கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.
உணர்ச்சி வசப்படுவது பேதைமையில்லை. பேதைமை என்ற பரிதாபப்படுகிற ஸ்திதப் பிரக்ஞர்களைப் பற்றியும் நாங்கள் அப்பொழுது கவலைப்படவில்லை. மேலும், நாங்கள் சற்று அதிகமாக அவரைப் பற்றியே பேசியதற்குக் காரணம் ஒரு கோபம். ‘செக்சு’ கதைகளை எழுதி அவர் தீட்டுப் பட்டுவிட்டது போலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்துவிட்டதாகவும் சில விமர்சகர்கள் அந்தக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார்கள். கற்பிழந்து ‘அந்த’த் தெருவுக்குக் குடிபோய்விட்ட பெண் பிள்ளையைப் பற்றிப் பேசுவதுபோல் அவரைப்பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களோடு பல நாட்கள் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ‘இதைப் படிக்கிறபோது, தன் பெண்டாட்டியைப் பற்றி எழுதுகிறானோ என்று கவலைப்படுகிறார்களோ?’ என்று இயல்பான மெல்லிய குரலில் பதில் அடங்கிய கேள்வி ஒன்றை அவர் எங்களிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறது.
‘வீடு பெண்களுடைய சிம்மாசனம், அரண்மனை, ராஜ்யம். அங்கு அவள் இட்டது தான் சட்டம்’ என்று சொல்லி பெண்ணைச் ‘சக்தி’யாகச் செய்து, சுவாசினி பூஜைகள் செய்து தங்கச் சிறை ஒன்றை ஆண்கள் கட்டி வைத்திருப்பதாக நான் இரண்டுமுறை அவரிடம் சொல்லியிருக்கிறேன். பொருளாதார நிலை, விடுதலையின்மை, வெகு காலமாக விதித்து வைத்திருக்கிற பார்யா தர்மங்கள், படிப்பின்மை, நடுநடுவே இல்லத்தரசி என்ற முகமன்கள் – இந்த பம்மாத்து வித்தைகள் ஆண் - பெண் உறவைப் பற்றிய அடிப்படை உண்மைகளை எதிர்நோக்கும் பொழுது, நாக்குழறித் தடுமாறுகின்றன. இந்தத் தடுமாற்றங்களைத் தான் கு. ப. ரா. பல கோணங்களிலிருந்து பார்த்து, சூடனை நிறைந்த அந்தக் கலைச் சிறுகதைகளைப் படைத்தார். ‘இந்த அழுக்கெல்லாம் தான் இருக்கவே இருக்கே – இதைக் கதையில் வேற எழுதவேண்டுமா?’ என்று இன்று சொல்லுகிற வாதம்தான் அப்பொழுதும் எதிராக வந்து கொண்டிருந்தது. பதுங்கிக் கிடக்கிறதைக் கோடிகாட்டிச் சொன்னாலே, என்னமோ பெண்களுக்கு ‘இடம்’ கொடுத்து வேண்டாத துணிச்சலை உண்டு பண்ணுவதாக நினைப்பவர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அழுக்குக்குப் பூஜைபோடுவோரின் வாதம். புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதியார் கவிதையில் சொன்னதைத் தான், வேறு கோணங்களிலிருந்து ராஜகோபாலன் கதைகளில் சொன்னார். உண்மையை ‘சிறிது வெளிச்ச’த்தில்கூட நேராகப் பார்ப்பது எப்பொழுதுமே கவலை தருகிற அனுபவம்தான். யாரோ காட்டித் தொலைக்கிறான். வெசவாகக் கட்டிக் கொள்கிறான். ராஜகோபாலனும் கட்டிக் கொண்டார். வருத்தமும் பட்டார் – புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்களே என்று. அவர் பட்ட மனவேதனை தான் எங்கள் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் காரணம்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜகோபாலனின் இலக்கிய சாதனைகளை எடைபோட நான் இப்போது வரவில்லை. அவரைப்பற்றி ஏதாவது சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. காரணம், நினைவுகளின் பசுமை. மேலும், இப்பொழுதைய வாசகர்களுக்கு அவரைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும் என்ற துடிப்பு.
