இந்தப் பொறுக்கிப் பொடி கும்பலைப் பார்த்தால், இவர்களிடம் கோட்ஸே யார் கோல்வால்கர் யார் என்று கேட்டால், எவனுக்காவது தெரியும் என்றா தோன்றுகிறது. வாய்ப்பு கிடைத்தால் கொள்ளையடிப்பதே எங்கள் கொள்கை, எவனாவது எதற்காகவாவது கலவரத்தைத் தொடங்கி வைக்க மாட்டானா என்று காத்துக் கொண்டு இருக்கிற வெற்றுப் பொறுக்கிகள் போலல்லவா இருக்கிறது இவர்கள் செய்கை.
தலித்துகளுக்கு எதிரான கலவரங்களில் எல்லா கட்சி வன்னியனும் ஈடுபடுகிறான். ஆனால் பழி விழுவது என்னவோ பா.ம.க மீது மட்டுமே என்று, எப்போதாவது தென்படுகிற, அங்கலாய்ப்புப் ஃபேஸ்புக் பதிவுகள் போலல்லவா இருக்கிறது இந்த சம்பவம்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில், திமுக அடிக்கடி போராட்டங்கள் நடத்தும். கோரிக்கைகளை சமர்ப்பிக்க, அறிவாலயத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகப் போவதும் வாடிக்கை.
அப்போது நான் SIET கல்லூரிக்கு அருகில் அண்ணாசாலையில் இருக்கும் ஆனந்தா ஆபீஸ் மையத்தில் இருந்த அலுவலகத்தில் கடைநிலை குமாஸ்தாவாக இருந்தேன். பேரணி செல்கையில் அலுவலகமே தெருவில்தான் நின்றிருக்கும். நானோ குறுக்குமறுக்காய் ஊர்வலத்துக்குள் ஊடாடிக்கொண்டு இருப்பேன்.
அதுபோல ஒரு முறை தேனாம்பேட்டை சிக்னலில் அண்ணாசாலையில், ஆலயம்மன் கோவில் பக்கம் நின்றிருந்தேன். எதிர்ப்புறம், சாலைமேலேயே இருப்பது ஆனந்தா ஓட்டல். அவ்வளவு திரளான கும்பலைப் பார்த்தும், ஒப்புக்குகூட ஷட்டரை இறக்காமல் வழக்கம்போல இயங்கிக்கொண்டு இருந்தது அந்த ஓட்டல்.
ஓத்தா இன்னா திமிரு. இவ்ளோ பேரு போறாங்களேனு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா பாரேன். ஏடிஎம்கேவா அவன், என்று ஒரு ஆள் பரபரவென்று சாலையோரம் போய் கல்லை எடுத்து ஓட்டலின் மீது எறிந்தான். அது போய் சுவரில் பட்டு நடைபாதையில் விழுந்தது.
அவன் அடுத்த கல்லை எடுக்க எத்தனிக்கையில் ஊர்வலத்தில் போய்க்கொண்டு இருந்தவர்களில் சிலர் தடுத்துவிட்டனர். தடுத்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், யோவ், யாரா இருந்தா என்ன. அவன் வியாபாரம் பண்றான். நாம என்னா கடையடைப்புன்னா அறிவிச்சோம். ஊர்வலம்தானே போய்க்கிட்டு இருக்கோம். ஒன்ன மாதிரி ஒருத்தன் ரெண்டு பேரு போதும்யா கட்சிப் பேரைக் கெடுக்க என்றார்.
கொடியுடன் வா கொடியில் செருகிய தடியுடன் வா என்று வெளிப்படையாய் அறிக்கை விட்ட கருணாநிதி கட்சிக்காரரா என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த அழைப்பு அறிக்கை, எமர்ஜென்ஸி ஏற்படுத்திய அபரிமித வலியின் எதிரொலி என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் நியாயப்படுத்த முடியுமா.
உலகம் ரொம்ப கமர்ஷியலாகிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த வீடியோ. கலவரங்கள் என்றால் முட்டாள்தனமாய்க் கண்ணில் படுவதையெல்லாம் கொளுத்துவது என்பது போய், கொலை நடந்ததற்கான குமுறலைக் காட்டுவதான பாவனைகூட இல்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என்பதையே கொள்கையாக்கிக் கொண்டு, புத்திசாலித்தனமாய் கொள்ளையடிக்கலாம் என்கிற புதிய தலைமுறையை தேசபக்தியுடன் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பதில், ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இந்துத்வர்கள் நிச்சயமாய்ப் பெருமைகொள்ளலாம். இக்கினியூண்டு இடத்தில் எறும்புபோல் என்ன சுறுசுறுப்பு மிக்க இளைஞர்கள் சிறுவர்கள். பெற்ற வயிற்றில் பிரண்டையைத்தான் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும் பாரதமாதா.
ஆனால் பார்ப்பன RSS இந்துமுன்னணி தூண்டிவிட்ட கலவரத்தில் கொள்ளையடிக்கும் கும்பலில் ஒருத்தன்கூட லேசான பார்ப்பன சாயலில்கூட இல்லாமல் இருப்பது எப்படி என்கிற யதார்த்தத்தை - குறைந்தபட்சம் என்னைத் திட்டித் தீர்த்த பின்பாவது - திராவிட தமிழ் இடதுசாரி ஃபேஸ்புக் அறிவுஜீவிகளாய்க் காட்டிக் கொள்பவர்களில் கொஞ்சமேனும் மனசாட்சி உள்ளவர்கள், ஜல்லியடிக்காமல் சிந்திக்கவும் செயல்படவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.