28 May 2017

கடி

இன்று காலையில் ஓலா ஓட்டுனர் போன் செய்திருந்தார். பிடித்து செம கடி கடித்துவிட்டேன். 

ஹலோ சார் 

சொல்லுப்பா 

எப்படி இருக்கீங்க சார் 

நல்லாதான் இருக்கேன். போன ஞாயித்துக்கிழமை உன் தம்பி போன் பண்ணியிருந்தான்

ஆமா சார் 

கரெக்டா அப்பதான் ஆப்பரேஷன் ஆரம்பிக்கப் போற நேரம் அதான் அப்பறம் பேசுன்னுட்டேன் 

கண் ஆப்பரேசனா சார் 

சேச்சே இது ஆபீஸ் ஆப்பரேஷன். பெரிய கும்பலை ரவுண்டு கட்டவேண்டி இருந்த ஆப்பரேஷன். அது கிடக்கட்டும். என்னா விஷயம் சொல்லு 

ஒன்னுமில்ல சார் சும்மா... 

யோவ் சும்மா எவன்யா போன் பண்ணுவான். எதுக்காகப் பண்ணினேனு நேரா மேட்டரை சொல்லு 

இல்ல சார். மாமா உங்களைப் பாக்கணும்னாரு 

எதுக்கு 

இல்ல சார் உங்களை நேர்ல பாக்கணும்னு... 

நேர்ல எதுக்குப் பாக்கணும். கேஸ் விஷயமாதானே 

ஆமா சார் 

யோவ் உனக்கு எத்தனை தடவை சொல்றது. நீ ஒரு மாசம் முன்ன போன் பண்ணினப்பவே சொன்னேன். கேசை ஒடைக்கணும்னா நாலு வருஷம் ஆவணும். தண்டனையே ரெண்டு வருஷம்தான் ஆனா இன்னும் சார்ஜ் ஷீட்டே போடலைனு ஹைகோர்ட்ல கேஸ் போடணும்னு. இல்லியா, நீயே போலீசுக்குப் போயி சார்ஜ் ஷீட் போட வெச்சி கேசை வாதாடி முடிக்கப் பாக்கணும். இது ரெண்டும் இல்லாம, அந்தம்மாக்கிட்ட காம்ப்ரமைஸ் பண்னிக்கிறதா இருந்தா அதையும் நீயேதான் பண்ணிக்கணும்னு. இந்த மூணுல உன் இஷ்டம் எதுவோ அதைச் செய்யினு எப்பையோ சொல்லிட்டேன். எதையுமே செய்யாம சும்மா சும்மா இதையே எத்தனை தடவை பேசிக்கிட்டு இருப்பே. 

இல்ல சார் 

போன தடவை பேசினப்ப டாக்டருக்கு அசிஸ்டெண்ட் வேலைக்கு இண்ட்டர்வியூ வந்திருக்குனு சொன்னே. ஊர்ப்பக்கம் யாருக்கும் தெரியாதுனு, கேஸ் இருக்கிற உண்மையை மறைச்சி, கவர்ன்மெண்ட் வேலைக்குப் போறதெல்லாம் என்னைக்கிருந்தாலும் சரியில்லே. அது தப்பு மட்டுமில்லே ஆபத்து. தெரியவந்து ஆக்‌ஷன் எடுத்தா டிஸ்மிஸ் பண்ணிருவாங்கன்னு தெளிவா சொன்னேன். போகவும் அந்த வேலௌக்குக் கிடைக்கப்போற சம்பளம் என்னவோ 15,000/- நீ இப்ப சம்பாரிக்கிறதே 45,000/- இன்னும் ரெண்டு வருசத்துல, இந்தக் காருக்கான லோனும் முடிஞ்சிரும். அடுத்த காரையே புது லோன்ல ஈசியா வாங்கிரலாம். என்னதான் கவர்மெண்ட் வேலைனாலும் இவ்ளோ ரிஸ்கெடுத்து,  வெறும் 15,000/-க்குப் போவணுமாங்கிறதை நீதான் முடிவு பண்ணிக்கணும்னு ஏற்கெனவே சொல்லிட்டேன்ல. 

ஆமா சார் அதான் மாமாவும் சொல்றாரு. 

