சரசரவென ஓடுகிற எழுத்து என பொதுவாக எல்லோராலும் - எதிரிகள் உட்பட - ஒப்புக்கொள்ளப்பட்டவராகத் தாம் அறியப்பட்டிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்பவர் சாரு.
‘எக்ஸிஸ்ட்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ என்கிற 170 பக்க நாவலில் இருந்து, சாம்பிளுக்கு 91, 92ஆம் பக்கங்களில் இருக்கும் ஒரு பாராவை மட்டும் எடுத்துக்கொண்டு சரசரப்பு என்ன லட்சனத்தில் இருக்கிறது என்று பார்ப்போம்.
எழுதப்பட்டிருக்கும் விஷயத்தின் தரத்திற்குள் நான் நுழையவேயில்லை. அது உலகத்துக்கே தெரிந்ததுதானே. எனவே, எழுதப்பட்டிருக்கும் ‘விதம்’ பற்றியும் அதிலுள்ள கோளாறுகளையும் அபத்தங்களையும் பார்ப்போம்.
மேலே குறிப்பிட்டிருக்கும் பத்தியை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன், படித்துவிடுங்கள்.
//மற்ற பையன்களிடமிருந்து விலகி சூர்யா தனித்துப் போனதற்கு மற்றொரு காரணமாயிருந்தவன் தனபால். சூர்யா ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது சூர்யா வீட்டிற்கு வந்திருந்தான் தனபால். இரவில் சூர்யாவின் பக்கத்தில் படுத்திருந்தவன் அவன் பிறப்புறுப்புடன் விளையாடினான். ஒரு புதுவிதமான இன்ப அனுபவத்தைத் தந்த அந்த விளையாட்டை தனபால் ஊருக்குக் கிளம்பிச் சென்ற பிறகும் விளையாடினான் சூர்யா. விளையாட்டின்போது யாரும் பார்த்துவிடாதிருக்கும் பொருட்டு தனிமையான இடங்களைத் தேடிப்போனான். ரங்கையன் மடத்துக் குளத்தைத்தாண்டி கருவேலங்காட்டின் நடுவிலிருந்த பாழடைந்த பிள்ளையார் கோயில் வசதியாயிருந்தது. எந்த வழிகளும் இல்லாமல் கருவேல மரங்களால் அடர்த்தியாகச் சூழப்பட்டிருந்தது கோயில். பொதுவாக அந்த ஊரே கருவேல மரங்களால்தான் சூழப்பட்டிருந்தது என்று சொல்லவேண்டும். இந்தக் கருவேல மரங்களும் பேய்களும் இருக்கிறவரை இந்த ஊர் உருப்படவே போவதில்லை என்று சொன்னார்கள் வயதானவர்கள். ஏதோ மந்திரத்தால் நடப்பது போல்தான் கருவேல மரங்கள் நாளுக்கு நாள் அசுர வேகத்துடன் ஊருக்குள் பரவிக்கொண்டிருந்தன. ஆனால் இந்த மரங்களால் ஊர் மக்களுக்கு ஒரு வசதியும் ஏற்பட்டது. கோடை காலத்தில் மரங்களை வெட்டிக் காயவைத்து மழைக்காலத்தில் அடுப்பெரிக்கப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த மரங்கள் நாட்டுக் கருவேல மர வகையைச் சேர்ந்ததென்பதால் மரக்கிளைகள் கணக்கற்ற முட்களுடனும் குச்சி குச்சியாகவும் இருந்ததால் விறகுக் கட்டைகளாகத் தேறாமல் முதலில் கிளைகளை வெட்டி பிறகு ஓரடி நீளக் குச்சிகளாக வெட்டிக் காய வைத்து கட்டுகளாகக் கட்டி வைத்துக்கொள்ளும்படியாகவே இருந்தன. கருவேல மரங்களுக்கிடையே புகுந்து முட்கள் உடம்பைக் கிழித்ததையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த பாம்புப் புற்றுகளையும் தாண்டிக்கொண்டு அடிக்கடி அந்தப் பிள்ளையார் கோவிலுக்குப் போனான் சூர்யா. தெரு ஜனங்களிடமும் அம்மாவிடமும் பிள்ளையார் கோயிலைச் சூழ்ந்திருந்த பகுதியில் பாம்புப் புற்றுகள் மண்டிக்கிடப்பதைச் சொல்லி அவர்கள் அந்தக் காட்டை அழித்து