நேற்று விடியற்காலை ஆள் தூக்கும் வேலை. வேலை முடித்துத் திரும்பும்போது 7 மணி. QMC சிக்னலில் நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குச் சென்றால் என்ன என்கிற யோசனை வந்தது. நேரே செல்ல பச்சை விழவே, சரி வேண்டாம் போ என வண்டியை பெஸண்ட்நகர் நோக்கி முடுக்கினேன்.
சாந்தோமில் லஸ்ஸுக்குப் போகும் சிக்னல் விழுந்திருந்தது. சரி போ என பைக்கைத் திருப்பினேன்.
பார்க்கில் எல்லா முகங்களும் தெரியும்படியாக, அப்பிரத்க்ஷணமாக சும்மா நடக்கத் தொடங்கினேன். எதுவும் தெரிந்த முகமில்லை. பாதி சுற்றிலேயே போரடித்து குறுக்காய் நடந்து மறுபுறம் வந்தேன். நடு வழியில் தளர் நடையில் சாரு. என்னைப் பார்த்ததும் நம்ப முடியாமல் சிரித்தபடி, என்ன மாமல்லன் இங்க என்றார்.
கொஞ்ச நேரப் பேச்சுக்குப் பின், நூறு நாற்காலிகள் பத்தி நீ எதோ எழுதியிருக்கேனு சொன்னாங்க என்றார்.
எதோ ஒண்ணு ரெண்டு ட்விட்டு போட்டேன்னு நினைக்கிறேன் என்று அதைப் Pஅர்த்ச் சுருக்கமாகச் சொன்னேன்.
சிரித்தபடி, காப்பிரைட் பிரச்சனை வந்துறப் போவுது. இப்ப நீ சொன்னதை அப்படியே நான் பேசி வெச்சிருக்கேன். யூடியூப்ல இருக்கு பாரு என்றார்.
நான் கட்டுரையாய் எழுதும் வரை சத்தியமாய் அதைப் பார்க்கமாட்டேன் என மனதிற்குள் முடிவு செய்துகொண்டு, ஜெயமோகன் எப்படி இலக்கியத்துக்கு சம்மந்தமில்லாத வெகுஜன எழுத்தார் என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசினேன்.
யோவ் நூறு நாற்காலிகள் பத்தி எழுதுய்யா
கண்டிப்பா எழுதறேன்
இதுதான் மகாமுத்ராவில் செல்ஃபி எடுத்துக்கொள்ள நேர்ந்த கதை