விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி எந்த எல்லைக்கும் போய்விடுகிறீர்கள், அதுவே உங்களுக்கான பலம் மற்றும் பலவீனம் என்று ரமேஷ் பிரேதன் பற்றிய பதிவிற்கு பேஸ்புக்கில் மறுமொழியிட்டிருந்தார் சித்ரா சம்பத் என்கிற பெண்மணி.
உண்மையில் சொல்லப்போனால், எனக்கு ரமேஷ் பிரேதன் மீதிருப்பது வருத்தம்தான். ஆனால் ஜெயமோகன் மீதிருப்பது கோபம்.
ஊர்கூடிக் கொடுத்த பணத்தைத் தொலைக்கப் பார்க்கிறாரே என்கிற பதற்றத்தினால் ரமேஷ் பிரேதன் மீது வருவது வருத்தம்தான் கோபமில்லை.
ஆனால் பப்ளிசிடிக்காகதான், தாம் ரமேஷ் பிரேதனுக்கு உதவுவதாக எங்கே ஊர் தூற்றிவிடுமோ என்று அச்சப்பட்டு தம் நண்பர்களை ஒருங்கிணைத்துத் தாம் செய்த உதவியை, வெளியுலகின் பார்வையிலிருந்து மறைத்ததன் காரணமாக, அந்த உதவி உருப்படாமல் போனதற்காக அவர் மீது வருத்தமில்லை, கோபம் வருகிறது.
ஜெயமோகனும் நண்பர்களும் எவ்வளவு தொகையை உதவியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல நாலரை லட்சம்.
இதைக் கேள்விப்பட்டபின்புதான், புதிரொன்று விடுபட்டது.
நம்மைப் போன்ற நாதியத்த பயல் சொல்லியே கிட்டத்தட்ட 1.5 லட்சம் திரண்டிருக்கையில், பெருமளவிலான வாசகர்களைக் கொண்டிருக்கும் ஜெயமோகனும் எஸ். ராமகிருஷ்ணனும் தங்களது தளத்தில் கேட்டுக்கொண்டும் வெறும் 1.27 லட்சம்தானா கிடைக்கும். இது எப்படி சாத்தியம் என்பதுதான் என் மண்டையைப் பிளந்துகொண்டிருந்த புதிர்.
பத்து லட்சம் என்று அறிவித்து எஸ். ராமகிருஷ்ணன் முன்னின்று பிரபஞ்சனுக்குத் திரட்டிக் கொடுத்த நிதி கிட்டத்தட்ட 11.5 லட்சம் பிரபஞ்சனை நேரில் சந்தித்து, வாசகர்கள் கொடுத்த நிதி இன்னும் சில லட்சங்கள். இது சமீபத்திய வரலாறு.
பிரபஞ்சன் பிரபலமானவர். அவரளவுக்கு ரமேஷ் பிரேதனை யாருக்குமே தெரியாது என்பது இந்தப் புதிருக்கான விடையில்லை. ஏனென்றால், eBookகுகள் அமேசானில் வெளியாகத் தொடங்கியபின்னரே ரமேஷ் பிரேதனை இணையத்தில் பலருக்கும் பரவலாகத் தெரியவே ஆரம்பித்தது என்பதுதான் அப்பட்டமான உண்மை.
இலக்கிய வாசகர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டில் வசிக்கிற டிவிஎஸ் கம்பெனி முதலாளிகளோ நல்லி குப்புசாமி செட்டிகளோ இல்லை. சிங்கப்பூரில் உபர் கால்டாக்ஸியை ஓட்டும் ஒரு வாசகர், ரமேஷ் பிரேதனுக்கு பிசியோதெரபிக்காக ஆகக்கூடிய செலவுக்காக, ஆறுமாதங்களுக்கு 2,000/- வீதம் தர முன்வந்து, முதல் 2000த்தைக் கொடுக்கவும் செய்துவிட்டார்.
நிச்சயமாகச் சொல்லலாம், குறிப்பாக ஜெயமோகன் வாசகர்கள் இந்த முறை ஜெயமோகன் சொல்லியும் இதில் இறங்கவில்லை. அதற்குக் காரணம் ஏற்கெனவே கொடுத்ததெல்லாம் விழலுக்கிறைத்த நீராயிற்று என்கிற கசப்பான உண்மைதான் மேற்குறிப்பிட்ட புதிருக்கான எளிய விடை.
