25 September 2016

ஆத்மாநாம் - 2083

கைபேசியில், தம் பெயர் கல்யாண்ராமன் என்றும் ஆத்மாநாம் பற்றிக் காலச்சுவடுவில் கட்டுரை எழுதியவர் எனவும் தம்மை அறிமுகப்படுத்திகொண்டவர், ஆத்மாநாமின் வெளிவராத கவிதைகள் ஏதும் என்னிடம் இருக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார். என்னிடம் இருந்த ஆத்மாநாம் தொடர்பான ஓரிரண்டு கடிதங்களை ஏற்கெனவே என் பிளாகில் பதிவேற்றிவிட்டதாக நினைவு என்று கூறிவிட்டேன். ஆனால் அவரோ விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார். சமயத்தில், அவரிடம் எரிச்சல்கூடப் பட்டிருக்கிறேன். 


தற்செயலாய் இன்று, காலப்பெட்டகமாய் இருக்கும், தூசு மண்டிய என் பெட்டியை எப்படியோ எடுத்துத் திறந்துவிட்டேன்.  இன்று காலையில் கூட கல்யாணராமன் கைபேசியில் அழைத்துப் பேசியது உண்டாக்கிய, இன்னமும் நான் தேடி எடுத்துக் கொடுக்காதது ஏற்படுத்திய குற்றவுணர்வாகக்கூட இருக்கலாம். 

நான் நினைத்துக்கொண்டு இருப்பதைப்போல இதை ஏற்கெனவே பதிவேற்றி இருக்கிறேனா என்று, ஆத்மாநாம் மாமல்லன் என கூகுளில் தேடிப் பார்த்தால், அப்படி ஏதும் இருப்பதாக அதற்குத் தெரியவில்லை. நான் எதைப் பற்றி என்ன எழுதி இருக்கிறேன் என்பது, எழுதி முடித்ததும் - நிம்மதியாக இருப்பதற்காக, நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் சுத்தமாக மறந்துவிடுபவன் என்பதால், என்னைவிட கூகுளுக்கு நன்றாகத் தெரியும் என்பது என் நம்பிக்கை. 

2083 ஒரு அகால ஏடு - ஒன்று என்கிற 15 பைசா கடிதப் பத்திரிகையை, “நீங்கள் தேர்ந்தெடுத்த 150 வாசகர்களில் ஒருவர்” என்று எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார் .12.83ல். மற்ற 149 பேர்களில், எவரிடமிருந்தேனும் சற்றும் மனந்தளராத கல்யாணராமன் இதை ஏற்கெனவே கண்டடைந்துகூட இருக்கலாம். ஆனால், பெரிய வசதிகளில்லாத 80களில், இந்தக் குற்றிலக்கிய மக்கள்,  எப்படியெல்லாம் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள முண்டவேண்டி இருந்திருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய சாளரமாக, இலவசமாகக் கிடைக்கும் தொடர்பு ஊடகங்களை வாழ்வின் ஓர் அங்கமாகக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டவசமான இன்றைய தலைமுறையில் பலருக்கும் இது தெரியவரட்டுமே என்கிற ஆசையில் இதை வெளியிடுகிறேன். மற்றபடி ஆத்மாநாம் எனக்கு மிக நெருங்கிய நண்பர் என்றெல்லாம் சொல்லிகொள்ளவோ காட்டிக்கொள்ளுகிற ஆவலாதியெல்லாமோ எனக்கேதுமில்லை. 

2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 
2083 ஒரு அகால ஏடு - ஒன்று 
ஒரு ஆத்மாநாம் கவிதை 2083 ஆகஸ்ட் 11 

என் கவிதை ஒன்று 
இரண்டாயிரத்து எண்பத்து மூன்றில் 
கிடைத்தது 
கடற்கரையில் 
நானும் ஞானக் கூத்தனும் 
பேசிக் கொண்டிருந்தோம் 
சுண்டல் வாங்கிப் பிரித்தால் 
காகிதத்தில் ஒரு கோடு 
ஆத்மாநாம் எனும் வாசகங்கள் 
கவிதை ஆரம்பம் 
ஆச்சரியத்துடன் 
ஞானக் கூத்தனைக் கேட்டேன் 
இன்னும் இங்கேவா இருக்கிறோம் 
அவர் 
சூளைச் செங்கல் குவியலிலே 
தனிக் கல் ஒன்று சரிகிறது 
என்றார் 
என்ன இது வினோதம் 
இருந்த இடத்திலேயே இருப்பது 
என்றேன் 
இருப்பதை உணர்வதே வாழ்க்கை 
என்றார் 
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்து விட்டார் 
என்றார் 
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன் 
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள 
என்றார் 
நன்றி என்றேன் 
அப்பொழுது தான் 
ஒரு அணுகுண்டு வெடித்த 
சப்தம் கேட்டது 
இருவரும் 
அகதிகள் முகாமிற்கு திரும்பினோம். 

* அடுத்த ஏட்டில் ஞானக் கூத்தனின் கவிதை - ’159வது பிரதமரின் அறை’   

* 2083 தொடர்ந்து பெற ரூபாய் பத்து அனுப்புங்கள் 

* முகவரி - ஆத்மாநாம் (2083) 390, எம்.டி.எச். ரோடு, சென்னை 600 053 
ஆத்மாநாம் (கையொப்பம்) 

”நீங்கள் தேர்ந்தெடுத்த 150 வாசகர்களில் ஒருவர்”

2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083 2083