நாங்கள் ராஜகோபாலனோடு பழகியது அவருடைய கடைசி காலத்தில் தான். அதாவது ஒன்றரை வருடகாலம். 1942 கடைசியிலிருந்து 1944 ஏப்ரல்வரை. நாங்கள் என்று என்னையும் ‘கரிச்சான் குஞ்சு’வையும் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் சற்று அதிக காலம் பழகியவர்கள் சாலிவாஹனன், திருலோக சீதாராமன், அ. வெ. ர. கிருஷ்ண சாமி ரெட்டியார் ஆகியவர்கள். சிட்டி, பிச்சமூர்த்தி என்று அவரோடு வெகு காலமாக நெருக்கமாக இருந்தவர்கள் திருச்சியிலும், செட்டி குளத்திலும் இருந்தார்கள். இந்த ஒன்றரை வருடகாலம் பழகியதும் கும்பகோணத்தில். அப்பொழுது ராஜகோபாலன், கண் பார்வையே போய்விடும் நிலையிலிருந்து சிகிச்சையால் மீண்டு, கும்பகோணத்தில் வசித்து வந்தார். ‘கிராம ஊழியன்' ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு திருலோக சீதாராமன் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் நாங்கள் நேரில் பரிச்சயமானோம். அதற்குச் சில மாதகாலம் முன்பு என்ற ஞாபகம். நான் தற்செயலாக ஆனையடி கோவிலுக்கு முன் அவரை சந்தித்து நானாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனக்கு இருபத்திரண்டு வயது அப்பொழுது. ‘ஹீரோ வொர்ஷிப்’பில் ஈடுபட்டுள்ள இளைஞன் பாணியில்தான் பேசினேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர் கதைகளை வாசித்து ஏற்பட்ட பிரமிப்பையும், அதர்ப்பட்ட இலக்கிய உற்சாகத்தையும் பற்றிச் சொன்னேன். எல்லாம் மூன்று நிமிடங்களில் முடிந்துவிட்டது. ‘வீட்டுக்கு வாருங்களேன்’ என்று நேரம் சொன்னார். அன்று மாலை தொடங்கிய பேச்சு, நாள்தோறும் – இல்லை, இரவு தோறும் – சராசரி ஏழு மணி எட்டு மணி நேரம் என்று நடந்து கொண்டேயிருந்தது.
நான் அப்பொழுது பள்ளி ஆசிரிய வேலைக்குச் சென்னையில் பயின்றுவந்த சமயம். திரும்பி வந்ததும் கும்ப கோணத்தில் வேலை கிடைத்தது. கரிச்சான்குஞ்சு என்ற நாராயணசாமி அப்போது சென்னையில் தமிழாசிரியனாக இருந்தான். ராஜகோபாலன் கும்பகோணத்தில் இருப்பதை நினைத்து அவனும் சென்னை வேலையை விட்டுவிட்டு கும்பகோணத்திற்கு வந்தான். அந்த வேலை கூட ராஜகோபாலன் சொல்லிக் கிடைத்தது என்ற ஞாபகம்.
ராஜகோபாலனோடு வம்பு பேசமுடியாது. இலக்கியம் தான் பேசமுடியும். வம்புகூட இலக்கிய சம்பந்தமாகத்தான் இருக்கும். இலக்கியம் படைப்பவர்களின் குடும்பம், வரும்படி, தனி குணங்கள் – இவற்றைப் பற்றி இராது.
