20 September 2015

சம்திங் சம்திங்

சார் பிசியா இருக்கீங்களா ரெண்டு நிமிசம் பேசலாமா 

சொல்லுங்க வீட்லதான் இருக்கேன் 


இல்ல இந்த டிரெய்னேஜ் கனெக்‌ஷனுக்குக் கட்டணும்னு முனுசிபாலிடியிலேந்து வந்து சொல்லிட்டுப் போயிருக்காங்க 

எவ்ளோனு சொல்லுங்க வழக்கம் போல NEFTல உங்களுக்கு அனுப்பி வெச்சிடறேன் 

இல்ல சார். அது ஓகே. ஒரு ஃப்ளாட்டுக்கு ஆயிரம் ரூபானு 8000 கேக்கறாரு முனுசிபாலிடி ஆபீஸ்லேந்து ஒருத்தர்

எதுக்காம் 

இல்ல நமக்குக் கனெக்‌ஷன் குடுத்தது 2013. அதுலேந்து வருசத்துக்கு 1800 ரூபானு 3 வருசத்துக்கு போட்டா 5000க்கு மேல போகுமாம். இந்த வருசத்துக்கு மட்டும் அதாவது 2016 மார்ச் முடிய இந்த ஒரு வருசத்துக்கு மட்டும் 1800 ரூபா போட்டுத் தரேன்றாரு. ஆபீஸுக்கு வந்து எவ்ளோ அமவுண்ட் போட்டுருக்காருங்கறதைப் பாத்துட்டு குடுத்தா போதும்ங்கறாரு 

நாம யாராவது கேட்டமா 

இல்லை அவராதான் சொன்னாரு ரெண்டு மூணு தடவை வந்துட்டுப் போயிட்டாரு 

5400 ரூபாய் கட்டறதுக்கு பதிலா 1800 ருபா வரியும் 1000 ருபா இவனுக்குமா சேத்து வெறும் 2800 ரூபா கட்டினாலே போதும்னா 2600 மிச்சமாவுமேனு நாம இல்லைங்க இவன் பின்னாடி அலையணும் இவன் ஏன் நம்ம பின்னாடி சுத்தறான்.  

ஹஹ்ஹஹ்ஹா அதான

அடுத்த வருசமோ அதுக்கு அடுத்த வருசமோ ஆடிட்ல வந்து பிடிச்சி பழசுக்கு கட்டுடான்னா இவுருக்குக் குடுத்த ஆயிரத்தை இவுரு ரீஃபண்ட் பண்ணிடுவாராமா 

ஹஹ்ஹஹ்ஹா 

இதெல்லாம் வேலைக்காவாது. ஒழுங்கா எல்லா வருஷத்துக்கும் வரி போடச் சொல்லுங்க கட்டிடலாம். நியாயமா பாத்தாலே நாம கட்டறதுதான் சரி. மாசம் 150 ரூபாதானே. யோசிச்சுப் பாருங்க நான் எங்கையோ இங்க ஒக்காந்துருக்கேன் பாவம் நீங்கதான செப்டிக் டேங்க்கு ஃபுல்லாயிடுச்சி ஃபுல்லாயிடுச்சினு லாரிக்கு அலஞ்சிருக்கீங்க. எவ்ளோ நாத்தம். எவ்ளோ கஷ்டம் 2000 3000ம்னு ரெண்டு மூனு மாசத்துக்கு கொட்டிக் கொட்டிக் குடுத்துருக்கோம். அதையெல்லாம் பாத்தா மாசம் 150 ரூபா ஒரு பணமா. 

கரெக்டுதான் சார் அப்ப சொல்லிடறேன். 

மாசம் 150ங்கறது முனுசிபாலிடில ஃபிக்ஸ் பண்ணினதுதானே. 

ஆமாஆமா. அவர் நம்பர் கூட குடுத்துருக்கார் வேணும்னா நீங்க கூடப் பேசிப்பாருங்க. 

ஒ நம்பர்லாம் குடுத்துருக்காரா அப்ப பேசிடறேன் 

ஹஹ்ஹஹ்ஹா 

****

ஹலோ 

ஹலோ 

நான் (இங்கேந்து இன்னார்) பேசறேன் அந்த டிரெய்னேஜ் விஷயமா...

ஒ அந்த அபார்ட்மெண்ட்டா ஆமா நான்தான் சொல்லுங்க சார். 

