- 

மேனேஜர் எங்க 

வெட்டி மூன்று நாள் ஆன காய்ந்த வாழை மட்டையாய் சட்டைக்கும் உடலுக்கும் அரை அடி இடைவெளியில் காற்றோட்டமாய் அமர்ந்திருந்தவரைக் காட்டி, ‘அதோ இருக்காரு’ என தான் ஏதோ கடைக்கு விருந்தாளியாய் வந்திருப்பதுபோலச் சொன்னார் விற்பனையாளர். 

என்னங்க இறுதி விலை என்ன 

எந்த மாடல்ப்பா என்று அமர்ந்திருந்த இடத்திலிருந்தே கத்தினார் இவர் 

அதான் சார் அந்த யூ சோனிக் என, ஒரு மஸ்ஸாலா என கிச்சனுக்கு ஆர்டர் கொடுக்கும் சர்வர் போல பதிலுக்குக் கத்தினார் அவர் 

அது வந்து சார் என்று விலைப்பட்டியலை எடுத்தார் இவர் 

என்னங்க மாறி மாறி ஸ்டார் ஓட்டல் மெனு கார்டாட்டம் MRP பாத்து சொல்லறீங்க 

வெல கேட்டீங்களே

யாரு மொதலாளி 

ஓனர் இல்லை சார் 

சரி இன்சார்ஜ் யாரு 

அதோ இருக்காரு

வளமான கன்னங்களுடன் கல்லாவில் யூனிஃபார்மில் உட்கார்ந்திருந்த நபரைக் காட்டினார் 

ஃபைனல் பிரைஸ் என்னங்க அந்த மாடலுக்கு 

எந்த மாடல்ப்பா. அதுவா 25,000/- சார் 

கிண்டலா பண்றீங்க. வாங்கற இடத்தை ஏற்கெனவே முடிவு பண்ணியாச்சி. உங்க பவுசு என்னன்னு பாக்கதான் வந்தேன். என்ன இவ்ளோ விட்டேத்தியா வியாபாரம் பண்றீங்க. போங்கைய்யா நீங்களும் உங்க கடையும் என்று திட்டிவிட்டு நகரப் பார்த்தேன்

ஆக்ஸஸரீஸ்லாம் ஃப்ரீயா குடுக்கறோம்னு சொல்லி முடிப்பா என்று கல்லாக்காரர் விற்பனையாளரிடம் தழையக் கூறுவது காதில் விழுந்தது

வெளியேற முற்படுகையில் அதே வழிமறித்து வரவேற்கும் விற்பனையாளக் கூட்டம். 

என்னமோ இவங்க மட்டும்தான் இந்த வாஷிங் மெஷின் விக்கிறாப்புல என்ன அலட்சியமா வெல சொல்றாங்க என்றபடி வெளியேறினால், இந்த விலைக்கு எங்க கிடைக்கிதோ வாங்கிக்க என்றது ஒரு குரல். பின்னால் திரும்பி, 

யார்ரா அது. இதைவிடக் குறைவான விலைக்கு வாங்கிட்டு, பில்லைக் கொணாந்து காட்டினா நீ சொன்ன விலைக்கும் அதுக்குமான டிஃபரன்ஸைத் தர்ரியா. இந்தத் திமிருனாலதான் உன் கடைல விக்கிற கூட்டம் ஜாஸ்தியா இருக்கு சரவணா ஸ்டோர்ஸ்ல வாங்கற கூட்டம் நெரியிது. இந்த லட்சனத்துல ரெண்டும் அண்ணாச்சி வேற. 

எதிரில் சற்றுத் தள்ளி விவேக். 

நான் எந்த மாடலை விசாரிக்கிறேன் என்று, இவர்களைவிட CPI (M) பொலீட் பீரோ சீக்கிரம் புரிந்துகொண்டு முடிவெடுத்துவிடும் என்கிற அளவில் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். 

ஒருவர் யுரேகா என்பது போல யூசோனிக் என்று கூவினார். 

இங்க இல்லை. கொடவுன்ல இருக்கு குடுக்கலாம் என்றார். 

வெல 

பிளாஸ்டிக் உரைகளால் ஆன புக் லெட்டைப் பார்த்துவிட்டு 28,600/- என்றார் 

என்னாது என்று குரலை உயர்த்தினேன்

உள்ள போய் விலையைக் கேளுப்பா 

சாரி சார் இதுதான் விக்கிற விலை 26,000/- என்று பட்டியலில் இருந்த விலை மீது விரலை வைத்துக் காட்டினார் 

இது MRP அதிகபட்ச விலை. நான் கேக்கறது நீங்க என்ன விலைக்குக் குடுப்பீங்கன்னு 

அதை மேனேஜர் கிட்டதான் சார் கேக்கணும் 

மேனேஜர் எங்க இருக்கார்னு யார் கிட்ட கேக்கணும். 