ராஜகோபாலன் வெற்றிலை, புகையிலை நிறையப் போடுவார். ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுத் தொடங்குகிற பேச்சு, நள்ளிரவு கடந்து, விடியற்காலை மூன்று மணி, நான்கு மணி வரை இழுத்துக் கொண்டே போகும். வெற்றிலை தீர்ந்துவிடவே, மூலையில் கிள்ளியெறிந்த வெற்றிலைக் காம்புகளை எடுத்து, அவற்றில் சுண்ணாம்பைப் பூசிப்போட்டுக் கொள்வார். எனக்குக் கலியாணம் ஆன புதிது அப்பொழுது. ஒரு சமயம் மேநாட்டு ஊராக இருந்திருந்தால், ஒரு நாளைப் பார்த்தாற்போல் விடியற்காலை நேரத்திலேயே வீடு திரும்பி வரும் காரணத்திற்காக விவாகரத்து வழக்குக்கூட நடந்திருக்கும்.
ராஜகோபாலன் நல்ல சிவப்பு, குள்ளம். மெலிந்த பூஞ்சை உடல். பூ மாதிரி இருப்பார். முழுசாக பத்து கிலோ எடை இருப்பாரா என்று சந்தேகம் வந்துவிடும். சாப்பாடுகூட, கொறிப்புதான். ‘இரண்டு இட்லி சாப்பிட்டேன்’ என்று இரண்டு விரல்களைக் காண்பித்து, கண்ணை அகட்டிக் கொண்டு சொல்லுவார் – ஏதோ இரண்டு பானை சோற்றைச் சாப்பிட்டதுபோல.
பல பெரியவர்களுக்குக் கிட்டுகிற ‘தனிப்பட்ட முக அமைப்பு அவருடையது. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்கு தடிக்கண்ணாடிகள். கண் சதையை அரிந்த பின்பு அணியும் பூதக்கண்ணாடி. அதற்குப் பின்னால் இரண்டு கண்களும் இரண்டு மடங்கு பெரிதாகத் தெரியும். சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். அவருடைய உடலில் பெரிதாக இருந்தது கண் ஒன்றுதான். உலகத்தைப் பார்ப்பதுதான் பிழைப்பு என்று சொல்வது போல அந்தக் கண்ணாடியும் கண்களைப் பெரிதாக்கிக் காட்டும்.
ராஜகோபாலனுக்கு தீவிரமாகச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. அது முகத்தில் தெரியும். எப்போது எழுதுவார் என்று எங்களுக்குத் தெரியாது. நட்ட நடு நிசிக்கு வெகு நேரத்திற்குப்பின் எங்களை அனுப்பிவிட்டுத்தான் அவர் எழுதியிருக்கவேண்டும். தீவிரமான சிந்தனையும், வேகமாக, குறுகிய நேரத்தில் செய்துவிடுவார் என்று தோன்றுகிறது. மறுநாள் இரவு சந்திக்கும்பொழுது, எழுதிவைத்ததை, கதையையோ, விமர்சனத்தையோ காண்பிப்பார். சிவாஜியைப்பற்றி அவர் தொடர்ச்சியாக எழுதியதை நான் அவ்வப்பொழுது துறையூருக்கு அனுப்புமுன் படித்திருக்கிறேன். அடித்தல், திருத்தலின்றி, ஒரு முடிவான உணர்வோடு எதையும் எழுதியிருப்பார். செட்டாக, தெளிவாக, எழுதியிருப்பார். சந்தேகமான, இப்படியா அப்படியா என்ற ஊசல் கிளப்பும் தோரணையில் அவர் எழுதியதில்லை. ஒரு நேர்மையும் துணிச்சலும் பளிச்சென்று தெரியும் எழுத்து. அந்த நேர்மையிலும் துணிச்சலிலும், சத்தம், ஆர்ப்பாட்டம் ஏதும் மருந்துக்குக்கூட தொனிக்காது. கண்டிப்பான, பட்டுத் தெளித்த எழுத்து. அதே சமயம் மென்மையும், கண்யமும், அடக்கமும் நிறைந்த எழுத்து.
