விமர்சனம் வேறு. அவதூறு செய்வதென்பது வேறு. நக்கலாக இருப்பதன் காரணமாய் விமர்சனம் ஒருபோதும் அவதூறு ஆகிவிடாது. அடிப்படையோ எவ்வித ஆதாரமோ இன்றி செய்யப்படுவது கட்டாயம் அவதூறு மட்டுமே.
தங்களது. ஊர், சாதி, கொள்கை போன்ற சாய்வுகள் காரணமாய், என் எழுத்தைப் பற்றிய பெரிய அபிப்ராயம் இல்லாத ஆரம்பகால இலக்கிய நண்பர்கள் இன்றும் எனக்கு நண்பர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் பாராட்டப்பட்ட எழுத்துகள் என்னுடன் ஒப்பிடக்கூட அருகதையற்றவையாய் இருப்பதைக் குறிப்பிட்டு, முகத்துக்கு எதிரில் போங்கடாங்க... என்று சொல்லி இருக்கிறேன். இதில் பலர் 80-86க்குப் பிறகு நான் எழுதிய எதையும் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரு மனிதனாக என்னைப் பற்றி கருத்து என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். பல தருணங்களில், என் பின்னாலும் முகத்துக்கு எதிராகவும் கூட நான் கூச்சப்படும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்கள். என்னை நேரடியாக அறிந்த என்னுடன் பழகிய பழைய ஆட்கள் யாரை வேண்டுமானாலும் இது குறித்து விசாரித்து அறியலாம் எனக் கூறிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
எந்த சண்டையும் நானாக ஆரம்பித்ததாகவும் இருக்காது. சண்டை என்று வந்தால் நான் சாதாரணமாய் பின் வாங்குவதும் இல்லை. மெய்நிகர் உலகில் மட்டுமல்லை, நிஜமான இழப்புகளை சந்திக்க நேரும் மெய்யுலகிலும் நான் சண்டைக்கு அஞ்சியதில்லை என்பதற்கு என் அலுவலக சண்டைகளே ஆதாரம். அலுவலகத்தில் உட்பட, நான் கடுமையாய் தாக்கிய எவரையும் ஆதாரமின்றியோ அடிப்படையின்றியோ அவதூறு செய்ததுமில்லை.
எனவே நான் நக்கலடிக்கும் விமர்சிக்கும் யாருடனும் எனக்கு எவ்வித வன்மமோ உள்நோக்கமோ கிடையாது.
அவதூறு என்பது முற்றிலும் வேறு. அதற்கு விருப்பக்குறி இடுபவன் என்னை நேரடியாய் சந்திக்கத் துப்பில்லாத கோழை. எனவே அவன் என்னுடன் எவ்விதத்திலும் தொடர்பில் இருக்கத் தகுதியற்றவன்.
என்னய்யா இது ஒரு லைக்குக்குப் போய் இவ்வளவு அலப்பறையா என்று கேட்கலாம்.
இணையத்தில் பெரும்பாலோருக்கு லைக் போடுவது எச்சி துப்புவது போன்ற அர்த்தமற்ற அணிச்சை செயலாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, என்னைப் பற்றிய அவதூறுக்கு லைக் போடுவது என் மீது எச்சில் துப்புவதற்கு சமானம்.
என்னைப் பற்றிய அவதூறுக்கு லைக் போடுவது உன் உரிமை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதே வாயோடு இங்கேயும் வந்து நக்கிக்கொண்டு இருக்காதே எனக் கூறுகிறது என் சுயமரியாதை.