விடாமல் பார்த்துக் கொண்டான் சூர்யா. கோயிலில் கிடந்த பாம்புச்சட்டைகளைக் கண்டு பயந்தானானாலும் அந்த விளையாட்டின் இன்ப சுகம் மரண பயத்தையும் மீறியதாக இருந்ததால் மீண்டும் மீண்டும் அங்கே சென்று கொண்டிருந்தான் சூர்யா. ஒரு நாள் இந்தக் கோயிலில் விளையாடிக்கொண்டிருந்த போது இரண்டு நல்ல பாம்புகள் உக்கிரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது. நடுங்கிப்போய் இதற்கு மேலும் இங்கு வருவதற்குத் துணிச்சலின்றி வேறோர் இடத்தைக் கண்டுபிடித்தான் சூர்யா - சுடுகாட்டில் பேய்களின் நடமாட்டத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை. பகலில் உச்சி மணி வெயில் தவிர மற்ற நேரங்களில் பேய்கள் சக்தியை இழந்து போயிருக்கும் என்று அம்மாச்சி சொல்லியிருந்ததால் அதை நினைத்து மனதைத் தேற்றிக்கொண்டான் சூர்யா. ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து ஒருநாள் சுடுகாட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆட்டம் முடியும் தறுவாயில் உறுப்பிலிருந்து ஒருவித திரவம் வெளிப்பட்டதைக் கண்டு பயந்து போனான் சூர்யா. அதற்குப் பிறகு சில நாட்கள் விளையாட்டை நிறுத்திவைத்தான்.//
ஐந்தாம் வகுப்பில், அதாவது பத்து வயதில் கையடிப்பது அறிமுகமாகி, தொடர்ந்து அதில் ஈடுபட்டு நான்கைந்து வருடங்களில் திரவம் வடிய ‘பெரியவனாகிவிடுகிற’ பகுதி இது.
எழுதப்பட்டிருப்பது ஒரே பத்தி. அதில் பேசப்படுகிற ஒரே பாத்திரம் சூர்யா. வாசகனை மடையன் என எண்ணிக்கொண்டு, அவனுக்குப் புரியாது என - 279 சொற்களில் இருக்கும் இதில் 11 முறை சூர்யா சூர்யா என்று எழுதி வைத்து எரிச்சலூட்டுவதுதான் ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட் என்று அடிமைகளால் கொண்டாடப்படுகிறது. பாவம் இவ்வளவு அடிமடையர்களா இவரது வாசகர்கள்.
போகட்டும்.
//சூர்யா ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது சூர்யா வீட்டிற்கு வந்திருந்தான் தனபால்.//
ஒரு வாக்கியத்தில் ஒரே வார்த்தையைத் திரும்பப் பயன்படுத்துவது, எழுதுகிறவனுக்கு மொழியின் மீதான ஆளுகையின்மையின் ஆதாரம். மொழிவளமின்மையின் இளிப்பு. மொழி கூடப்பெறாததன் சான்று.
70 வயதை நெருங்கும் பூட்ட கேஸுக்காக இதைச் சொல்லவில்லை. எழுத வருகிற இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். சரி இதை எப்படித்தான் எழுதுவது என்கிறீர்களா.
சூர்யா ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அந்த ஆண்டு கோடை விடுமுறையின் போதுசூர்யா(வின்) வீட்டிற்கு வந்திருந்தான் தனபால்.
இப்படியும் எழுதலாம் அல்லது
சூர்யா ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது அந்த ஆண்டு கோடை விடுமுறையில் சூர்யா(வின்) வீட்டிற்கு வந்திருந்தான் தனபால்.
என்றும் எழுதலாம். எப்படி எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்பதை எழுதுகிறவனே தீர்மானிக்கவேண்டும். கொசகொசவென்று எழுதாமல் இருக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தாலே போதும். அனிச்சையாக, மொழி செம்மைப்படத் தொடங்கிவிடும்.
