மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது.
அதை அசோகமித்திரன் அத்தனை தத்ரூபமாக கையில் பட்ட எண்ணெய்ப் பிசுபிசுப்பை காலின் ஆடுதசையில் தேய்த்துக்கொண்டு சாவியை எடுத்தான் என்று எழுதியிருப்பார்.
இது, இவ்வளவு விவரணை வெகுஜன பத்திரிகைக்குத் தேவையில்லாததாகத் தோன்றும். அவர்களுடைய வாசகனுக்கும் போரடிக்கக்கூடும். ஆனால் கதையில் நுட்பமாக - துருத்திக்கொண்டிருக்கும் பருப்புகளுக்கு இடையில் மினுக்கிக்கொண்டிருக்கும் எண்ணெய் மினுமினுப்பு – என்பது போல வர்ணித்து எழுதுவது, இலக்கியம் படிக்கிறவன் மனதில் எப்போதோ அவன் விரல்களில் பட்ட சூட்டையும் எண்ணெய் வாசனையையும் நினைவுபடுத்தி, கதையுடன் ஒன்ற வைக்கும். கதை என்பது வெறும் சம்பவமோ நிகழ்வுகளின் கோர்வையோ அன்று. உயிர்ப்புடன், அப்போது அறுத்த மாம்பழக் கதுப்புபோல வாழ்வின் துண்டமாக என்றென்றும் இருந்துகொண்டிருக்கவேண்டியது.
சுந்தர ராமசாமி, அகிலனுக்கு ஞானபீடம் கொடுக்கப்பட்டதற்கு எதிராக எழுதியிருக்கும் போலி முகங்கள் கட்டுரையில் வெகுஜன எழுத்திற்கும் இலக்கியத்திற்கும் இருக்கிற வித்தியாசத்தை எவ்வளவு தெளிவாக சொல்லியிருப்பார்.