1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில் 64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.
சுந்தர ராமசாமியின் பள்ளம் கிரவுன் சைஸில் எத்தனைப் பக்கங்கள்.
நீ எங்கே சுந்தர ராமசாமி எங்கே.
நியாயமான கேள்விதான். எனக்கு அவரது நட்சத்திர அந்தஸ்து இல்லை என்பது உண்மைதான். ஆனால் இங்கே கேள்வி அதுவன்று. இலக்கிய வாசகனுக்குத் தரம் என்பது பக்க அளவைப் பொறுத்ததா என்பதுதான் கேள்வி. ஆம் என்றால் சுராகூட எஸ்.ராவின் முன்னால் எடை போடக் காணமாட்டார் என்பது உண்மை என்று ஆகிவிடும்.
எஸ்.ரா தமது நாவல் புத்தக லே அவுட்டில் 461 பக்கங்களைத் தாண்டிற்றா தாண்டிற்றா என்று அதை எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கையிலேயே பதிப்பாளரை தினந்தோறும் கேட்டு நச்சரித்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் கோணங்கியின் ஏதோ ஒரு நாவல் 460 பக்கமாம் அதைவிட தமது நாவல் ஒரு பக்கமேனும் கூட இருக்க வேண்டும் என்பது எஸ்.ராவின் இலக்கிய ஆவல்.
வாசகனின் அக்கறை புத்தகத்தின் உள்ளே இல்லை அதன் முதுகின் தடிமனில் இருக்கிறது என எஸ்.ரா ஜெயமோகன் சாரு ஆகிய இணைய மும்மூர்த்திகள் நம்புவது ஏன் என்பதற்கான அதிமுக்கிய இலக்கிய காரணம் இப்போதுதான் எனக்குப் புரிந்தது.
போதாக்குறைக்கு என் கதைகள் எல்லாம் சாருவின் இணைய தளப் பதிவுகள் போல வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிக் காணாமற் போவதும் இல்லை. எல்லாச் சனியனும் 2010லிருந்து அப்படியே இருந்துகொண்டுவேறு இருக்கின்றன. இந்த ஒன்பது கதைகளும்கூட இணையத்தின் பல்வேறு இடங்களிலும் இலவசமாகக் கிடக்கவேறு செய்கின்றன.
எனவே, எவரும் பதிப்பிக்க முன்வராத காரணத்தால் இவற்றை eBookஆகவும் அச்சுப் புத்தகமாகவும் ’தவிப்பு’ என்கிற தலைப்பில் நானே வெளியிட முடிவு செய்துள்ளேன். முதல் பதிப்பின் அச்சு ஆர்டர் 100 பிரதிகள் மட்டுமே. உங்களது வரவேற்பை வைத்தே அடுத்த பதிப்பான 100 பிரதிகள் அச்சிடப்படும்.
தொகுப்புக்குத் தவிப்பு எனப் பெயர் வைக்க விசேஷ காரணம் ஏதுமில்லை -இந்தத் தவிப்பு கதையை விகடன் காலச்சுவடு உயிர்மை ஆகிய வெகுஜன இலக்கிய, இலக்கிய வெகுஜன பத்திரிகைகள் பிரசுரிக்கத் தயங்கின அல்லது மறுத்தன என்பதைத் தவிர.
அவ்வளவு முக்கியமில்லாத மற்றொரு காரணம், அச்சுப் புத்தகத்துக்கான பதிப்பகங்களின் பொது அளவுகோலான, புத்தகம் என்றால் ஆகக் குறைந்தது 150 பக்கங்களாவது இருக்கவேண்டும் என்கிற அடிப்படை விதியை நிறைவு செய்ய, இன்னும் எழுதியாக வேண்டிய 8-9 கதைகளை எழுதி முடிக்க எனக்கு இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அல்லது அதுவரை நான் உயிருடன் இருப்பேனோ மாட்டேனோ என்கிற தவிப்புதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.