பச்சையப்பாஸில் படித்த காலத்திலேயே எந்த ஆசிரியரையும் சார் சொல்லி விளித்ததில்லை.
வகுப்பிற்குப் போனால்தானே சார் ஐயா எல்லாம் சொல்ல. பஸ் பிடித்துப் படிக்கட்டில் நின்றபடி தவறாமல் தினமும் கல்லூரிக்குச் சென்றுவிடுபவன் தவறியும் வகுப்பிற்குள் நுழைந்ததில்லை. டிகிரி இறுதி வருடம் படிக்கும்போதே படிப்பை விட்டுவிடலாமா என்று தோன்றியது. ஒற்றைக் காலில் நின்று அப்பாவிடம் அடம்பிடித்து, தமிழ்தான் படிப்பேன், அதையும் அண்ணா படித்த பச்சையப்பாஸில்தான் படிப்பேன் என்று சேர்ந்த தமிழ் இலக்கியம். இரண்டாம் வருடத்திலேயே நவீன இலக்கியம் நாடகம் என்று தெரிய வந்ததில் படிப்பே பிரச்சனையாகிவிட்டது. சொந்தமாக யோசிக்கத் தொடங்கினாலே பிரச்சனைதான். எங்கு போனாலும் பிரச்சனை எதைத் தொட்டாலும் பிரச்சனை.
அப்பாவிடம் அடி வாங்கி அடி வாங்கி வலி குறித்த பயம் போய்விட்டது. அடிப்பதே பயப்பட வேண்டும் என்பதற்காகதான். பயத்திலேயே அடக்கி வைத்திருக்கவேண்டும் என்பதற்காகத்தான். அப்பா முதல் அதிகாரிகள் வரை எல்லோருமே அடிக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவே அடிக்கிறார்கள். அவர்கள் சொல்படி வாழவேண்டும் என்பதற்காகவே அடிக்கிறார்கள். அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காகவே திருப்பி அடிக்க முடியாவிட்டாலும் எவர் சொல்படியும் வாழக்கூடாது என்கிற வைராக்கியம் பிஞ்சிலேயே முளைகட்டத் தொடங்கிவிட்டது. ஐந்தாம் வகுப்பில் போட்ட பாரதியார் வேஷம் மனதில் தங்கிப் போயிற்று. நீயென்ன சொல்வது நானென்ன கேட்பது.