அது அவருடைய இயல்பு. பேசுவதும் மிக மென்மையான பேச்சு. சற்று தள்ளி உட்கார்ந்தால் காதில் விழாது. அபிப்ராயங்களை அழுத்தமாக, உறுதியாகச் சொல்லுவார். நகைச்சுவையுடன் சொல்லுவார். புண்படுத்தாமல் சொல்லுவார்.
அவருடைய இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் அந்தக் காலத்தில் சோதனைகள்தாம். ஆனால் சோதனை செய்திருக்கிறேன் என்று அவர் சொல்லிக் கொண்டதில்லை. காரணம், நாமாக சங்கல்பம் செய்துகொண்டு வீம்புக்குச் சோதனை செய்யமுடியாது என்று அவர் உணர்ந்திருக்க வேண்டும். சோதனை தானாக இயங்குவது. பொருளும் உணர்வின் தனித்தன்மையும் நிர்ணயிக்கிற விஷயம் அது. சோதனைக்கு என்று சோதனை செய்வதில் அநேகமாக கெட்டிக்காரத்தனம் தான் ஓங்கியிருக்கிறதே தவிர, இயற்கைத் தன்மையும், ஓட்டமும் இருப்பதில்லை. இதற்கு விலக்குகள் இருக்கலாம். ஆனால் ஊறுகாயையே முழுச்சாப்பாடாக யாரும் சாப்பிடுவதில்லை. அதனால் அதுபற்றிக் கவலையில்லை.
சத்தப்படுத்தாமல், பறையடித்துக் கொள்ளாமல் அவர் செய்த சோதனைகள் அவருடைய பல சிறுகதைகளில் காணப்படுகின்றன. உருவம், உள்ளடக்கம் என்று தனியாக அவர் பிரிக்கவில்லை. உள்ளடக்கமே உருவத்தை நிர்ணயிக்கும் என்று அவர் நினைத்ததால் அவருடைய சோதனைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்த முழுமையாகவே இருந்தன. உணர்ச்சியின் தீவிரத் தன்மையும் இணைந்திருந்ததால் அவருடைய படைப்புகள் ஒரு முழுமையுடன் விளங்குகின்றன. கதைகளின் கருத்துகளில் கூட, அவர் செய்ததைப்போல, பின்பு வந்த யாரும் அவ்வளவு துணிவுடனும், கலை நுணுக்கத்துடனும் செய்யவில்லை. அவருடைய கதைகளையும், பின்பு வந்த கதைகளையும் ஒப்பிட்டு ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை நன்கு புலனாகும்.
தீவிரமான உணர்ச்சி முனைப்பு இருந்ததால் அவருடைய கதைகளில் ஒரு தர்க்க ரீதியான முடிவும் திருப்தியும் காணப்பட்டன. ‘கதை எழுதும்போது உரிய இடத்தில் பேனா தானாக நின்று விட வேண்டும்’ என்று அவர் எளிதாக இதைச் சொல்லுகிற வழக்கம்.
எந்த உண்மையான கலைஞனும் தன் படைப்பைப்பற்றி ஒரு அதிருப்தியோடு தான் வாழ்கிறான். அது பூர்ணமாக ராஜகோபாலனிடம் இருந்தது. பிள்ளையார் செய்யத் தொடங்கி, குரங்காக முடிந்து, பிறகு அதையே ‘சோதனை செய்தேன்’ என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக அவர் சொன்னதில்லை. நேர்மையும், கண்யமும் அவரிடம் சற்று அளவுக்கு மீறியே இருந்தன. சில சமயம் ஒரு சின்ன காந்திபோல அவர் எனக்குத் தோற்றமளிப்பதுண்டு. இதற்குக் காரணம் தெரியவில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லாரையுமே காந்தி சகாப்தம் பாதித்துத்தான் இருந்தது. பண்பளவுக்கு ராஜகோபாலனை அது பாதித்திருந்தது என்று, கண்டிப்பு, தைரியம், மென்மை, பொறுமை, தன்னடக்கம், நட்பு, எளிமை, அன்பு – இத்தனையும் கலந்த அவருடைய இயல்பைக்கண்டு சொல்லத் தோன்றுகிறது.