ஜெயமோகனும் நண்பர்களும் கொடுத்த நாலரை லட்சத்தில், இப்போது ரமேஷ் பிரேதன் தங்கியிருக்கும் வீட்டிற்கு 1.5 லட்சம் போயிற்று. ஆனால் வாசக நண்பர்களுக்குச் சொல்லப்பட்டதோ 2 லட்சம் என்று. இனிய ஜெயத்தின் இனிய நண்பர்கள் பார்த்து லீசுக்குப் பேசி, பத்திரம் எழுதிமுடிக்கிற அளவில் ஹேர்ந்தெடுத்த வீடு இதுவன்று. இது ரமேஷ் பிரேதனின் தேர்வு. இது அவரது ரத்த சொந்தத்திற்குச் சொந்தமான வீடு. சமீபகாலம்வரை அந்த ரத்த சொந்தம் வாசக நண்பர்கள் போகும்போதெல்லாம் அரை லட்சத்தைக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. என்னைப்போன்ற எவரோ ஒருவர், சரி நீங்கள் கேட்கிற அந்த ஐம்பதாயிரத்தைக் கொடுக்கிறோம், நீங்கள் வாங்கிக்கொண்ட ஒன்றரை லட்சத்திற்கு, பத்திரம் எழுதிக்கொடுங்கள் என்றிருக்கிறார். ஆ என் ரத்த சொந்தத்தை சந்தேகிப்பதா என்று ரமேஷ் பிரேதனே உணர்ச்சிகரமாகி அதற்கும் முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறார். இதே ரத்த சொந்தம், ஜெயமோகனின் வாசகர்களாகிய நாங்கள் உதவ வரும் முன் இதே பாண்டிச்சேரியில்தானே இருந்தார்கள் என்று கேட்க முடியாதது அவர்களது பலவீனம். எழுத்தாளர்களெல்லாம் சட்டையைக் கிழித்துக்கொண்டு சண்டை போடுவார்கள், ஒருவருக்கொருவர் எங்கே பேசிக்கொள்ளப்போகிறார்கள், அதிலும் குறிப்பாக மாமல்லனுடன் எவன் பேசப்போகிறான் என்கிற தம் நினைப்பை பலம் என்று எண்ணுகிறார் பாவம் ரமேஷ் பிரேதன்.
இப்போது குடியிருக்கும் சொந்த ரத்தத்தின் வீட்டிற்குக் கொடுத்த 1.5 லட்சத்துக்கு ஆதாரமாக ஒரு துண்டுக் கடுதாசிகூட இன்றுவரை ரமேஷ் பிரேதனிடம் இல்லை. நாளையே காலிபண்ணச் சொன்னால் இந்த வீடும் கிடையாது 1.5 லட்சமும் கிடையாது என்பது எவ்வளவு அபாயகரமானது. எவனாவதொரு கேனைப்பயல் உண்டிகுலுக்க வராமலா போய்விடுவான் என்பது சித்தாந்தமா வேதாந்தமா எதில் சேர்த்தி.
ஒருவருக்கொருவர் எங்கே பேசிக்கொள்ளப்போகிறார்கள் என்கிற எண்ணத்திலோ என்னவோ, காணாமற்போன காசுக்கு, அயிட்டம் ரீதியாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஃபிகரைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் ரமேஷ் பிரேதன். ஆயுர்வேத மசாஜுக்கு ஆன செலவாக ஜெயமோகனிடம் கூறியது ஒரு லட்சம் ரூபாய். என்னிடம் சித்தவைத்திய செலவுக்காக 50,000/- டாக்டர் நண்பரிடம் 30,000/-
என்னிடம் கூறப்பட்டதெல்லாம் ஜெயமோகன் அளித்த உதவிநிதி இந்த வீட்டுக்கான இரண்டு லட்சம் ரூபாய் என்பதுதான். அது நாலரை லட்சம் என்பதே இன்றுதான் எனக்குத் தெரிய வந்தது. பொது உதவிகள் இப்படி சித்தவைத்திய ரகசியமாக இருப்பது, ரமேஷ் பிரேதனுக்கு மட்டுமல்ல உதவிசெய்யவேண்டும் என முன்வரும் நல்ல உள்ளங்களுக்கும் இழப்பு.