//ஒரு புதுவிதமான இன்ப அனுபவத்தைத் தந்த அந்த விளையாட்டை தனபால் ஊருக்குக் கிளம்பிச் சென்ற பிறகும் விளையாடினான் சூர்யா.//
சாருவை மட்டுமின்றி, இப்போது எழுதிக்கொண்டிருக்கிற பெரும்பாலான எழுத்தாளர்களைப் படுத்துகிற சொல்லொன்று தமிழில் உண்டென்றால் அது இந்த ‘ஒரு’தான் என்று தீர்மானமாகக் கூறிவிடலாம். தேவையே இல்லாமல் கண்ட இடத்திலும் ஒரு போட்டுக்கொண்டு இருப்பது ‘ஒரு’ வியாதி போல இன்றைய தமிழில் பரவிக்கிடக்கிறது.
//விளையாட்டின்போது யாரும் பார்த்துவிடாதிருக்கும் பொருட்டு தனிமையான இடங்களைத் தேடிப்போனான்.//
யாரும் பார்த்துவிடாதிருக்கும் பொருட்டு - ‘கையடிப்பது’ ஏதோ அவனுடைய தனித்துவமான செயல் போலவும் எல்லோரும், எல்லோரும் பார்க்கக் கையடித்துக்கொண்டு இருப்பதைப் போலவும் இந்த வாசக ஊட்டல் எதற்கு. படிக்கிற அத்தனைப்பேரும் கடந்து வந்த, காலாகாலமாகச் செய்துகொண்டு இருந்த, சொல்லாமலே புரியக்கூடிய விஷயம்தானே. வாசக மூளைக்கு வேலையே வைக்காமல் அதை வளரவே விடாமல் எல்லாவற்றையும் பிட்டுப் பிட்டு வைத்து எழுதுவது மொக்கைகளிடம் பேமஸாக எளிய வழி.
சொல்லாமல் விட்டு, வாசக மனம் எழுதிக்கொள்ள தாராளமாக இடம் கொடுப்பது இலக்கியத்தின் அடிப்படை. சாருவுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்று நான் திரும்பத் திரும்பச் சொல்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
எல்லோராலும் படிக்க முடிகிறவராக சாரு இருப்பதற்கு, ‘செக்ஸ் ரைட்டர்’ என்பதல்ல, அவர் எழுத்தில், எழுதியிருப்பதைத் தாண்டி, யோசிக்க எதுவுமே இல்லை என்பதுதான் முதன்மையான காரணம்.
//இந்த மரங்களால் ஊர் மக்களுக்கு ஒரு வசதியும் ஏற்பட்டது.//
என்று ஆரம்பித்துவிட்டு
//மரக்கிளைகள் கணக்கற்ற முட்களுடனும் குச்சி குச்சியாகவும் இருந்ததால் விறகுக் கட்டைகளாகத் தேறாமல்//
என்று போவதையெல்லாம் படித்தால் விகடன் குமுதம் வாசகன் கூட ஆசனவாயால் சிரிக்கமாட்டானா. ஆனால், இதையெல்லாம் அற்புதம் என்று கொண்டாடுகிற வாசக புத்திரன்கள் வாய்க்கவும் அவர்களால் ஞானத்தகப்பன் என்றுகொண்டாடப்படவும் சாரு எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும்.
//முதலில் கிளைகளை வெட்டி பிறகு ஓரடி நீளக் குச்சிகளாக வெட்டிக் காய வைத்து//
மொழியறிவற்ற வெட்டி – என்பதைத் தவிர வேறென்ன சொல்வது.
இதை வேறு எப்படித்தான் எழுதுவது.
இதே சொற்றொடரில் இதற்கு முன்பாக என்ன சொன்னார்.
//மரக்கிளைகள் கணக்கற்ற முட்களுடனும் குச்சி குச்சியாகவும் இருந்ததால் விறகுக் கட்டைகளாகத் தேறாமல்//
நீங்களாக இருந்தால் குச்சியை அரிவாளால் வெட்டுவீர்களா அல்லது கையால் ஒடிப்பீர்களா. நடுமரத்தில் இருந்து ஆரம்பிக்கிற இடத்தில் கிளை தடியாக இருக்கும் எனவே அங்கே வெட்டி என்று போட்டால் சரி. குச்சியைப் போய் என்ன வெட்டிக்கொண்டு.
