ஏஓ பணத்தை நீட்டினார்.
அப்பாவோடதுனு என்னென்ன கடன் பாக்கி இருக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மீந்தா குடுங்க. எதுவும் இல்லேன்னான்னாலும் பரவாயில்லே. சம்பளமே எனக்கு ஜாஸ்தி.
தம்பீ என்றார் செகரெட்டரி. அம்மாவைப் போல மளுக்கென அவர் கண்களில் நீ கோர்த்துக்கொண்டது.
இல்லைங்க, அப்பாவுக்கு எதோ கையெழுத்துப் போட்டதா சொல்லி ஒருத்தர் சுடுகாட்டுக்கே வந்திருந்தாரு. அவருக்குக் குடுக்கவேண்டியதை எடுத்துக்கிட்டீங்களா.
ராகவனைச் சொல்றீங்களா. சொசைட்டில, ராகவன் உங்க அப்பாவோட ஷ்யூரிட்டி. அவருக்குக் குடுக்கவேண்டியதுனு எதுவுமில்லே. உங்க அப்பா சொசைட்டிக்குக் கட்டவேண்டிய கடன் பாக்கிதான். அதெல்லாம் பிடிச்சிண்டுட்டோம். இதுல் ஒரு கையெழுத்த மட்டும் போடுங்கோ.
எதோ ஒண்ணு. குடுத்துட்டு அப்பறம் கேக்காதீங்க. நான் பணத்தையே பாக்காதவன். பிடிச்சுக்க விட்டுப்போச்சுனு திரும்பக் கேட்டா எங்கிட்ட இருக்காது. செலவழிச்சுடுவேன் என்று, ஜோக் அடித்துவிட்டதாக எண்ணிச் சிரித்தபடியே, கையெழுத்துப் போட்டுவிட்டு, ரூபாய்களை வாங்கி நீண்ட ஜிப்பா பையில் திணிக்கப்போனான்.
எண்ணிப் பாத்துடுங்கோ.
50 ரூபாய் நோட்டுக்களை பத்து எண்ணுவதற்குள், நீங்க எண்ணிட்டீங்க இல்லையா என்றான்.
நாங்க எண்ணிட்டோம். எதுக்கும் நீங்க ஒருதடவை எண்ணிடுங்கோ. அதுதான் சரி.
எல்லாம் சரியாதான் இருக்கும். இவ்வளவு ரூபா நோட்டை ஒண்ணா சேத்து நான் பாத்ததே இல்லே. எண்ண கை வலிக்கிது என்றபடி நோட்டுக்களை ஜீன்ஸ் பேண்ட்டில் வைத்துக்கொண்டான். சொல்லும்போதே அவனுக்குத் தொண்டை இடறிற்று.
வேற்றுக் கிரகவாசியைப் போல் ஏஓவும் செக்கரெட்டரியும் அவனையே வாய்பிளந்து பார்த்துக்கொண்டு இருப்பது ஓரக்கண்ணில் தெரியவே, கூச்சத்தில், விட்டால் போதும் என்று வேர்க்க விறுவிறுக்க அறையை விட்டு வெளியேறினான்.