பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து பதிப்பக முன்னொட்டோடு அறியப்படவிருந்த வசந்தகுமார், வளைவும் நெளிவுமாக ஓவிய எழுத்துக்கள் போல கைப்பட எழுதி, பைண்ட் செய்து, அட்டையில் கூட ஓவியம் வரைந்து, உச்சிவெயில் என்கிற குறுநாவலை உலகின் ஒற்றைப் பதிப்புப் புத்தகமாக அவனிடம் கொடுத்து கணையாழி போட்டிக்குச் சேர்த்துவிடும்படி சொன்னான்.
கொடுக்கும்போது, ‘வேணும்னா படிச்சிப் பாத்துட்டுக் குடுப்பா’ என்று சொல்லியிருந்தான் என்றாலும் போட்டியில் தானும் பங்கு பெறுவதால் படித்துப் பார்ப்பது முறையில்லை என்று பிரித்துக்கூடப் பார்க்காமல், பஸ்பாஸ் இருப்பதால், திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழிக்கு நேரில் போய் கொடுத்துவிட்டு வந்தான்.
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அவனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் கூட வசந்தகுமார் பெயர் இல்லை. அவனைப் பார்க்க நேர்ந்தபோது, தன்னிடம் பிரதி இல்லை. அது திரும்பக் கிடைக்குமா என்று கேட்டான். இவன் கணையாழியில் போய் கேட்டுப்பார்த்தான். தேடிப் பார்த்து வைப்பதாய்க் கூறிவிட்டனர். பின்னர் போய்க் கேட்டபோது இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
கணையாழியில் கதை தொலைவதென்பது சர்வசாதாரணம். அதற்கு முந்தைய வருடம் அவன் கதை தொலைந்து போயிருந்தது.