தெரிஞ்சோ தெரியாமையோ, நான் உங்களை ஏதாவது தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க அண்ணே என்றார் ஓடிவந்து கைகுலுக்கிய நண்பர்.
இப்படிக் கேட்டாக வேண்டும் என்று யாராவது கழுத்தில் கத்தி வைத்தால் என் கதி என்னாவது. நான் எத்தனைப்பேர் காலில் விழுந்தாக வேண்டும் என்கிற எண்ணம் மின்னலாய் நெளிய பகீரென்றது. ஒரே ஆறுதல் இது எனக்குப் பொருந்தாது, ஏனெனில் நான் அடிக்கிற அடி திட்டுகிற திட்டுகள் யாவும், யாரோ சொல்லிக்கொடுத்தோ எங்கோ படித்துவிட்டோ செய்வதில்லை தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்ள. என் காரியங்களெல்லாம் பிரக்ஞைபூர்வமாய் என் சுய நினைவுடனும் சுய புத்தியுடனும் மட்டுமே செய்யப்பட்டவை செய்துகொண்டு இருப்பவை.
என்ன சார் திடீர்னு...
நான் மக்கா போறேன்ணே
தாராளமா போய்ட்டு வாங்க. அதுக்கு ஏன் மன்னிப்பு
இல்லே மக்கா போகும் போது இப்படிக் கேக்கணும்
ஒ இப்படிக் கேக்கணும்ங்கறது உங்க ஐதீகமா
ஐதீகம் இல்லன்ணே. மன்னிப்பு கேக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்குமானு தெரியாது ஏன்னா அவ்ளோ தூரம் போய்ட்டு திரும்பி வருவமானு உறுதியா தெரியாது இல்லையா அதனால கேக்கிறது.
வாயைக் கழுவுங்க. எல்லாம் திரும்பி வருவீங்க. ஒட்டகத்து மேலையா போகப்போறீங்க. ப்ளைட்லதானேங்க போய் வரப்போறீங்க.
நீங்க வேற. உம்ரா பயணம் போகும்போது, திரும்பி வருவமா இல்லையானு தெரியாதுங்கறதால சொத்துக்கு உயில் எழுதி வெச்சிட்டுப் போவணுங்க.
ஆ
ஆமாம். ஆனா இன்னும் நீங்க என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லலை பாருங்க.
அட என்னங்க இது சின்னப் புள்ளையாட்டம்.
உம்ரா போகும்போது கண்டிப்பா கேக்கணுங்க. அதான் கேக்கறேன். மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க.
யோவ் கேக்கணும்னு உன் மதம் சொல்லுது கேட்டுட்டே. மன்னிக்கணும்னு என் மதமில்லே, என் அறிவும் மனசும் சொன்னாதானைய்யா நான் மன்னிக்க முடியும். அந்தளவுக்கு இப்பதான் நீ என்னைத் துன்புறுத்திகிட்டு இருக்கே என்றா சொல்ல முடியும் அந்த பாவப்பட்ட ஜீவனிடம்.
தெரிந்தோ தெரியாமலோ நீ செய்த தவறுக்கு வருந்து. மனதில் வன்மத்தைச் சுமந்து திரியாதே. மன்னிப்பு கேள். எல்லாமே எதோ அந்த நேரத்து கோபத்தில் செய்பவையும் சொல்பவையும்தாமே. அவற்றைப் பெரிது படுத்தி வாழ்நாள் முழுக்க சுமந்து அவஸ்தைப் படாமல் சக மனிதனை மன்னித்துவிடு என்கிற கருத்துருவாக இதைப் பார்த்தால் கவித்துவம்.
இதைத்தான் பைபிளைத் தூக்கிய தாஸ்தாவெஸ்கி டால்ஸ்டாயிலிருந்து தி ஜானகிராமன் வரை எல்லோரும் இலக்கியமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
காஃபிர்களைக் கொல் என்று குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறிக்கொண்டே திரிபவர்களுக்கு ஜாகிர் நாயக் கூறும் பதில், இந்த வார்த்தைகள் எப்போது எந்த சூழ்நிலையில் கூறப்பட்டன என்பதைப் பார்க்கவேண்டும் என்பதுதான். https://www.youtube.com/watch?v=1H-hzignPbQ
இது உம்ரா பயணம் மேற்கொள்ளும் நண்பருக்கும் பொருந்தும்.
அந்த காலத்தில் மக்கா செல்வதென்பது, அதுவும் 1300 வருடங்கள் முன்பு போர் நடந்துகொண்டு இருந்த காலத்தில் சென்று வருவது என்பது மறுஜென்மம் எடுப்பதற்கு ஒப்பானது என்பதால் உருவான கருத்துருவை, பத்திரமாய் ஃப்ளைட்டில் போய் இறங்கி, டூரிஸ்ட்டு போல சுற்றிவிட்டு, வந்து சேரப்போகிற விஷயமாகிவிட்ட பின்பும் அட்சர சுத்தமாய் அப்படியே கடைபித்தாக வேண்டும் என்று என்ன கட்டாயம் என்று தோன்றியது.
எதுவொன்றைச் செய்வதும் செய்வதைத் தவிர்ப்பதும் புத்தகத்தில் போட்டிருக்கிறது என்பதால் மட்டுமின்றி, அது ஏன் சரி அல்லது தவறு எனப் பகுத்து அறியும் புத்தியில் உறைப்பதால் இருக்க வேண்டும்.
ஏனெனில் சக்கையல்ல சாரமே முக்கியம்.