01 December 2021

எக்ஸ்டர்னல் ட்ரைவ்

ஹலோ வெஸ்டர்ன் டிஜிட்டல் 1.5 TB எக்ஸ்டர்னல் ட்ரைவ் இருக்கா 

1.5 கம்பெனில வரதில்ல ஒண்ணு இருக்கு ரெண்டு இருக்கு. 

அமேஸான்ல 1.5 இருக்கே. 

அது சர்வீஸ்டு கம்பெனிது இல்லே. 

ரிஃபர்பிஷ்ட்டுனா சொல்றீங்க. 

ஆமா. 

பெஸண்ட்நகரிலிருந்தே பழக்கப்பட்ட அடையார் மெர்ஸி குரல். என்ன இப்படிச் சொல்கிறார் என்று அமேஸான் லிங்க்கில் இருக்கும் வெஸ்டர்ன் டிஜிட்டல் சைட்டுக்குப் போனேன். அங்கு 1.5 இருந்தது. அதன் லிங்கை அழுத்தினால் அமேஸானுக்குக் கூட்டிவந்தது. 

ஆர்டர் பண்ணிவிடலாம் என்று பார்த்தால் டெலிவரி 4ஆம் தேதி. அடப் போங்கையா என்று இன்னும் கொஞ்சம் அமேஸானுக்கு வெளியில் தேடினால் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்தது. நாவலூர் கடைக்கு அடிக்கலாம் என்றால் அது எதோ ஆல் இண்டியா நம்பரைக் காட்டிற்று. அடப் போங்கடா என்று கைலியிலிருந்து பர்முடாஸுக்கு மாறி பைக் எடுத்துப் பறந்தால். 1.5 தொங்கிக்கொண்டு இருந்தது. 

எவ்ளோ. 

அட்டையில் 4,499 என்று இருந்தது. கிளிப்பிள்ளை போல் சீருடைப் பையன் அதையே சொன்னான். 

இல்லையே. உங்க சைட்லையே 4,199 தானே போட்டிருந்துது. 

இருங்க சார் கேக்கறேன் என்று கல்லாவுக்குப் போனான். சுத்து முத்தும் பார்த்தால் பர்ஸுக்கு ஆபத்து. அத்தனைக்கும் ஆசைப்படு என்றவன் என்ன எனக்கு மாமனாரா. எல்லாவற்றின் மீதும் எனக்கும் ஆசை உண்டுதான். ஆசைப்பட்டால் நாந்தானே அவிழ்க்கவேண்டும்.

போனவன் கவுன்ட்டரில் ஐக்கியமாகிவிட்டான். 

அங்கே போய் என்ன விலை என்றால்வேறொருவன் 4,499 என்றான். 

உங்க சைட்லையே 4,199தான போட்டிருக்கு என்று மொபைலை நீட்டினேன். 

அதான் செக் பண்றோம் சார். போன மாச ரேட்டு அது. ஆஃபர் இன்னும் இருக்கானு பாக்கறோம். 

(வெப்ஸைட்டே அவுட் டேட்டடா) என்ன. 

ஒன் மினிட் சார்.

(ரிலையன்ஸ் ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் 300 ரூபாய் கம்மி. வீட்டுக்கே வேறு டெலிவரி. நேரில் வந்தால் மொளகாய் அரைக்கிறார்களா. என்னடா இது என்று) திரும்ப என்ன ஆச்சு என்றேன். 

அதே ரேட் சார். 

எவ்ளோ. 

4,199/- 

நம்பர் சார்.

நம்பர்லாம் குடுக்க முடியாது SMS அனுப்பியே கொன்றுவீங்க.

ஓடி வந்து APFSஆக ஃபார்மேட் பண்ணி போட்டோ லைப்ரரியை மாற்றியதும் - kaali idam 10 GB என காட்டிக் கலவரப்படுத்திக்கொண்டிருந்த 128 Macbook Air 60 ஜிபி என காட்டி ஆசுவாசப்படுத்திற்று. 

இதுதான் முதல் எக்ஸ்டர்னல் ட்ரைவா.

இல்லை இரண்டாவது. 

முதலாவதில் இடம் இல்லையா.

இல்லை. அது ExFATல் இருக்கிற 1 TB. காலகாலமாக சேர்ந்து கிடக்கும் இசையும் போட்டோக்களும் ஃபைல்களுமாக 300 ஜிபிக்கு மேல் இருக்கும். அதை ஆப்பிள் ஃபைல் சிஸ்டத்திற்கு ஃபார்மேட் பண்ணினால் இருக்கிற டேட்டா போய்விடும். APFSக்கு மாற்றாவிட்டால் Mac போட்டோ லைப்ரரி க்ளவ்டில் உட்காராது. வேறு வழியேயில்லை என்பதால் தான் இதை வாங்கினேன். நான் ஊதாரியா. 

அவரவர் தேர்வு. இதில் அடுத்தவர் சொல்ல என்ன இருக்கிறது. வாழ்வையே சுயதேர்வின்படி வாழ முடிந்தால் பெரிய அதிர்ஷ்டம்தான். 

ஆக என்னை சுயநலவாதி என்கிறீர்கள். 

அப்படியில்லை... 

உண்மைதான். நான் வாழ்வது என் மகிழ்ச்சிக்காக மட்டுமே. இதைச் சொல்லிக்கொள்வதில் எனக்குத் துளியும் வெட்கமோ கூச்சமோ தயக்கமோ இல்லை. ஏனெனில் இவையெல்லாம் அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதிலிருந்து பிறப்பவை. என்னிலேயே பிறந்து என்னிலேயே முடிபவன் நான். ஆனால் இந்த வாழ்க்கையேஇரவலாகக் கிடைத்இருக்கும் எக்ஸ்டர்னல் ட்ரைவ் என்றல்லவா சொல்லிவைத்திருக்கிறார்கள் பெரியவர்கள். 

ஆமாம் 

அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுநம் வேலையைப் பார்க்கப் போகலாம் வா. எதைவிடவும் இந்த 'ட்ரைவ்'தான் முக்கியம் என்று படுகிறது எனக்கு.

 https://amzn.to/3lqQbeV