கல்கியில் வந்தது போக, அவனுடைய சிறுகதைகள், கணையாழி, கவனம் பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகி, இலக்கியச் சிறுவட்டத்திற்குள் அவனுடையதும் ஒரு பெயர் என்று ஆகத் தொடங்கியிருந்தது.
அப்பா இறந்து போனாலும் எதிர்காலம் பிரகாசமாகவே இருப்பதாகத் தோன்றியது.
இனி, தான்தான் அவனுக்கு டீ வாங்கித் தந்தாகவேண்டும் என்று விளையாட்டாய்கூட ரமேஷ் சொல்லமாட்டான். அவனுக்கே, என்னவாக இருக்கப்போகிறது என்று தெரியாதிருந்த அவனுடைய எதிர்காலம் திடீரென பிரகாசமாகிவிட்டதற்கு அடிப்படைக் காரணமே அவன் அப்பா இறந்து போனதுதான் என்று சொல்லவேண்டும்.
ஆனால், கலை இலக்கியம் போலவே, வாழ்க்கையிலும் - சந்தோஷமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் - மெலோ டிராமாவிற்கு இடமில்லை என்றே அவன் எண்ணினான். என்ன கஷ்டம் வந்தாலும் கதவை மூடிக்கொண்டுகூட வாய்விட்டுக் கதறுவத்தையோ, சொந்த கஷ்டத்தைப் பொதுவெளியில் கண்ணீரும் கம்பலையுமாக்கி அடுத்தவரின் அனுதாபத்தை யாசித்துப் பெறுவதையோ ஒருபோதும் செய்யக்கூடாது - அதைவிட திருடுவது ஆயிரம் மடங்கு மேல் என்பதில் அவன் சிறு வயதிலிருந்தே உறுதியாக இருந்தான். நம்மால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையும் எதற்காகவும் கவலைப்பட்டு மனதை இழந்துவிடாத வைராக்கியமுமே தன்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கிறது என்று அவன் திடமாக நம்பினான்.