....

இவ்ளோ பெரிய இடத்தைப் பிடிச்சி போட்டுகிட்டு இவ்ளோ சாமானை வெச்சிகிட்டு இவ்ளோ பேரு நின்னுகிட்டு சூப்பரா வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கீங்க 

விவேக்கிலிருந்து வெளியில் வந்து பாலத்தின் கீழாக ரயிவே லைனை ஒட்டி துரைசாமி சப்வேயின் பக்கவாட்டில் போய் போத்தீஸில் திரும்பி ரங்கனாதன் தெரு சரவணா போகலாம் என்ற முடிவுடன் சென்றுகொண்டிருந்தேன்.

வேலை ரீதியாகவும் ரங்கனாதான் தெரு சரவணா ஸ்டோர்ஸுக்குப் போயிருக்கிறேன். வீட்டில் விவாதிப்பதற்காக என்று பொய் சொல்லி, அட்டையின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நிறைய தடவை போட்டோ எடுத்திருக்கிறேன். அது என்னவோ என் முகத்தைப் பார்த்தால் இதோ இப்போதே கார்டைத் தேய்த்து காரில் எடுத்துக் கொண்டு போய்விடுவார் என்று தோன்றுமோ என்னவோ, ஆ இங்க பூசு ஆ இங்க பூசு என்று கவுண்டமணி காட்டுவாசிப் பெண்களுக்குக் காட்டுவதைப் போல போட்டோ எடுத்துக்கொள்ள வளைத்து வளைத்து அட்டைப் பெட்டியைக் காட்டுவார்கள். குஷியாக இருந்தாலும் சர்வ நிச்சயமாய் வாங்கப் போவதில்லை என்பதால் உள்ளூரக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி ஈஷிக்கொள்ளும்.

ஆனால் ரங்கனாதன் தெரு சரவணாவில் எலக்ட்ராணிக் பொருட்கள் விற்கும் ஏரியாவில் வாஷிங் மெஷின் பார்த்த ஞாபகமில்லை. எனவே  தொலைவில் போத்தீஸ் தெரிந்ததும் பக்கவாட்டில் பனகல் பார்க்குக்காய் திரும்பினேன். அந்த சரவணாவில் வாஷிங் மெஷின் உண்டா என விசாரித்தால் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வயதான செக்யூரிட்டியே சொல்லிவிட்டார் சார் வாஷிங் மெஷின் இங்க விக்கிறதில்லை இப்பிடியே ஜி என் செட்டி ரோடு போங்க என்று. 

பல கடைகளில் தம் கடையில் என்னென்ன விற்கிறோம் என்பது தெரியாமல் கேட்டுச் சொல்கிற சேல்ஸ் மேன்கள் இருக்கிற இதே சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் செக்யூரிட்டிக்குத் தெரிந்திருக்கிறது தாம் என்ன விற்பதில்லை என்று. அதன் வாயிலில் ஆட்டோக்காரர்கள் சவாரிக்கு மொய்ப்பதில் ஆச்சரியமென்ன. 

கண்ணதாசன் சிலைக்கு முன்னதாக முருகன் இட்லிக்கும் விருது நகர் ஓட்டலுக்கும் முன்பாக இருந்தது சரவணா ஸ்டோர்ஸ்.

வாஷிங் மெஷின்...

முதல் மாடி சார் 

வரிசையாய் நிறைய கம்பெனிகளின் வாஷிங் மெஷின்கள்

காட்ரேஜ் வாஷிங் மெஷின்... 

இங்க சார்

இந்த மாடல் என்ன விலை 

இதுல போட்டுருக்கிற விலைதான் சார் 22,248/- 

விற்பனையாளப் பையன் தெலுங்கு வாடையில் விளக்கத் தொடங்கினான். போதும் தெரியும் என்கிற விதமாய் கையமர்த்தினேன். ஆந்திராவிலும் அண்ணாச்சி உண்டோ என்னவோ 

மேனேஜர் எங்க 

அந்தப் பையன் போய் மேனேஜரை அழைத்து வந்தான். அவர் இவனைவிடக் கொஞ்சம் பெரிய பையர். இவன் சீருடை சட்டை நீலம் அவர் சீருடை வெளிர் பிரவுன். 

