அடுத்து வந்த நாட்கள், தினந்தோறும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அங்கே எதுவுமே இல்லாமல் எப்போதும்போல இருட்டு மொட்டையாகத்தான் இருக்கப்போகிறது அவன் வீட்டு மொட்டைமாடி என்பதை உறுதிப்படுத்தின.
அவன், தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டு இருப்பதைப்போல, பிறரைவிட, குறிப்பாக அம்மாவையும் அப்பாவையும்விட அப்படியொன்றும் புத்திசாலியோ சூட்டிகையானவனோ இல்லை, கடைந்தெடுத்த அசடு என்கிற உண்மையை ஒரே வாரத்தில் அப்பட்டமாக நிரூபித்துவிட்டிருந்தது, அந்த டிவி விவகாரம்.
0
என்னடா எப்பிட்ரா இருக்கே என்றான், உஸ்மான் ரோடில் துரைசாமி சாலையைக் கடக்கும்போது எதிர்பட்ட கிறிஸ்டோபர்.
நல்லா இருக்கேன். உன்னைத்தான் டிரைவ் இன் பக்கமே காணம்.
கொஞ்சம் வேலை. என்னடா பட்டுனு பணத்தை எடுத்துக் குடுத்துட்டே.
அந்தாள் சரியில்லேன்னு நீயாவது சொல்லியிருக்கலாமில்ல என்றான். அவனுக்கே தான் ரொம்பப் பரிதாபமாகச் சொல்வதைப்போலப்பட்டது.
ஏண்டா, சொல்ல எங்கடா நேரம் இருந்துது. நீ சொளையா ஆயிரம் ரூபாயை எடுத்துக் குடுக்கப்போறேன்னு யாருக்குடா தெரியும்.
ப்ச். என் பணமா இருந்தாலும் பரவாயில்ல. அம்மாவோட பணம்.
அடப்பாவி என்று இவனைவிட கிறிஸ்டோபர் சோகமாகிவிட்டான். அதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியாமல் நின்ற இருவரையும் லட்சியமே செய்யாமல் இடித்துத் தள்ளிக்கொண்டு போய்க்கொண்டு இருந்தது மாலை நேர தியாகராய நகர் கும்பல்.
ஆபீஸ் அத்தியாயம் 18 புகை