அப்பறம் எதுக்குய்யா என்னைப் பாக்கணும்னு திரும்பத் திரும்ப அதையே பேசி என் உயிரை எடுக்கறே. இதப் பாரு. எவனுக்கோ அநியாயமா ஒரு கஷ்டம் வந்துதுனு கேள்விப்பட்டு உதவி செஞ்சதோட எங்க வேலை முடிஞ்சிது. அதுக்கப்பறம் நான் யாரோ நீ யாரோ. உனக்கு முதலீடு போட்டு ஒரு தொழில் ஏற்படுத்திக் குடுத்தா அதை வெச்சி முன்னுக்கு வரவேண்டியது உன் புத்திசாலித்தனம். கவர்மெண்ட்டு வேலை வேணும்னு உனக்குக் கெடந்து அடிச்சிக்கிதுனா போ. போய் அந்தம்மாக்கிட்டப் போய் மன்னிப்பு கேட்டு கேஸை வாபஸ் வாங்கிக்கோ. நானா குறுக்கால நிக்கிறேன். அதுக்கும் எனக்கும் என்னா சம்மந்தம். இல்லே உனக்கு துட்டு குடுக்காதேனு சொன்ன அந்த வக்கீலுக்கும் எனக்கும் என்ன பஞ்சாயத்து. நீயாச்சு உன் வாழ்க்கையாச்சு. உன் மேல கேஸ் போட்டு உன் வாழ்க்கையை நாசமாக்கின அந்தம்மா வாழ்க்கைல நல்லா செட்டிலாகி பெங்களூர்ல சவுக்கியமா இருக்கு. உனக்கு ஒதவியே செய்யக்கூடாது, எழுத்தாளக் கம்மனாட்டி பொய் சொல்றான்னு குஞ்சு கொட்டை தொண்டைக்கி ஏற காச்சு மூச்சுனு கத்தின வக்கீலு சொந்த பிளாட்டு வாங்கி சவுகரியமா செட்டிலாகியிருக்கான். நான் என் வேலையைப் பாத்துக்கிட்டு இருக்கேன். நீயும் ஒண்ணும் நாசமாப் போயிடலை நல்லாதான் இருக்கே. ஆனா இருக்கிறதை விட்டுட்டு நிலத்துக்கு அடில கிடக்கறதைப் பொறுக்க முடியிலையேனு வேதனைப் பட்டுக்கிட்டு இருக்கே. இதப் பாரு. எவன் லைஃபுலையும் எல்லாம் கிடைக்கிறதில்லை. எல்லார் வாழ்க்கையும் அத்திப்பழம்தான். புட்டுப்பாத்தா எத்தனைப் புழு நெளியுமோ எவனுக்குத் தெரியும். எனக்கு என்னல்லாம் கிடைக்கிலேனு உங்கிட்ட லிஸ்ட்டு போட்டுக்கிட்டு இருக்க முடியாது. உன்னை தத்தெடுத்து உன் வாழ்நாள் முழுக்க சுமக்கிறதும் என் வேலை கிடையாது. அடுத்தவன் அட்வைஸெல்லாம் வேலைக்காவாது. அவனவன் சொந்த புத்திதான் கடைசி வரைக்கும் சொறு போடும். நான் ஒன்னும் சமூக சேவை செய்யப் பிறவி எடுக்கலை. கடசீ வரைக்கும்  உன் கையைப் பிடிச்சி கடைத்தேத்திவிட. உன் மூஞ்சிம் என் மூஞ்சும் தெரியாதவன்லாம் உனக்குப் பணம் அனுப்பி இருக்கான். உனக்குக் காசு குடுத்தவங்க எல்லாம் வசதியா வாழ்ந்துக்கிட்டு இருக்கான்னு நினைக்காதே. அதுல ஒரு ஆளு ஜெர்மனில இருக்காரு. அவருக்கு வேலை இல்லாதப்பதான் உனக்காகப் பணம் குடுத்தாரு. இப்பையாச்சும் அவருக்கு வேலை கிடைச்சிதா இன்னும் கிடைக்கலியானுகூட எனக்குத் தெரியாது. இவங்க எல்லாரும் என்ன உன் வாழ்க்கைல ஷேர் ஹோல்டரா. எல்லாருக்கும் போன் பன்ணி கன்ஸல்ட் பண்ணிக்கிட்டு இருப்பியா சும்மா சும்மா. எதையும் எதிர்பார்த்து எவனும் உனக்கு உதவி செய்யலை. இருக்கிறதுலையே ஒர்ஸ்ட் விஷயம் என்ன தெரியுமா. எந்த முடிவும் எடுக்காம எல்லார் வாயையும் பார்த்துக்கிட்டு இருக்கிறது. அந்தம்மா ஒரு நிமிசம் எதையாச்சும் யோசிச்சிதா - என்னடா போலீஸ்ல இப்படிப் புகார் குடுத்தா பாவம் அந்தப் பையன் எதிர்காலம் என்னாகும்னு. சரியோ தப்போ எவன் வாழ்ந்தா என்னா எவன் செத்தா என்னா எனக்கு என்னா வேணும்ங்கிறதுல அந்தம்மா மாதிரி தெளிவா இருக்கிறாங்க பாரு அவங்கதான் இந்த உலகத்துல ஜெயிக்க முடியும். இனி எனக்கு போன் பண்ணாத. ஏன்னா உனக்கு உதவி செஞ்சவங்க, உன்னை அழிக்க நெனச்சவங்க, அழிக்க நெனச்சவங்களுக்கு உதவி செஞ்சவன்களுக்கெல்லாம் இருக்கிற மாதிரி, எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நான் வாழ்ந்தாகணும். உன் வாழ்க்கையை எப்படி வாழறதுங்கிறதை நீதான் முடிவு செய்யணும். உனக்கும் வயசு ஆவுதில்ல நீ என்ன பச்ச புள்ளையா ஒவ்வொண்ணையும் சொல்லிக்குடுக்க. இன்கம்டாக்ஸ்காரன் கேட்டான்னா, உன்னைக் காண்ட்டாக் பண்றேன். அப்ப உன் தம்பியைக் கையெழுத்துப் போடச் சொல்லு மத்தபடி இனி எனக்கு போன் பண்ணாதே. 

என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டேன். 

நியாயமாகப் பார்த்தால் இந்த மாதத்தில் கிடைத்திருக்கும் இறுதி ஓய்வு தினம் இன்று. நான் போட்டிருந்த திட்டப்படி, 31ஆம் தேதி கெடு கொடுக்கப்பட்டிருக்கும், புத்தகமாக வரவிருக்கும் கட்டுரையை இன்று எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் ஆவேசத்தில் அவனிடம் சாமியாடியது மட்டுமின்றி அதை கனகாரியமாய் இப்போது எழுதிப் போட்டிருக்கிறேன். நான் எதைச் செய்ய வேண்டும் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை என் வாழ்க்கை என்றைக்கு என்னைத் தீர்மானிக்க விட்டிருக்கிறது.