குமாஸ்தாக்களாலான 70-80களின் இலக்கிய உலகில், ஒரு வங்கி குமாஸ்தாவுக்கு உரிய ஒழுங்குடனும் விவேகத்துடனும் நான் கவிஞன் எனது தொழில் இலக்கியத்தில் இயங்குதல். இதுவே என் உழைப்பு. என் உணவை சம்பாதிக்கத் தனியாக வேறு ஏன் நான் உழைக்க வேண்டும், மாட்டேன் என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர் பிரமிள்.
அவரது அடுத்த வேளை சாப்பாடே, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய டேவிட் சந்திரசேகர் போன்ற நண்பர்களை நம்பியிருந்தது என்றபோதிலும் சாரு ஜெமோ போல, தங்களது ஆடம்பர வாழ்வுக்காக நட்பெனும் பெயரில் அவ்வப்போது அருகிலிலிருந்து அண்டக் கொடுப்பவர்களை இந்திரன் சந்திரன் என்று இலக்கியரீதியாகப் புகழ்கிற அசிங்கத்தை ஒருபோதும் செய்தவரில்லை அவர். உறவு முறிந்தபின் இலக்கிய ரீதியாகவும் காயக்கூடியவர், காயப் படுத்தத் துளியும் தயங்காதவர் என்பது வேறு விஷயம். இலக்கியவாதி சர்வ நற்குணங்களின் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கவேண்டும் என்பது, ’உங்க இஸ்கூல்ல இதான் கத்துக்குடுத்தாங்களா’ என்கிற எளிய, இலக்கிய அறங்காவலர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இலக்கியத்தில் இடமிருந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ரத்தமும் சதையுமான நிஜ வாழ்க்கையைப் போல.
அடுத்தவரை நம்பிய வயிறு என்பதற்காக எவர் வேண்டுமானாலும் – ஒரு வேளை உணவல்ல, ஒரு கிளாஸ் டீ கூட வாங்கிக்கொடுத்துவிட முடியாது பிரமிளுக்கு. தமக்கு யார் புரவலராக இருக்கலாம், இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பவராக அவரே இருந்தார். பிச்சைக்காரனுக்குத் தேர்வில்லை என்பது வெறும் பிச்சைக்காரனுக்கு மட்டுமே பொருந்தும் -காசில்லா கோடீஸ்வரனான கலைஞனுக்கல்ல.
பைலட் தியேட்டர் அருகில் இருந்த, இப்போது டம்ரோ காட்சியகம் இருக்கும் கட்டிடத்துக்கு அடுத்த கட்டிடத்தில் க்ரியா இருந்த சமயம். க்ரியாவுக்கு எதிரில் இருக்கும் காளிங்கராயன் தெரு என்று நினைவிலிருக்கும் ஒரு மஞ்சள் கட்டிடத்தின் மாடி அறையொன்றில் பிரமிள் இருந்த சமயம்.
80-81ன் ஏதோவொரு ஒரு மாலை நேரம், வழக்கம்போல எவர் தலையையோ, தேர்ந்தெடுத்த உவமையுடன் உருட்டிக்கொண்டு, பகபகவென பைத்தியம் போல சிரித்தபடி, பிரமிள் நடுத்தெருவில் நின்றிருக்க, எதிரில் அசல் பைத்தியமாக இளம் தாடி பரட்டைத் தலையுடன் நின்றுகொண்டு இருந்தேன் நான். திடுப்பென ஒரு கணத்தில், ‘அக்கினியின் புத்திரன்கள் அத்தனையும் சாம்பல்’ என்கிற பாடல் பெற்ற ஸ்தல விருட்சமான அக்கினிபுத்திரன், எங்களெதிரில் பிரசன்னமானார்.
அவர் ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனிக்காரர். க்ரியா வந்திருப்பாராய் இருக்கலாம். கீழிறங்கி வந்தவர் கண்ணில் என் நீள குர்த்தா பட்டிருக்கலாம். அதனால் தற்செயலாய் அங்கு வந்திருக்கலாம். என்ன மாமல்லன் எப்படி இருக்கீங்க என்றார்.
உதிக்கவிருந்த பாட்டாளிவர்க்கப் புரட்சியை புறநகர் டிரெய்னில் சுராங்கனி பாடி உதாசீனப்படுத்தி விட்டதற்காக அவர் என்னை அறைந்துவிட்ட பஞ்சாயத்து என் மனதில் 36-37 வருடங்கள் கழித்து இன்றுவரை நிலுவையில் இருக்கிறது என்றால் சம்பவம் நடந்து முடிந்து ஒரிரு ஆண்டுகளில் எப்படி இருந்திருக்கும்.
அக்கினிபுத்திரன் தான் என்னை பரீக்ஷாவுக்கு அழைத்து வந்தவர். அப்போது சிறிய பெரிய என எல்லா அறைகளும் கூட்டம் நடந்துகொண்டிருந்த LLA பில்டிங்கின் ஏதோ ஒரு கல்லூரிக் கவிதைப் போட்டியில் என்னைக் குர்த்தாவுடன் பார்த்ததும் யாரடா இவன் சங்கரன் போலவே இருக்கிறான் என்று என்னிடம் பரீக்ஷா பற்றிக் கூறி, அடுத்த கூட்டத்துக்கு வரும்படி அழைத்து வந்தவர் என்பது வேறு விஷயம். என்னதான் வஞ்சம் உள்ளூர கனன்றுகொண்டு இருந்தாலும் எதிரில் வந்து நின்று பெயர் சொல்லிக் கூப்பிடும் மனிதரை என்ன செய்வது எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பத்தில் வாங்க என்று சொல்லி வைத்தேன். என்றாலும் அவரது பெயரைக் கூட பிரமிளிடத்தில் சொல்லாது அவர் யாரோ என்பதைப் போல் இருந்தேன். மகனே வந்தாயா இது என் பிரமிள். இங்கு நீ எதுவுமில்லை. இற்றுப்பொன வானம்பாடிக் கூடாரத்தின் துரு பிடித்த முளை ஆணிகூட இல்லை நீ இப்போது, என்கிற வன்மத்துடன் அலட்சியமாக வாளாவிருந்தேன்.
