//அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அறையின் கதவு வழியே ஒரு கழுத்தில் மணி கட்டப்பட்ட பூனை ஒன்று மெதுவாக நடந்து வந்தது//
பொதுவாக எந்த உயிரும் வாயில் வழியாகத்தான் வரும். வரவும் முடியும். சூஃபி ஞானி என்பதால் இந்தப் பூனை கதவு வழியே வருகிறது.
நாவலில், பல கழுத்துகள் கொண்ட பல பூனைகள் வருவதால், வித்தியாசப்படுத்திக்காட்ட, ‘ஒரு கழுத்தில் மணி கட்டப்பட்ட பூனை’ என்று, இடக்கையால் எழுதியிருக்கிறார் என்று ஊகித்துக் கொள்ளவேண்டியது வாசகர் கடமை.
//ஒரு பூனை தன்னை எலி என்று அழைப்பதை ஒருபோதும் ஆட்சேபம் செய்வது கிடையாது//
தன்னை எலி என்று பிறர் அழைப்பதை எந்தப் பூனையும் ஆட்சேபிப்பதில்லை.
அல்லது
தான் எலி என்று அழைக்கப்படுவதை எந்தப் பூனையும் ஆட்சேபிப்பதில்லை.
எழுத்தாளன்தான் பாவம் எல்லாவற்றையும் 'செய்ய’வேண்டி இருக்கிறது - ஆட்சேபம் உட்பட.
//”என்ன சொல்கிறாய் தூக்குக் கயிறா?”
எனக்கும் இதே ஆச்சரியம்தான் ஏற்பட்டது.”//
எழுத்தாளர், எஸ்.ரா எனும்போது, வலக்கையிலேயே எழுதப்பட்டதாக இருந்தாலும் உரையாடும் இரு பாத்திரங்களும் ’இதே’ ஆச்சரியத்தை அடைய வேண்டும் என்பது வாசகனின் நெற்றியில் என்றோ எழுதப்பட்டுவிட்டதில்லையா.
//அவன் தன் தோளில் நிறைய சுருக்கிடப்பட்ட தூக்குக் கயிறுகளைப் போட்டிருந்தான்//
தமிழ் ஆங்கிலம் என்று பல மொழிகளை ஒரே சமயத்தில் தூக்கில் போடவேண்டுமென்றால், தூக்குக் கயிற்றில் ஒரு சுருக்கைப் பொட்டால் போதாது நிறைய சுருக்குகளைப் போட்டிருக்க வேண்டியது அவசியம் தானில்லையா.
//ஆள்பவர்கள் கவிதையைக் கண்டு ஒருபோதும் பயப்படுவதில்லை என்றான் உமர்//
//”நீ உண்மையைத்தானே பாடுகிறாய் ஜமீல், பின் ஏன் பயப்படுகிராய்”//
//உமர் சிரித்தபடியே சொன்னான், உன் பூனை ஒரு ஞானியேதான், உரத்த அறிவிப்புகள் எதுவும் அதற்குப் பிடிப்பதில்லை”
இவை மூன்றும் ஒரே பாத்திரத்தின் டயலாக்குகள்.
பி.கு: எழுத்தாளன் உயிரைக் கொடுத்து எழுதியதாகவே இருந்தாலும், எழுதியதை அப்படியே வெளியிட்டுவிடுவது, எடிட்டோரியல் குழு வேலை செய்யவில்லை என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும் என்று, என்னத்தையாவது நோண்டி வெளியிடும் கிரியேட்டிவ் உதவி எடிட்டர்கள், இதில் இவ்வளவு பிழைகள் இருந்தும், உயிர்மை வெளியிட்ட புத்தகம் என்பதால், பிழைகளைத் ’திருத்தி’ காப்புரிமைப் பிரச்சனையை இழுத்துவிட்டுக் கொள்ளவேண்டாம் என்கிற தற்காப்பில் எடிட் செய்யாமல் வெளியிட்டு விட்டனர் என்று எண்ணிக்கொள்வது எல்லோருக்கும் நல்லது - எனக்கு உட்பட.