ஏய் உன்ன எங்கையோ பாத்தாப்புல இருக்கே
மாஸ்க்ல பாத்துருப்பீங்க சார் - வெகு இயல்பாகக் கூறினான். சிநேகபாவத்துடன் சிரிக்க முயன்றைதைப் போலக்கூட கொஞ்சம் இருந்தது.
...
(நிஜமாகவே ஒருவேளை அசல் பாய்போலவேதான் இருக்கிறோமோ. அல்லது, குல்லா போடாமல் இருக்கும்போதே நமக்குக் குல்லா போடப் பார்க்கிறானோ இந்தப் பொடிப் பயல்)
இவ்ளோ சின்ன வயசுலையே உனக்கு ஏன் இந்த வேலை. அண்ணன் ரொம்ப இண்ட்டெலிஜெண்ட் சார்ங்குது உன் தங்கச்சி. எவ்ளோதான் ஒன்னுமில்லே ஒன்னுமேயில்லம்மானு மழுப்பினாலும் ஒன்னுமே இல்லேனா இத்தினி ஆபீசருங்க வீட்டுக்கு வந்துருப்பீங்களானு கேட்டு ஓனு அழுவுறாங்க உங்கம்மா. அம்மாவுக்கு பிபி சுகர் எல்லாம் இருக்கில்லே. அந்த ஏரியாவுல அவ்ளோ பெரிய வீட்டுக்கு, ஆம்பளப் புள்ளைனு இருக்கிறதே நீ ஒருத்தன்தானே. இந்த வேலை உனக்குத் தேவையா. இன்னும் ஒரு வாரத்துல கொழந்தை பொறக்கப் போவுதில்ல உனக்கு. கொழந்த முகத்தைப் போய்ப் பாக்க வேணாமா...
தலை தொங்கி இருந்தது.