கேஷ் பேமெண்ட்னா ஃபைனல் பிரைஸ் என்ன 

சார் ஒரே பிரைஸ்தான் சார் எங்ககிட்ட. எங்க ஸ்டிக்கர்ல ஒட்டியிருக்குற பிரைஸ்தான் சார். இது MRP பிரைஸ் இல்லை எங்க மேனேஜ் மெண்ட் முடிவு பண்ற பிரைஸ் இந்த ஸ்டிக்கர்.

தெரியுங்க. அடக்க விலைலேந்து விநியோகஸ்தர் டிஸ்கவுண்ட்டையும் சேத்துதான் MRP ஃபிக்ஸ் பன்றாங்க. MRPல கிட்டத்தட்ட 40% கவர்ன்மென்ண்டே வரி விலக்கு குடுத்து மீதிக்குதான் எக்சைஸ் டூட்டி போடுது. 28,600னு போட்டுருக்குற இந்த கம்பெனி MRPலேந்து டீலர் டிஸ்கவுண்ட் கிட்டத்தட்ட 40% அவன் அதுலேந்து டிஸ்ட்ரிபியூட்டர் டிஸ்கவுண்ட் குடுக்கறான். அதுலேந்து அவன் ரிடெய்லருக்கு டிஸ்கவுண்ட் குடுக்கறான். நீங்க உங்க டிஸ்கவுண்ட் மாரிஜினைக் குறைச்சிகிட்டு ஒரு விலையை ஃபிக்ஸ் பண்றீங்க. அதான் அந்த ஸ்டிக்கர் பிரைஸ் சரியா 

ஆமா சார். குழந்தை வந்தாலும் அதே பிரைஸ்தான் சார். அதைக் குறைக்கிற அதிகாரம் யாருக்கும் கிடையாது சார்.

இதெல்லாம் வித்து காசு குடுக்குற, விக்காட்டா பொருளைத் திருப்பிக் குடுக்குற பேசிஸ்ல முதலே போடாம 90 நாள் கிரெடிட்ல வாங்கி வெச்சிருக்குறதால இவ்ளோ குறைச்ச விலைல உங்களால குடுக்க முடியிது அப்படிதானே

அதெல்லாம் மேனேஜ்மெண்ட் விசயம் எங்குளுக்குத் தெரியாது சார் 

ஆந்திரா அந்தப் பக்கமாய் போனார். தம்பி என்றதும் அருகில் வந்தார்.

இதுக்கு ஸ்டேண்ட் எப்படி 

ரண்டு இருக்கு சார். கம்பெனி ஸ்டாண்டு 1000/- நம்ம ஸ்டாண்டு 750/- நாலாது மாடிலொ இருக்கு

சைஸ் கரெக்டா இருக்குமா 

6 கேஜி 6.5 கேஜி ரெண்டுக்கும் ஒரே ஸ்டாண்ட்டு சார் கரெக்டா செட்டாகும். கொணாந்து வெச்சி காட்டறேன் சார் 

சரி ஸ்டாக் இருக்கா 

ஒன்னு இருக்கு சார் முன்னாலொ பாத்திட்டேன் என்றபடி கம்ப்யூட்டரில் அடித்துக் காட்டினான் மாநிறத்துக்கும் சற்றுக் குறைவாய் இருந்த அந்த சூட்டிகையான பையன். பாராட்டாய் அவன் தோளைத் தொட முயன்றேன் என் உயரம் காரணமாய், இல்லை அவன் உயரம் காரணமாய் என்னால் அவன் புஜத்தைத்தான் இயல்பாய்த் தொட முடிந்தது. மாடியிலிருந்து ஸ்டாண்டை எடுத்துவந்து வாஷிங் மெஷினை அதில் வைத்துக் காட்டினான் கச்சிதமாய் இருந்தது. 

900 ரூபாய்க்கு பயணப் பை ஒன்றை மனைவிக்காக வாங்கிக்கொண்டோம். கார்டைத் தேய்த்துவிட்டுக் கிளம்பும்போது அந்தப் பையனைத் தேடினேன். காணவில்லை. 

லெவிஸ் கடையில் 1,299/- MRPக்கு வாங்கிய, பாந்தமாய் பொருந்தியிருந்த Made in India பட்டை தோல் பெல்ட், வண்டியில் உட்காரும்போது வயிற்றை லேசாய் இறுக்கவே கொஞ்சம் இறக்கிவிட்டுக் கொண்டேன். அதற்கு முன் பயன்படுத்திக்கொண்டிருந்தது 2005ல் 1700/- MRPக்கு வாங்கிய Allen Solly Suede பெல்ட். பத்து வருடத்தில் கொஞ்சம் பழைய சாயல் படிந்திருந்தாலும் பரவாயில்லை தன்னுடைய ஜீன்ஸுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டிருந்தாள் மனைவி.