கீழ் வீட்டு மாமா சொன்னது போல தம்பையா ரொம்ப கைராசிக்காரர்தான் போல. இரண்டே நாட்களில் வீக்கம் வடிந்து எப்போதும் போல கால்களில் நரம்புகள் தெரியத்தொடங்கிவிட்டிருந்தன. ரணமாகிக்கிடந்த காயமும் நன்றாகக் காயத்தொடங்கி பொறுக்குத்தட்ட ஆரம்பித்திருந்தது.
தோல் செருப்பு போடவேண்டாம் என்று சொல்லியிருந்தார் தம்பையா. அப்பாவே ரப்பர் செருப்புதான். நானெல்லாம் காலேஜ் போக ஆரம்பிக்கிறவரை செருப்பே போட்டதில்லை என்று சொல்லத் தோன்றியது.
சாக்ஸ் போடுங்க. நைலான் சாக்ஸ் பொடக்கூடாது. காட்டன் தான் போடணும். அதுவும் கலர் சாக்ஸ் போடக்கூடாது. வெள்ளைதான் போடணும். ஷூ போடாதீங்க. சாக்ஸ் போட்டு காத்து போறா மாதிரி அந்த மாதிரி மூடினா மாதிரி இருக்கற தோல் செருப்பு கூடப் போடலாம் என்று யார் காலையோ காட்டிக் கூறியிருந்தார்.
வெள்ளை சாக்ஸ் போட்டு ரப்பர் செருப்பைப் போட்டால் விரலில்லாமல் சர்ச் வாசலில் அலுமினியத் தட்டுடன் உட்கார்ந்து பிச்சையெடுப்பவர்களைப் போல அல்லவா இருக்கும். இதெல்லாம் நடக்கிற காரியமா. அதுவும் இது ஏசி காதுக்குப் போனால் எவ்வளவு பெரிய கேவலம். கக்கூசில் சிரித்த காட்டான்களைப் போல ஆபீஸே கைதட்டிச் சிரிக்குமே.
அடுத்த நாள் சிவரூபனிடம் கேட்டான்.
கலர்னு வந்தாலே கெமிக்கல் வந்துடுது இல்லையா. வெள்ளை காட்டன்ல கெமிக்கலுக்கே இடமில்லையே. அதான் சொல்றாரு. சும்மாவா சொல்றோம் அந்தாள ஜீனியஸ்னு.