நாலும் தெரிய ஆரம்பித்த பின், எதையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் குறுக்குவெட்டாக அறுத்து யோசிக்கும் புத்தியும் வந்த பிறகு,
பார்ட்டிகளில் கிடைக்கும் இனிப்பை வீட்டுக்குக் கொண்டுவருவதற்குக் காரணம் அன்போ பாசமோ அல்ல, கையில் வருகிற மொத்தத்தையும் குதிரை ரேசில் விட்டுவிட்டு, சம்பளத் தேதியன்று ஒரு ஸ்வீட்கூட வாங்கிவரத் துப்பில்லை என்று அடி வாங்கி அரற்றும் அம்மாவின் வாயை அடைக்கக் கடைப்பிடிக்கும் குயுக்தி என்பது பிடிபடத் தொடங்கிற்று. சுருட்டிப் பொட்டலமாகக் கொண்டுவர எப்போதுமே பார்ட்டிகளில் கொடுக்கப்படும் பேப்பரை அப்படியே பயன்படுத்துகிறாரே அந்த அளவிற்கா நமக்கு அறிவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று உள்ளூர சிரித்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அதற்குப் பிறகு, சினிமா போவதற்கான காசுக்காக, அவர் படித்துவிட்டு சுவரோரம் அடுக்கிவைக்கும் இந்து பேப்பரை, மாட்டிக்கொள்ளாமல் திருடுவதில் நூதனத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்த காட்சி கண்முன்னே தோன்றவும் ஃபுட்போர்டில் நின்றபடி வீசும் எதிர்க்காற்றில் தலை கலைய வாய்விட்டுச் சிரித்தான். நன்றாகத்தானே இருந்தான் பாவம் என்று கண்டக்டர் அவனை வினோதமாகப் பார்த்தான்.