அது இலை. இது இல்லை என்று அவன் வாழ்க்கை பூராவும் ஒரே இல்லாத பாட்டம்தான். எல்லோருக்கும் தன்னால் வரக்கூடிய பேச்சே, அவனுக்கு மூன்று வயதுவரை வரவில்லை. ஆ ஊ என்று எல்லாவற்றுக்கும் சைகை பாஷைதான். காந்தா பாய் பாட்டி சோளிங்கர் நரசிம்மருக்கு மணி கட்டுவதாக வேண்டிக்கொண்டதற்குப் பிறகுதான், அவனுக்குப் பேச்சு வந்ததாகச் சொல்லுவாள் அம்மா.
திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் கட்டைத் தொட்டிக்கு அடுத்திருந்த கதவில் இருந்து, ஒற்றையடிப் பாதைபோல் கிளம்பி நெடுகப் போய், தட்டி கட்டிய ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கெல்லாம் புகுந்து புகுந்து பார்த்தசாரதி கோவிலின் கிழக்குக் குளக்கரைத் தெருவை அடைகிற அந்தப் பெரிய வளாகத்தில், அகண்ட வாவிக்குப் பக்கத்தில், முன்னால் பெரிய பலாமரம் இருந்த, மரத்தாலான மாடியும் வீட்டிற்கு உள்ளேயே மரப்படிகளும் இருந்த ரெண்ட் கண்ட்ரோல் வீட்டில் இருந்தபோது, ஆறு வயதில் டைஃபாய்டில் விழுந்து எழுந்ததன் காரணமாகக் கொஞ்சநாள் திருவல்லிக்கேணி சுபத்ராள் தெரு பாட்டி வீட்டில் இருக்க நேர்ந்தது.
அந்த பதினைந்து இருபது நாட்களில் கற்றுக்கொண்ட மராட்டிதான் அப்பா போனபிறகும் வீட்டு மொழியாய் தொடர்ந்துகொண்டு இருந்தது. அந்த வீட்டில் அதற்கப்புறம் தாத்தாவு அப்பாவைத் திட்டி வெளியே துரத்தியதுதான் அவனுடைய அறிமுகக் கதையாகி கல்கியில் கடந்த வருடம் வெளியாகியிருந்தது.