நீளக் குச்சிகளாக ஒடித்துக் காயவைத்து என்று எழுதிவிட்டுப் போகலாமே.
எழுதுதைப் பார்க்க மனக்கண் இல்லாதவன் எழுத்தாளனே இல்லை. அத்தனைக் கோளாறுகளுக்கும் அடைப்படைக் காரணம் மனக்கண் இன்மைதான்.
//கோடை காலத்தில் மரங்களை வெட்டிக் காயவைத்து மழைக்காலத்தில் அடுப்பெரிக்கப் பயன்படுத்திக்கொண்டார்கள்.//
இதில் எதாவது புது விஷயம் இருக்கிறதா. எல்லோருக்கும் தெரிந்த, சொல்லாமலே புரிகிற, அவசியமே இல்லாத இதை ஏன் எழுதவெண்டும். இது டிரான்ஸ்க்ரஸிவ் ரைட்டிங்கா இல்லை பக்கங்களைக் கூட்ட மொக்கைகளுக்குக் கைவந்த டெக்னிக்கா.
//இந்த மரங்கள் நாட்டுக் கருவேல மர வகையைச் //
என்ன மொழி இது. மொழி பற்றிய அறிவுள்ளவன்
இவை நாட்டுக் கருவேல மர வகையைச் சேர்ந்தவை என்பதால் - என்றல்லவா எழுதுவான்.
மரங்கள் என்று சொல்லிவிட்டு,
//மரக்கிளைகள் கணக்கற்ற முட்களுடனும் குச்சி குச்சியாகவும் இருந்ததால் விறகுக் கட்டைகளாகத் தேறாமல்//
என்று விவரிப்பதைப் பார்த்தால் கருவேலச் செடிகளைப் போலல்லவா இருக்கிறது
சீமைக் கருவேலச் செடிகளைத்தான் நாட்டுக் கருவேல மரம் என்று எழுதிவைத்திருக்கிறாரோ என்னவோ.
சூர்யா சிறுவனாக இருந்தது, நாகப்பட்டிணத்தில் இருக்கும் வெளிபாளையம். அங்கே பார்த்ததைத்தான் எழுதியிருக்கிறான் என்றால். சாருவைப் போலவே அவனுக்கும் பாவம் ‘பார்வையே’ இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
//கருவேல மரங்களுக்கிடையே புகுந்து முட்கள் உடம்பைக் கிழித்ததையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த பாம்புப் புற்றுகளையும் தாண்டிக்கொண்டு//
முட்களைவிட பாம்புப் புற்றுகள்தாமே சிறுவனை பயமுறுத்துபவையாக இருக்கும். முள் குத்துவதை விரித்து எழுதிவிட்டு பாம்பைத் தாண்டிப்போவதெல்லாம் அசாத்திய துணிச்சலால் வருவதில்லை. வளர்ந்த எழுத்தாளன் பழையபடி சிறுவனாகக் ‘கூடுபாய’ இயலாமையின் விளைவன்றி வேறில்லை.. மனதால் பாத்திரமாக மாறி வாழ்வதென்பது இலக்கியத்தின் முக்கியமான கூறு.
இலக்கியம் சாருவுக்கு இந்த ஜென்மத்தில் சாத்தியமேயில்லை. அவரால் முடிவதெல்லாம் தான் செய்த அத்தனை அயோக்கியத்தனங்களையும் எதாவது கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி, தான் அதுவல்ல என பொய்யாய் புனைந்து, தானும் எழுத்தாளன் என்று ஜம்பமாகத் திரிந்துகொண்டு இருப்பதுதான். தன் வாழ்வை அதன் சகல கூறுகளோடும் அப்பட்டமாக முன்வைப்பது, நல்ல எழுத்தாளர்களிலேயே பலருக்கும் சாத்தியமற்ற காரியம். புனைவென ஆகிவிட்டால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே. எல்லோரும் புனைவு புனைவு என்று போய் ஒளிந்துகொள்வதே இதனால்தான். அதிலும் கலப்படமற்ற அசல் பொய்யினால் தயாரிக்கப்பட்ட சாருவிடம் போய் சத்தியத்தை எதிர்பார்ப்பது நம் அறிவீனம். சாருவுக்கு விருதுகொடுத்து கெளரவிப்பதெல்லாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியான ஜெயமோகனுக்கு மட்டுமே சாத்தியம்.