எங்களைப் போன்ற வேறு இளைஞர்கள் அவரிடம் வருவார்கள். எழுதிய கதைகளைக் காண்பிப்போம். பொறுமையாக வாசித்துவிட்டு, விளக்குவார். உண்மையை, மென்மையாகப்படும்படி சொல்லுவார். ஏனடா பேனா பிடித்தோம் என்று கிணற்றை நாடும் நிராசையை ஏற்படுத்தியதில்லை. தம் நண்பர்கள், தம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, மூன்றாம் தரங்களை ஒப்பிலாத சோதனைகள், புது பாணிகள், இடியம்கள், என்று மனசாரப் பொய்யும் சொன்னதில்லை. ஒரு இலக்கிய சீனியருக்கு இந்தக் காருண்ய பாவம் தேவையா என்று வேறு சீனியர்கள் கேட்கலாம். கேட்கட்டும். நான் ஏதோ ஒரு மனிதருடைய சுபாவத்தைப் பற்றிச் சொல்லிவைக்கிறேன்.
நல்ல இலக்கிய கர்த்தராக மட்டுமின்றி, நல்ல மனிதராகவும் ராஜகோபாலன் வாழ்ந்தார் என்று சொல்லத்தான் இத்தனை பாடு. இரண்டு அம்சங்களிலும் அவரிடம் நேர்மை இருந்தது. ‘எனக்கு இலக்கிய நேர்மையே போதும், மனித நேர்மை தேவையில்லை, இரண்டு நேர்மைகளும் வெவ்வேறு’ என்று கீதோபதேசம் செய்ய அவருக்கு அவசியமோ, சந்தர்ப்பமோ எழவில்லை. ராஜகோபாலன் அந்த அளவில் அதிர்ஷ்டக்காரர்தான்.
ராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை. அது நிறைவேற மறுத்துக் கொண்டேயிருக்கிறது. அவருடைய எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப்போன்ற சொற்களிலும், பத்து பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும் உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்! இந்தப் தொகுப்பிலேயே உள்ள ‘மூன்று உள்ளங்கள்’, ‘படுத்த படுக்கையில்’, ‘சிறிது வெளிச்சம்', ‘தாயாரின் திருப்தி’ – இவைகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது, ஒரு பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனை சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறார் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்கும், வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், கார்வைகள்! எழுதியதைவிட எழுதாமல் கழித்ததே முக்கால்வாசி என்று தோன்றுகிறது. ஆடம்பரம் இல்லாத எளிய சொற்களுக்குக்கூட, உணர்ச்சி முனைப்பாலும், ஒரு கூட்டுச் சக்தியாலும் ஒரு புதிய பொருளும் வேகமும் கிடைக்கின்றன. சாதாரணச் சொற்களுக்குக் கூட ஒரு புதிய வீர்யத்தை ஏற்றிய பாரதியின் வெற்றிதான், ராஜகோபாலனின் கதைச் சொற்கள் கண்டிருக்கின்றன. அதனாலேயே சத்தமில்லாத வேகமும், சிக்கனமும் கைகூடி அவர் கதைகள் அடர்த்தியும், இறுக்கமும் நிறைந்த சிற்ப வெற்றிகளாகத் திகழ்கின்றன. இத்தனை வெற்றிகள் திணித்த கதைகளை தமிழில் யாரும் இதுவரை இன்னும் எழுதவில்லை. உண்மையாகவே மெளனங்கள் நிறைந்த சிறு கதைகளை அவர் ஒருவர்தான் எழுதியிருக்கிறார்.