இப்படியெல்லாம் இருப்பவர்கள்தாம் கலைஞர்கள். என்னைப்போல எக்ஸெல் ஷீட்டில் எல்லாவற்றையும் எழுதி பிசிரே அடிக்கக்கூடாது என்று தலைமுடியைப் பிய்த்துக் கொள்பவர்கள் குமாஸ்தாக்கள்.
கலைஞர்களாவதற்கில்லை குமாஸ்தாக்கள் என்று, சரக்கடித்துக் கவிதயெழுதிவிட்டு குண்டித்துணி விலகியிருப்பதுகூடத் தெரியாமல் சாக்கடையோரம் விழுந்து கிடப்பவன் கவிஞன். இப்படி இருக்கிறது தமிழ் இலக்கிய உலகம்.
ரமேஷ் பிரேதனின் வாசகர்களால் கொடுக்கப்பட்ட பணமாகவே அது இருந்தாலும்கூட -அதைத் தம்முடையது என்று ரமேஷ் பிரேதன் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதைத் தம் மனம்போன போக்கில் செலவழிக்கலாம் / வீணாக்கலாம் / கரியாக்கலாம் என்று ஒருபோதும் அவர் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்துத் தவறான அணுகுமுறையுடன் தொலைக்கத் தலைப்பட்டால், அதைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஒருங்கிணைத்தவனையே சாரும். இதற்காக அவர் வருத்தப்படுவாரோ தம்மைத் தவறாக எண்ணிவிடுவாரோ என்று ஒருங்கிணைப்பவர் ஒருபோதும் கவலைப்படக்கூடாது. கவலைப்பட்டு, கவுரவ தொலைவை அனுசரிக்க முற்பட்டால், நாலரை லட்சம் மட்டுமல்ல நாப்பது லட்சமாகவே இருந்தாலும் இப்படித்தான் ஒரே வருடத்தில் காணாமல் போய்விடும்.
இதனால்தான் எனக்கு ஜெயமோகன் மீது கோபம்.
உதவியை ஒருங்கிணைத்தவனுக்கு, பணத்தைத் திரட்டுவதில் மட்டுமல்ல அந்தப் பணம் சரியாகச் செலவழிக்கப்படவேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கவேண்டும். அதற்காக, உதவியைப் பெற்றுக்கொண்ட நபரே, தன் மீது சேறடித்தாலும் கவலைப்படக்கூடாது.
பொதுக் காரணத்துக்காகத் திரட்டப்படும் நிதி, இதன் காரணமாகவே திரளத் திரள பொதுவெளியில் முன்வைக்கப்படவேண்டும். கொடுத்தவர்கள் யார் யார் என்பதை வெளியில் சொல்லத் தேவையில்லை. ஆனால் எவ்வளவு திரண்டது என்பதைத் தினமும் சொல்லிக்கொடிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் முக்கிய மைல் கற்களையேனும் பொதுவில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், பிரபஞ்சனுக்குத் திரட்டப்பட்ட நிதியைப்போல் ஐந்தைந்து லட்சங்களாக ஃபிக்ஸட் டெப்பாஸிட் ஆகி வாழ்நாளுக்கும் நன்மை பயக்கும். வாசகர்கள் தம்மீது காட்டிய அக்கறைக்கு, பிரபஞ்சன் கொடுத்த ஒத்துழைப்புதான் அவர்களுக்கான கவுரவிப்பு.
எஸ்.ரா ஜெயமோகன் தவிர, புத்தகம் வாங்குவதில்லை என்று குறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. ஆனால் எழுத்தாளனுக்கு ஒன்று என்றால் உதவத் தயங்குகிற வாசகன் அதைவிடக் குறைவு. எத்தனைப்பேர் திரண்டு வருகிறார்கள் என்பதற்கு ரமேஷ் பிரேதனே சிறந்த எடுத்துக்காட்டு.
ஆனால் தனக்கு உதவுபவர்கள் எல்லோருமே தம் வாசகர்கள் என எண்ணிக்கொள்வதைப்போன்ற அறிவீனம் வேறெதுவுமில்லை. புத்தகம் படிக்கிற பழக்கமே இல்லாத மனிதர்களெல்லாம் கூட மனிதாபிமானம் காரணமாகத் உதவ முன்வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை உணர்வதே முதிர்ச்சியின் அடையாளம்.
எனவே தனிமனிதர்களுக்குச் செய்யும் பொது உதவியைப் பொதுவில் வைப்போம். இது கணக்குக் காட்டச் சொல்வதன்று. கவனமாக இருக்கச்சொல்வது.