எழுத்தைத் தவிர மீதி எல்லா விஷயத்திலும் அசடுகளாக இருக்கும் பெரும்பாலான இலக்கியவாதிகள் போன்றவரல்ல பிரமிள். பயங்கர ஷார்ப்பான ஆள் –காயாத ரத்தப் பொட்டின் பச்சை மணம் ஆக்ரஷிக்கும் அவரது கத்திமுனைச் சொற்களைப் போல. வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்த மனிதரை நான் இன்னாரென அறிமுகப் படுத்தி வைக்காவிட்டாலும் என்னை இயல்பாகப் பெயர் சொல்லி அவர் அழைத்ததனால், வந்தவரை, சோடா புட்டிக் கண்ணாடிக்குப் பின்னிருக்கும் பிரமிளின் கண்கள் துழாவிக்கொண்டு இருந்தன -முகத்தில் கொஞ்சம்கூட சிநேக பாவமின்றி. அவ்வளவு நேரம் இரண்டே பேர் சிரிப்பில் அதகளப் பட்டுக்கொண்டு இருந்த அந்தத் தெரு, உறவினர் வரக் காத்திருக்கும் இழவு வீடாய் அமைதி அப்பிக் கிடந்தது. மூவருக்கிடையிலும் என்ன செய்வதென்று தெரியாத மெளனம்.
நான் அக்கினிப்புத்திரன் என்று அவரே தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அது தம் காதில் விழுந்ததைப் போல் கூடக் காட்டிக்கொள்ளாது, டீ குடிக்கலாமா என்றார் பிரமிள் என்னிடம்.
வாங்க வாங்க என்று பரபரத்தார் அக்கினிபுத்திரன் தம் சட்டைப் பையில் அனிச்சையாய்க் கைவிட்டபடி.
காசிருக்கு ஆனால் இங்கே நல்ல டீ இல்லே என்று துண்டித்தார் பிரமிள் பொத்தாம்பொதுவாக.
கும்மென்றிருக்கும் கன்னக்கதுப்புகளுடன் நன்றாக மழமழவென முகத்தை மழித்திருந்தவரைப் பார்த்து, சட்டுனு அடையாளம் தெரிய இல்லை. ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாகத் தெரிகிறீர் என்று சொல்லி அசட்டையாய்ச் சிரித்தார் பிரமிள். முதன் முதலாக பிரமிள் தம்மிடம் பேசுவதால் உண்டான கிளர்ச்சியில் கொஞ்சம் உணர்சிவயப்பட்டு லேசாக அசடு வழிந்தபடி,
ஆமா நிறைய பேர், சொல்லியிருக்காங்க மாமல்லன் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரியா இருக்கேன்னு என்றார் அக்கினி. பிரமிள் கையில் வேப்பிலை வைத்துக் கொண்டு குறி சொல்பவர் போலவும் ஆமாம் தாயே என்று குறி கேட்கவந்தவர் பயபக்தியுடன் சொல்வது போலவும், அவர்களிருவரும் எனக்குத் தோன்றினர்.
அக்கினியின் ஜுவாலை ஒரே மாதிரியாக ஒரு இடமாக நிற்காது. நெளிந்து நெளிந்து, நேரத்துக்கேற்றார்போல் வெவ்வேறு ஷேப் எடுக்கும் என்றார் பிரமிள்.
அசல் கவிஞனின் குசும்பு, நெம்புகோல் கும்பல் கவிஞருக்குப் புரிந்ததற்கான தடயம் கூடத் தெரியவில்லை.
அந்த கட்டிடத்திலேயே இருந்த கடையிலேயே டீ குடித்தோம். ஆரம்ப மாப்பிள்ளை முறுக்குக்குப் பின் கொஞ்சம் இலகுவாகி அக்கினியிடம் கொஞ்சம் பேசினார் பிரமிள். ஆனால், அக்கினியை டீக்காசை மட்டும் கொடுக்க விடவே இல்லை.
இது நடந்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ, ஞாநியின் 17/2 பீட்டர்ஸ் காலனி வீட்டுக்கு எதிரில் இருந்த அசோக மரத்தையொட்டி, லேசாக சரிந்திருக்கும் ஒற்றைக் கல் சுவரில் அமர்ந்து இவையனைத்தையும் சுரேஷ்குமார இந்திரஜித்திடம் கூறியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக அவர் சொல்லிய சொற்கள் கூட, அப்படியே நினைவிருக்கின்றன. ஆனால் அது இங்கு வேண்டாம். காரணம் வேறொன்றுமில்லை, அவரைப் போய் தர்மசங்கடப்படுத்துவானேன் என்கிற நல்லெண்ணம்தான். போக, நானும் இப்போது 20-21 வயதுப் பையனில்லையே. ஆயிரம் இருந்தாலும் பாவம் அக்கினிபுத்திரன், அவர் இப்போது ஒய்வு பெற்ற முதியவர் வேறு இல்லையா.