//தெரு ஜனங்களிடமும் அம்மாவிடமும் பிள்ளையார் கோயிலைச் சூழ்ந்திருந்த பகுதியில் பாம்புப் புற்றுகள் மண்டிக்கிடப்பதைச் சொல்லி அவர்கள் அந்தக் காட்டை அழித்து விடாமல் பார்த்துக் கொண்டான் சூர்யா.//
என்ன எழுதுகிறோம் என்பதைத் தெரிந்து எழுதுபவனால் இப்படி அபத்தமாக எழுதமுடியுமா.
பத்து வயதுப் பையன் சொல்லிதான் தெரு ஜனங்களுக்கும் அம்மாவுக்கும் பாம்புப் புற்றுகள் மண்டிக்கிடப்பது தெரியவேண்டுமா. பெரியவர்கள்தாமே சிறுவர்களிடம் அங்கே பாம்புப் புற்றுகள் இருக்கின்றன அந்தப் பக்கம் போகாதே என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்லித்தானே பையனுக்கு பாம்புப் புற்றுகள் அங்கு இருப்பதே தெரியவந்திருக்கும். இல்லை சிறுவனென்ன சாரு போல ஞானத்தகப்பனாகவே பிறந்தவனா.
இதிலிருக்கும் உச்சகட்ட அபத்தமே,
//பாம்புப் புற்றுகள் மண்டிக்கிடப்பதைச் சொல்லி அவர்கள் அந்தக் காட்டை அழித்து விடாமல் பார்த்துக் கொண்டான் சூர்யா.//
என்பதுதான்.
தெரு ஜனங்களும் அம்மாவும் பத்துவயதுச் சிறுவன் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்துகொள்ள – எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு, விஷ்ணுபுரம் குழுமத்தில் சாருவை, சாருவின் நடவடிக்கைகளை, சாருவின் எழுத்தையெல்லாம் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, விருது கொடுத்து, ஆசான் ஆணையிட்டதும், உப்புப் போட்டுத் தின்பதையே மறந்துவிட்டு அப்படியே யூடர்ன் அடித்து சாருவைப் பாராட்டுவதற்கு - அவர்களென்ன ஜெயமோகனின் சீடர்களா.
நடக்கக்கூடியதை எழுதுவதற்கு பதில், சொல்ல வந்த கையடிக்குத் தோதாய் இட்டுக்கட்டி எழுத முனைந்தால், இப்படித்தான் கேனத்தனமாய் இருக்கும். இதுதான் வெகுஜன எழுத்து. இன்று இலக்கியம் கமர்சியல் என்று தனித்தனியாக இல்லாமல் எழுதுவதெல்லாம் இலக்கியமாகப் பார்க்கப்படுவதற்கு சாருவைப் போன்ற இலக்கியபோதமற்ற மொக்கைகளே முழுமுதற்காரணம்.
//இதற்கு மேலும் இங்கு வருவதற்குத் துணிச்சலின்றி//
இதுவரை எழுத்துநடை தூரப்பார்வையில்தானே,
//அடிக்கடி அந்தப் பிள்ளையார் கோவிலுக்குப் போனான் சூர்யா.//
போய்க்கொண்டு இருந்தது. அதன்படி அதன்போக்கில்,
‘அதற்கு மேலும் அங்கு போவதற்குத் துணிச்சலின்றி’
என்றுதானே தொடர்ந்திருக்கவேண்டும்.
திடீரென ஏன் ‘இதற்கு இங்கு வருவதற்கு’ என தடம்புரண்டு, திரும்ப எழுந்து பழைய தண்டவாளத்தில் போகிறது.
எழுத்தும் வாழ்வும் வேறுவேறல்ல. வாழ்க்கையில் அடிக்கிற அந்தர்பல்ட்டிகள் எழுத்தையும் இப்படித்தான் அனிச்சையாக பாதிக்கும்.