எழுத்தில் மட்டும் என்றில்லாமல் எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. தான் எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்.
அன்று மாலை டிரைவின் போய் சைக்கிளைப் பூட்டிவிட்டு உள்ளே சென்று செல்ஃப் சர்வீஸில் உட்கார்ந்ததும் எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜனிடம் அவன் கேட்ட முதல் கேள்வியே டிவி எவ்ளோ ஆகும் என்பதுதான்.
அவனோ கூரையைப் பார்த்து புகையை ஊதிக்கொண்டிருந்தான். பதில் சொன்னதென்னவோ, அவன் அருகே அமர்ந்திருந்த ரங்கன் துரைராஜ்தான்.
சொல்லு. இன்னைக்கு சொன்னா நாளைக்கு வீட்ல இருக்கும். நம்ம ஃப்ரெண்டுதான் சோழாவரத்துல ப்ளூபெல் டிவி மேனஃபேக்சர் பண்றான்.
எவ்ளோ ஆகும்.
அட நீ என்னப்பா. சும்மா ஆயர்ரூபா குடு. மீதிய அப்பறம் பாத்துக்கலாம். டிவியோட ஸ்டீரியோ டேப் ரெக்கார்டரும் சேத்து அனுப்பிடச் சொல்லிடறேன்.
என்ன டிவி. பேரென்ன சொன்னீங்க
புளூபெல்
கல்லூரிக்கு வேஷ்டியில் வந்து அவன் பார்த்த முதல் மாணவர் தமிழரசன்தான். தமிழரசன் அப்போதே குடியாத்தத்தில் எம்பிக்கோ எம் எல் ஏவுக்கோ நிற்க முயன்று கிடைக்காது போகவே அடுத்த தேர்தல் வரை சும்மா இருப்பதற்கு, அதற்குள் ஒரு எம்ஏவை படித்துவைக்கலாமே என்று வந்தவராக இருக்கவேண்டும். வேட்டி நுனியை ஒரு கையிலும் மறு கையை அவன் தோளிலும் போட்டுக்கொண்டு தலையை சாய்த்துகொண்டு கல்லூரி வராந்தாவில் நடந்து வருகையில் ஒருமுறை அவர் சொன்னார்:
நம்பள இப்ப எதுர இருந்து பாக்கறவனுக்கு பிளாக் அண்ட் ஒய்ட் படம் பாக்கறமாதிரியே இருக்குமில்ல.