சளசளப்பும், சப்த ஜாலங்களும், எதோ பெரிதாகச் சொல்லப் போவதுபோல மிரட்டுகிற மூடுமந்திரச் சொற்பிரயோகங்களும், முழுமையில்லாத தோல்வி மூளிகளை உள் மனச் சோதனைகளாகச் சப்பைக்கட்டு கட்டும் முடவெறியும் காதைத் துளைக்கிற காலத்தில் ராஜகோபாலனின் எழுத்தின் தெளிவும், அமைதியான வீர்யமும் தன்னம்பிக்கையும் சிறு பிரவாகமாக எங்கோ சலசலத்துக் கொண்டிருப்பதை இப்பொழுதைய வாசகர்களை போய்ப் பார்க்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. கோபம் கொண்ட இளைஞர்கள் என்ற இங்கிலீஷ் சொற்கட்டு ஒன்று அடிக்கடி கேட்கிறது. வயதுக்கும், கோபத்துக்கும் சம்பந்தமேயில்லை. ராஜகோபாலன் எழுதியதும் கோபக்கார இளைஞனின் எழுத்துத்தான். 42 வயதில் செத்துப் போகாமல் இன்று அவர் இருந்திருந்தால், அதேகோபக்கார இளைஞனாகத் தான் இருந்திருப்பார். ஆனால் மேலும் மேலும் மெருகேறிய கலைச் சிற்பங்களைப் படைத்துக் கொண்டே இருந்திருப்பார். தவம் நிறைந்தவர்கள் தான் கலைக்கோபிகளாக இருக்க முடியும். ராஜகோபாலன் தவம் நிறைந்த கலைக்கோபி. அறுபத்து ஐந்து வயதிலும் அவருடையகோப இளமை நீடித்திருக்கும்.
நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்று ஞாபகம் வருகிறது. கடைசி காலத்தில் கு. ப. ரா. ஏதோ ‘நீர்த்து’ப் போய்விட்டார் என்றும், வளர்ச்சி குறைந்து விட்டார் என்றும் சிலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் கூடச் சொன்னார்கள். இந்தத் தொகுதியில் உள்ள கதைகளே அந்தக் கூற்றின் அறிவீனத்தை எடுத்துக் காட்டும். கடைசி காலத்தில் முதிர்ச்சி பெறாத இளைஞர்களே அவரைச் சூழ்ந்திருந்தார்கள் என்றும், அதனால்தான் அவர் தேங்கிவிட்டார் என்றும் ஒருவர் அந்த வாதத்திற்கு விளக்கம் தந்தார். முதிர்ச்சிக்கும், வயதிளமைக்கும் தொடர்பில்லை. ராஜகோபாலன் தாமும் வளர்ந்து, சூழ்ந்துள்ள இளைஞர்களையும் வளர்த்துக் கொண்டிருந்தார். கலைஞன் ஒவ்வொரு நிமிஷமும் சூழ்நிலையைப் பார்த்துப் பூரித்து உண்டு வளர்ந்து கொண்டேயிருப்பான். பத்துப் பதினைந்து வயது குறைந்தவர்களோடு பழகிக்கொண்டிருப்பதால் மழுங்கிவிடுவதில்லை. உலகில் எந்த உண்மைக் கலைஞனும் இப்படிச் சூம்பிப் போனதில்லை. அவனுக்குப் போஷாக்கு அவனுடைய இதயத்தின் ரகசிய ஊற்றுக்களிலிருந்து சுரந்துகொண்டே தானிருக்கிறது.
மே, 1969ல் வாசகர் வட்டம், சென்னை - 17 வெளியிட்ட சிறிது வெளிச்சம் புத்தகத்தில் கு. ப. ராஜகோபாலனுக்கு தி. ஜானகிராமன் எழுதிய அஞ்சலி.
நன்றி: போட்டோக்களை word filae ஆக ஆக்கிக்கொடுத்து உதவியவர், சரவணன் - மதுரை