நான் இன்வெஸ்ட்டிகேஷன்ல ஒர்க் பன்றேங்க 

அப்படியா சார் சரி சார் சரி சார் நல்லது சார் 

வீட்டுக்கு ஆயிரம் ரூபா கேட்டிங்கன்னு சொன்னாங்க 

சார் சார் டிமாண்டுலாம் பண்ணலை சார். விருப்பப்பட்டா குடுங்கன்னுதான் சொல்லிட்டு வந்தேன். குடுக்கலைனாலும் பரவாயில்லை சார். கட்டாயம்லாம் ஒன்னும் இல்லை. 

அது இல்லைங்க ஆடிட் வந்தாங்கன்னா பழசைக் கேப்பாங்க இல்ல அப்ப நீங்க வேற எங்கையாச்சும் இருப்பீங்க எப்படியும் பழசை நாங்கக் கட்டிதானே ஆவணும் இண்ட்ரஸ்ட்டோட 

இல்லை சார் நீங்களே வந்து பாத்துக்குங்க சார் நான் பொய் சொல்லலை 1800தான் போட்டிருக்கேன் 

அதாங்க சொல்றேன் ஏன் 1800 மட்டும். 2013ல கனெக்‌ஷன் குடுத்தாங்க அதுலேந்து போட்டா எவ்ளோ ஆகுமோ மொத்தத்துக்கும் போட்டுட வேண்டியதுதானே.  

இல்லை சார் இந்த வருசத்துக்குதான் போட முடியும் 

ஏன் 

இல்ல சார் 2013, 2014 ரெண்டு வருசத்துக்கும் பில்லு போட விட்டுட்டாங்க 

ஒ பில்லே போடலைங்கறீங்களா 

ஆமா சார் விட்டுட்டாங்க. அப்ப நான் இல்லை வேற ஒருத்தர் 

சரி அதனால என்ன அந்த ரெண்டு வருசத்துக்கும் இப்ப பில்லு போடுங்க மொத்தமா கட்டிடறோம் 

முடியாது சார் 

ஏன் 

அந்தந்த வருசத்து பில்லை அப்பப்பதான் போடணும் 

ஒ போட விட்டுப் போச்சுங்கறீங்களா 

ஆமா சார் போடாம விட்டுட்டாங்க

அப்ப கட்டலைனா எங்க தப்பு இல்லைங்கறீங்களா 

ஆமா சார், பில்லே ரெய்ஸ் பண்ணலைனா உங்களை எப்படி சார் தப்பு சொல்ல முடியும் 

பழைய பில்லை சட்டப்படி இப்ப ரெய்ஸ் பண்ணவும் முடியாதுங்கறீங்க

ஆமா சார் 

சார் அப்படின்னா இப்ப இதுல எங்குளுக்காக நீங்க என்னதான் உதவி செஞ்சிருக்கறீங்க 

..... 

ஏன் சார் நீங்க எந்த உதவியும் பண்ணாம அப்பறம் எப்படி சார் ஏதோ பெரிய உபகாரம் செஞ்சாப்புல வீட்டுக்கு ஆயிரம் ரூபா கேக்கறீங்க எதாச்சும் பண்ணியிருந்து எதாச்சும் கேட்டாக்கூட ஒரு நியாயமிருக்கு

சார் பெருசா எதுவும் கேக்கலை சார். சும்மா முடிஞ்சதைக் குடுங்கன்னுதான் கேட்டேன் டிமாண்டெல்லாம் பண்ணலை சார் 

ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டவேண்டிய 1800 ரூபாயைக் கட்டிடறோம் சரியா. பேலன்ஸுக்கும் பில் ரெய்ஸ் பண்ணச் சொல்லி லெட்டர் குடுத்துடறோம் 

சார் இதை மட்டும் கட்டினாப் போதும் பழசுக்கு பில் ரெய்ஸ் பண்ண முடியாது சார் 

அப்படி ஒரு சட்டம் எப்படிங்க இருக்க முடியும். பேண்டிருக்கேயில்ல வைடா காசைனு சொன்னாதான அது சட்டம். அஞ்சு வருஷம் கழிச்சு கட்டுடான்னா நான் ஏன் அனாவசியமா அஞ்சு வருஷ வட்டியைக் கட்டணும் இப்பவே கட்டிட்டா வட்டி இந்த ரெண்டு வருஷத்தோட போவுமில்லே 

அனாவசியமா எதுக்கு சார். எல்லாருக்கும் பிரச்சனை... 

நான் பழசை கட்டறதுல உங்களுக்கு என்ன சார் பிரச்சனை 

எனக்கு இல்லை சார் எல்லாருக்கும்...

ஓ நிறைய பேருக்கு பழைய பில்களை ரெய்ஸ் பண்ணாம விட்டுட்டாங்களா பெரிய ராக்கெட்டா இருக்கும் போலயிருக்கே

.....

ஹலோ ஹலோ ஹலோ