அந்தக் கடற்கரையை ஒட்டிய நகரத்தின் கடைத்தெருவில் அண்ணனும் தங்கையுமாக இரண்டு குழந்தைகள் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்துகொண்டு இருந்தனர். அண்ணனுக்கு ஆறு வயதும் தங்கைக்கு நான்கு வயதும் இருக்கக்கூடும்.
உடன் வந்துகொண்டு இருந்த தங்கை திடீரென பக்கத்தில் இல்லாததை உணர்ந்த அண்ணன் திரும்பிப் பார்த்தான். அவள் ஒரு பொம்மைக் கடை எதிரில் நின்று, அந்தக் கடையையே பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.
அவளைக் கடைக்குள் அழைத்துச் சென்றான். எது வேண்டும் எனக் கேட்டான். அவள் ஒரு பொம்மைக்குக் கைநீட்டினாள். அதை எடுத்து அவளிடம் கொடுத்தான். கல்லாவுக்குப்போய் எவ்வளவு என்று கேட்டான்.
இவையனைத்தையும் ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு இருந்த கடைக்காரர் புன்னகைத்தபடி, அவனிடம் எவ்வளவு இருக்கிறது எனக் கேட்டார். டிரவுசர் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, கடற்கரையில் அவர்கள் சேகரித்திருந்த கிளிஞ்சல்கள் அனைத்தையும் எடுத்து, கல்லா மேசையின் மீது கொட்டினான். கடைக்கரர் புன்னகைத்தபடி ஒவ்வொரு கிளிஞ்சலாக எடுத்து எண்ணியபடி அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
பையன் கொஞ்சம் கவலையுற்றவனாக, இன்னும் அதிகமோ எனக் கேட்டான்.
நான்கு கிளிஞ்சல்களை மட்டும் எடுத்துக் கொண்ட முதலாளி, இல்லை நீ அதிகமாகக் கொடுத்துவிட்டாய் என்று மீதியைத் திருப்பிக் கொடுத்தார்.
நிஜத்தில் இது சாத்தியமேயில்லை என்று வளர்ந்து கெட்டுவிட்ட நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அந்த மூவரில் யாரேனும் ஒருவராகக் கொஞ்ச நேரத்துக்கு நம்மை கற்பனை பண்ணிக்கொள்வது இன்றைய தினத்தைக் கவிதையாக்கக் கூடும்.